காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு இடங்களிலும் வாகை சூடினார்.
அதனைத் தொடர்ந்து ரேபரேலி தொகுதியை தக்கவைத்துக் கொண்டு, வயநாடு எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து வயநாடு மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதியில் அடுத்த மாதம் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
சோனியா காந்தியின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா, வயநாடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக, கட்சி மேலிடத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
52 வயதான பிரியங்கா, தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதன்முறை. சோனியாவின் கைக்குள், காங்கிரஸ் சென்றபின் கட்சிக்காக பிரியங்கா, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்துள்ளார். ஆனால் தேர்தலில் களம் இறங்கியதில்லை.
வயநாடு தொகுதி வேட்பாளராக பிரியங்கா அறிவிக்கப்பட்டதும், அங்குள்ள காங்கிரசார், உடனடியாக பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டனர்.
வயநாடு மக்களவைத் தொகுதியில் மொத்தம் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
அனைத்து இடங்களிலும் பிரியங்காவின் உருவம் பொறித்த வண்ணச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. காணும் இடமெல்லாம் பிரியங்காவின் பேனர்கள்.
வயநாடு தொகுதியின் நிலவரம் என்ன?
கடந்தத் தேர்தலில் வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து, ’இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது.
அந்தக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராஜாவின் மனைவி ஆனி ராஜா களம் இறக்கப்பட்டார்.
இந்த முறையும் இந்திய கம்யூனிஸ்ட், பிரியங்காவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியுள்ளது. அவர் பெயர் சத்யன் மொகேரி. 2014-ம் ஆண்டு வயநாடு மக்களவைத் தொகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டார்.
மூன்று முறை எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்துள்ளார். மொத்தத்தில், வலுவான வேட்பாளர்.
வயநாடு மக்களவைத் தொகுதியை, காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்றே சொல்ல வேண்டும். அதனால்தான், இந்தத் தொகுதியில் ராகுல் இரண்டு முறை போட்டியிட்டார்.
கடந்த தேர்தலில் அவர் 3 லட்சத்து 64 ஆயிரத்து 422 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ராகுலை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முனீர் களம் இறக்கப்பட்டார்.
அந்தத் தேர்தலில் ராகுல், 4 லட்சத்து 31 ஆயிரத்து 770 ஓட்டு வித்தியாசத்தில் வாகை சூடினார். இந்த முறை ராகுலின் வாக்கு வித்தியாசம் கணிசமாக குறைந்துவிட்டது.
இந்த முறை பிரியங்காவை எதிர்த்து நிறுத்தப்பட்டுள்ள கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்யன், ”வயநாடு தொகுதியில் நிச்சயம் வெல்வேன் – இந்திரா காந்தி தோற்கவில்லையா? ராகுல் தோற்கவில்லையா? அதுபோல் பிரியங்காவும் வயநாட்டில் தோற்பது உறுதி’’ என பேட்டி அளித்துள்ளார்.
பிரியங்காவை எதிர்த்து குஷ்பு போட்டியா ?
வயநாடு மக்களவைத் தொகுதியில் கடந்த முறை பாஜக போட்டியிட்டு, மூன்றாவது இடத்துக்கு வந்திருந்தது. இந்த முறையும் அந்தக் கட்சி நிச்சயம் போட்டியிடும்.
‘பிரியங்காவை எதிர்த்து பாஜக சார்பில் தமிழ் திரைப்பட நடிகை குஷ்பு போட்டியிட வாய்ப்பு உள்ளது’ என மலையாள மொழியில் வெளிவரும் ‘மாத்ருபூமி‘ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
‘வயநாடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியலில் குஷ்பு பெயரும் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக, கேரள பாஜகவிடம், டெல்லி மேலிடம் கருத்து கேட்டுள்ளது’ என அந்த செய்தியின் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் இன்று (18.10.2024 – வெள்ளிக்கிழமை) தொடங்கியுள்ளது.
வரும் 25-ம் தேதி மனு செய்ய கடைசி நாள். எனவே ஓரிரண்டு நாட்களில், பாஜக, தனது வேட்பாளரை அறிவித்து விடும் எதிர்பார்க்கலாம்.
– மு.மாடக்கண்ணு