தோல்வியை எதிர்கொள்ளக் கற்றுக் கொள்வோம்!

ஐ.எஸ்.ஆர் துணை இயக்குநர் எம். திவ்யா

அக்டோபர்-20: தேசிய இளைஞர்கள் நம்பிக்கை தினம்

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கில் இளைஞர்கள் வளர்ந்து வருகின்றனர்.

இளமைப் பருவம் என்பது கொண்டாட்டங்கள் நிறைந்தவை மட்டும் இல்லை. பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய காலகட்டமும்கூட. மனநிலையில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும் காலமாக பதின் பருவம் உள்ளது.

ஆனால், இந்த பசின்னச் சின்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் மனச் சோர்வு ஏற்பட்டு தவறான பாதைக்கு செல்கின்றனர்.

இந்த வயதில் தான் தோல்வியின் காரணமாக அதிக தற்கொலை எண்ணங்கள் ஏற்படுகிறது. இது ஒரு மனநலப் பிரச்சனையாகப் பார்க்கபடுகிறது.

இளம் வயது தற்கொலை என்பது இந்த காலகட்டத்தில் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக கான்ஃபிடன்ஸ் கேர்ள் மென்டரிங் திட்டத்தின் நிறுவனரும் தலைவருமான டிஃப்பனி ஆர். லூயிஸின் முயற்சியால் தேசிய இளைஞர் நம்பிக்கை தினம் 2018 இல் நிறுவப்பட்டது.

அதிலிருந்து ஆண்டுதோறும் அக்டோபர் 20 ஆம் தேதி தேசிய இளைஞர் நம்பிக்கை தினம் அனுசரிக்கப்படுகிறது.

இளம் பருவம் என்பது கிராமங்களில் கூறுவது போல் இரண்டுங்கெட்டான் வயது. நல்லது கெட்டது எல்லாம் இந்த வயதில் தான் தொடங்கும். நாம் எதை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது இந்த வயது தான்.

தோல்விகளைக் கையாளக் கற்றுக்கொள்வோம்:

இளைஞர்கள் தோல்விகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதைப் பற்றி ஐ.ஆர்.எஸ் துணை இயக்குநர் எம். திவ்யா நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

“நான் எங்கள் வீட்டில் வேண்டாத, இரண்டாவது பெண் குழந்தையாகப் பிறந்தேன். நான் பட்டப்படிப்பு முடித்த காலகட்டத்தில், ஐடி கால் பதித்த நேரம்.

இதில் வேலைக்கு சேர்ந்தால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.

ஆனால், இந்த வேலையில் நீண்ட காலம் பணியாற்ற முடியாது. குறைந்த வருடத்தில் அதில் இருந்து துரத்தப்படுவேன் என்பது எனக்குத் தெரியும்.

அதனால் என் அப்பா, அரசு வேலைக்கு முயற்சி செய் என்றார். அதன் பிறகு நான் ’யுபிஎஸ்சி’ படித்து, தேர்வு எழுதினேன்.

இரண்டு முறை எழுதியும் அதில் தோல்வி. சரி நமக்கு அரசு வேலை என்பது கிடைக்காதோ என மனதை தைரியப்படுத்திக் கொண்டேன்.

ஆனால், கடைசியாக முயற்சித்துப் பார்க்கலாம் என முடிவு செய்து படிக்க ஆரம்பித்தேன். மூன்றாவது முறையாக வெற்றி பெற்றேன்.

எனது தொடர் முயற்சி எதிர்மறையான எண்ணத்தை தவிடு பொடியாக்கியது. ஆனால், இந்தக் கால இளைஞர்களிடம் அந்த நம்பிக்கையைக் குறைவாக இருப்பதாக உணர்கிறேன்.

தோல்வியை எப்படி கையாள்வது?

ஆசைப்பட்ட படிப்பு கிடைக்கவில்லை, காதல் தோல்வி, பரீட்சையில் தோல்வி, அப்பா, அம்மா, ஆசிரியர் திட்டிவிட்டார் தற்கொலை என எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?

எல்லாவற்றையும் பூதக் கண்ணாடியில் பார்ப்பது போல் அருகில் வைத்து பார்க்கின்றனர்.

இந்த நொடியோடு எல்லாம் முடிந்து விட்டது என குறுகிய சிந்தனையுடன் செயல்படுகின்றனர்.

இந்த நொடி கடந்து போகும் என யாரும் சொல்லிக் கொடுப்பது இல்லை. கற்றுக் கொள்வதும் இல்லை.

தோல்வி எதுவாயினும் இருக்கட்டும், அதை எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். தோல்வியையும் கொஞ்சம் தள்ளிப் போடுங்கள்.

இது இல்லையா, சரி வேறு ஒன்றில் கவனத்தைத் திருப்பலாம். எது பிடிக்குதோ அதை மட்டுமே பிடித்துக்கொண்டு தொங்காதீர். இதைவிட உங்களுக்கு சிறந்ததாக கிடைக்கும் என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

தோல்வி அடைந்தால் உடனடியாக தீர்வு காணாதீர்கள். சற்று ஓய்வு கொடுங்கள். மனதை சாந்தப்படுத்துங்கள். சரியான முடிவை, காலம் உங்களுக்குக் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் தோல்வியை எதிர்கொள்ள மனதையும், மூளையையும் பழக்கப்படுத்துங்கள்.

பெற்றோர்களின் பங்கு என்ன?

கவனிக்க வேண்டியது:

1. இப்போது இருக்கும் பெற்றோர்கள் பிள்ளை வளர்ப்பில் தவறிவிடுகின்றனர். கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்.

எனக்கு தான் கிடைக்கவில்லை, எனது பிள்ளைகளுக்காவது கிடைக்கட்டும் என யோசிக்காமல் முடிவு செய்கின்றனர்.

அதிக பாதுகாப்பு அவர்களை சமுதாயத்தில் இருந்து அவர்களை ஒதுக்கி வைக்கிறது.

பாதுகாப்பு என்ற பெயரில் குழந்தைகளை தங்கள் பிடியில் வைத்திருப்பது.

பள்ளி, கல்லூரி என எதுவாக இருந்தாலும் சொகுசாக வாகனத்தில் கொண்டு போய்விட்டு கூட்டி வருவது. இந்த பழக்கம் அவர்களின் தன்னம்பிக்கையை பாதிக்கிறது.

வளர்ந்ததும் சமுதாயத்தை எதிர்கொள்ள பயப்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தப் பழக்குங்கள்.

அவ்வாறு பயணிக்கும் போது சமுதாயத்தை ஒன்றி கவனிக்க ஆரம்பிக்கின்றனர். மக்கள் நெருக்கடியில் எப்படிப் பயணிக்கின்றனர் என்பதைப் பார்த்து தெரிந்து கொள்வார்கள்.

வருங்காலத்தில், தான் சொகுசாக இருக்க வேண்டும் என்றால் உழைக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்கின்றனர்.

அப்போதுதான் பெற்றோர்களின் அருமை அவர்களுக்கு புரியும்.

2) கேட்டதை எல்லாம் வாங்கி கொடுப்பது என்பது தவறான செயல். விலை உயர்ந்த பொருட்களை சமூக அந்தஸ்தை காட்டுவதற்காக வாங்கிக் கொடுக்கின்றனர்.

ஆனால், அது காலப்போக்கில் பிள்ளைகள் பொருளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் பெற்றோருக்கு கொடுப்பதில்லை.

3) இப்போது இருக்கும் பிள்ளைகள் சுற்றி இருப்பவர்களை கவனிப்பதில்லை. தன்னைத் தானே உணர்வதும் குறைந்து வருகிறது. தனிமையில் இருக்கும் போது அவர்கள் கையில் போன் இல்லாமல் இல்லை. அதன் பாதிப்பு தங்களிடமே அவர்கள் பேசுவது குறைந்து விடுகிறது.

அவர்களுக்கு என்ன பிடிக்கும், கனவுகள் என்ன, குறைகள் என்ன, இதுவெல்லாம் தனிமையில் அவர்கள் அவர்களுடன் பேசும் போது தான் தன்னம்பிக்கை வளரும்.

பிரச்சனையைப் பற்றி யோசிப்பார்கள். அதிலிருந்து மீண்டு வருவது எப்படி என்று அவர்களிடத்தில் புது வழிகள் கிடைக்கும்.

இதுவெல்லாம் சாத்தியம் இல்லை என்றால் தோல்வியடையும் போது யோசிக்கத் தெரியாமல், தற்காலிக தீர்வாக தற்கொலையை நாடுகின்றனர்.

நாம் என்ன செய்ய வேண்டும்?

பிள்ளைகளிடம் தோல்விகளைப் பழக்கப்படுத்துங்கள். அதிக பாதுகாப்பு கொடுக்காதீர்கள், விழுந்தால் எழ வேண்டும் என வாழ கற்றுக் கொடுங்கள்.

பிள்ளைகளை வேலை சொல்லிப் பக்குங்கள். காய்கறி வாங்குவது, வரிசையில் நின்று ரேஷன் பொருட்கள் வாங்குவது, வங்கி சென்றால் படிவத்தை நிரப்ப என சின்ன சின்ன வேலைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.

பயிற்சி நிலையங்கள் பக்கமாக இருந்தால் நடந்து போகட்டும். அல்லது பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தட்டும். சொகுசு வாழ்க்கைக்கு அடிமையாக்காதீர்கள்.

இப்படி சரியான பாதையில் அவர்களைக் கூட்டிச் சென்றால் தன்னம்பிக்கையுடன், பொறுப்பான, சுயமாக முடிவெடுக்கும் பிள்ளையாக நிச்சயமாக வளர்வார்கள். தோல்வியை எதிர்கொண்டு மனசோர்வைக் கடந்து வந்துவிடுவார்கள்.

கனவு காணுங்கள்:

எம்.திவ்யா

நான் தோல்வி அடைந்து வெற்றியை ருசித்தபோதே ஒரு கனவை சுமக்கத் தொடங்கிவிட்டேன்.

தினமும் கண்ணாடி முன் நின்று கொண்டு இந்திய ஜனாதிபதி முன் நான் பேசுவது போன்று பேசிக்கொண்டேன்.

5 ஆண்டுகள் கடந்து என் கனவு மெய்பட்டது. நான் பணி நியமன ஆணை வாங்கும்போது என்னுடன் 210 இருந்தனர்.

அதில் 4 பேர் ஜனாதிபதி முன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் நாட்டில் இருந்து நான் மட்டும் தான் கலந்து கொண்டேன்.

ஆகவே நமக்கு பிடித்த மாதிரி ஒரு நாள் வாழ்க்கை மாறும் என நம்பவேண்டும். உங்களை நீங்கள் நம்புங்கள், இதுவும் கடந்து போகும் என நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

தேசிய இளைஞர் நம்பிக்கை தினமான இன்று முதல் தோல்வியைக் கண்டு பயப்படமாட்டேன் என உறுதி ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார் நம்பிக்கை நாயகியான எம்.திவ்யா.

– யாழினி சோமு

You might also like