ஒரு நாள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அவரது குருநாதர் பாலச்சந்தர் அவர்களிடம் இருந்து ஒரு போன் வந்தது.
“ரஜினி, நான் ஒரு ஹிந்தி படம் ஒன்னு ரீசண்ட்டா பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்தது. அதை தமிழ்ல ரீமேக் பண்ணலாம்னு இருக்கேன். நீதான் ஹீரோ. இது ஒரு காமெடி சப்ஜெக்ட். அடுத்த வாரம் சூட்டிங். ரெடியா இரு” என்றார் பாலச்சந்தர்.
எதிர்முனையில் சற்று பதறிய ரஜினி, “சார், என்னை வச்சி காமெடி படமா? எனக்கு காமெடியெல்லாம் வராது சார்” என்றார்.
அதற்கு பாலச்சந்தர் சற்று கோபமாக ”யோவ், நீ மொதல்ல சூட்டிங் வாயா. உனக்கு காமெடி வருமா வராதான்னு நான் சொல்றேன்” என்று சொல்லி போனை வைத்தார்.
அப்படி ரஜினிக்கே நம்பிக்கை இல்லாமல் சூட்டிங் வந்து, டைரக்டர் சொல்வது போல் நடித்து, பின்பு தனக்கும் காமெடி வரும் என்று அந்தப் படத்தின் மிக பெரிய வெற்றியைப் பார்த்து தெரிந்து கொண்டார் தலைவர். அந்தப் படம் தான் ‘தில்லு முல்லு’.
‘அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்’. இது தான் இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் அவர்களின் கதாபாத்திர பெயர்.
படத்தின் ஆரம்பத்திலேயே தலைவர் ”நீங்க ஒரு வித்யாசமான ரஜினியைப் பாக்க போறீங்க” என்று சொல்லும் போதே தெரிந்துவிடும் இது ரஜினி படம் அல்ல, பாலச்சந்தரின் படம் என்று.
ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்திற்கு மிக,மிக அவசியமானது இரண்டு. ஒன்று ஃபேஸ் எக்ஸ்ப்ரசன், மற்றொன்று பாடி லாங்வேஜ்.
இந்த இரண்டும் சரியான கலவையில் கலந்தால், நகைச்சுவையில் மிக எளிதாக ஜெயித்துவிடலாம். இந்தக் கலவை ரஜினியிடம் மிக அழகாக கலந்திருக்கிறது.
மீசையோடு இருப்பவர் சந்திரன், மீசை இல்லாதவர் இந்திரன் என்று ரஜினி பண்ணும் கலாட்டா, செம ஜோர்.
சாந்தமான சந்திரன், அல்டாப் பேர்வழி இந்திரன் என்று தலைவர் கலக்குகிறார்.
அதுவும் இந்திரனாக ரஜினி, தேங்காய் ஸ்ரீனிவாசன் வீட்டில் நுழையும்போது வீட்டுக் கேட்டை தன் காலால் ஒரு தள்ளு தள்ளுவார் பாருங்கள், அது தலைவர் ஸ்டைல்.
ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியாக வரும் தேங்காய் ஸ்ரீனிவாசன் தான் படத்தின் இரண்டாவது ஹீரோ. முண்டா பனியனோடு நிற்கும் இவரைப் பார்த்து இந்திரனான ரஜினி பண்ணும் அலப்பறை, செம ரகளை.
இந்தப் படத்தில் ரஜினி சொல்லும் பொய்களைக் கேட்டு தேங்காய் ஸ்ரீனிவாசன் சொல்வார் ‘போதும்பா, புல்லரிக்குது’ என்று. உண்மையிலேயே நான் இவரிடம் மிகவும் ரசித்த வசனம் இது.
‘மீனாட்சி துரைசாமியாக வரும் சௌகார் ஜானகி பின்னியிருக்கிறார். பழைய படங்களில் அழுகாச்சியாக வந்த இவர், இதில் நகைச்சுவையாக நடிக்க வைத்தது இயக்குனரின் திறமை.
அதுவும் இவரிடம் தேங்காய் ஸ்ரீனிவாசன் ஒரு கேள்வி கேட்பார் “நீங்களும் ரெட்டைப் பிறவியா? ரெட்டைப் பிறவி உங்க குடும்ப வியாதியா?” என்று. அதற்கு சௌகார் கொடுக்கும் ரியாக்ஷன் சூப்பர்.
சரோஜினியாக வரும் மாதவிக்கு இதுவே முதல் படம். அதனால் தானோ என்னவோ இவர் காதலிக்க மட்டும் செய்கிறார்.
இந்தப் படத்தில் நடிகர் நாகேஷாக நாகேஷ், டாக்டராக ‘பூர்ணம்’ விஸ்வநாதன், ரஜினியின் தங்கை உமாவாக வரும் நடிகை சரிதாவின் தங்கை பைரவி, நாகேஷின் ரசிகனாக வரும் அந்த சின்ன பையன் என்று அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் வக்கீல் சாருஹாசனாக வரும் நடிகர் கமல்ஹாசன் வருவது செம கலக்கல்.
மிரர் இல்லாத கண்ணாடியை போட்டுக் கொண்டு, தேங்காய் ஸ்ரீனிவாசனை மிரட்டுவது அசத்தல்.
படத்திற்கு வசனம் விசு என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.
படத்தை பார்த்தாலே தெரிந்துவிடும். இந்தப் படத்தை தயாரித்தவர் துரைசாமி.
இந்த படம் 1979-ல் ஹிந்தியில் வெளிவந்த ‘கோல்மால்’ படத்தின் ரீமேக் படமாகும். இந்தப் படத்தில் தான் ரஜினிகாந்த் முதன்முதலில் மீசையில்லாமல் நடித்தார். இது ரஜினி நடித்த 67-வது படம்.
1981 மே 1 அன்று ‘தில்லு முல்லு’ வெளிவந்தது. இது அந்த வருடத்திலேயே மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாக இருந்தது. படத்திற்கு இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
இந்தப் படத்தில் வரும் எம்.எஸ்.வி இசையமைத்த ‘ராகங்கள் 16’ பாடல், இன்றும் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட்களில் ஒன்றாக உள்ளது.
– என்.எச்.நரசிம்ம பிரசாத்
- நன்றி : ஊர் காவலன் இணைய இதழ்