53-ம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள அதிமுக!

அணிகள் ஒன்றிணைய தொண்டர்கள் விருப்பம்

‘கணக்கு‘ கேட்டதற்காக திமுகவில் இருந்து நீக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., 1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி அதிமுக எனும் மக்கள் இயக்கத்தைத் தொடங்கினார். கட்சித் தொடங்கிய ஆறு மாதத்தில் திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலை அதிமுக எதிர்கொண்டது.

இடைத்தேர்தல் முடிவு 1973-ம் ஆண்டு மே 21-ம் தேதி வெளியானது. தேர்தல் முடிவு, இந்திய துணைக் கண்டத்தையே ஆச்சர்யப்படுத்தியது.

அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட மாயத்தேவர் வெற்றி பெற்றார். இரட்டை இலையின் சகாப்தம் அன்று ஆரம்பித்தது. அடுத்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தான் என அப்போதே அரசியல் நோக்கர்கள் கணித்து விட்டனர்.

அடுத்த சாதனையாக, 1974-ம் ஆண்டு கோவை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றிப் பெற்றது.

அங்கு வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் அரங்கநாயகம், அ.தி.மு.க.வின் முதல் எம்எல்ஏவாக சட்டப் பேரவைக்குள் நுழைந்தார். இதன் தொடர்ச்சியாக புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக வென்று, ஆட்சியைக் கைப்பற்றியது.

1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக போட்டியிட்டது. மொத்தம் 4 அணிகள். அதிமுகவுடன் சிபிஎம் மட்டும் கூட்டணி.

அப்போது, இரவு பத்து மணிக்குள் தேர்தல் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு ஏதும் இல்லை.

எம்ஜிஆர் நள்ளிரவு தாண்டி பரப்புரை நிகழ்த்த வந்தாலும், ஒட்டுமொத்தக் கூட்டமும் காத்திருக்கும்.

அந்தத் தேர்தலில் அதிமுக 130 தொகுதிகளைக் கைப்பற்றியது. கட்சி தொடங்கிய நான்கு ஆண்டுகளுக்குள் ஆட்சியைப் பிடித்த புதிய வரலாறு அதிமுகவால் எழுதப்பட்டது. எம்ஜிஆர், முதன் முறையாக முதலமைச்சர் ஆனார்.

1980-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, 129 இடங்களைக் கைப்பற்றியது. மீண்டும் எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார்.

முகம் காட்டாமல் எம்.ஜி.ஆர் அடைந்த வெற்றி:

1984-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலும், மக்களவைத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. அப்போது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனால் அந்த தேர்தலில் எம்.ஜி.ஆரால் பிரச்சாரம் செய்ய இயலவில்லை.

மருத்துவமனையில், தொப்பியில்லாத நிலையில் தோற்றமளிக்கும் எம்ஜிஆரின் சுவரொட்டிகள் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டன.

எம்ஜிஆர் நேரடியாக பரப்புரையில் ஈடுபடாத சூழலில், அந்த தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெற்றது.

132 இடங்களைக் கைப்பற்றியது அதிமுக. மூன்றாம் முறையாக முதலமைச்சர் ஆனார் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் 1987-ம் ஆண்டு உயிரிழந்தார். எம்ஜிஆர் மறைந்த நிலையில் அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது.

இதனைத் தொடர்ந்து 1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், கட்சியின் வாக்குகள் பிரிந்ததால் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. பின்னர் இரு அணிகளும் ஒன்றிணைந்தன.

1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக 164 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது. ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார்.

1996-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றாலும், 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வென்றது.

இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு 132 தொகுதிகள் கிடைத்தன.

எனினும் 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை. 61 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மீண்டும் அபார வெற்றி பெற்றது. 150 இடங்களில் வென்றது.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், கூட்டணி இல்லாமல், தனித்து களம் இறங்கிய அதிமுக, 136 இடங்களில் வெற்றி பெற்றது.

ஒன்றிணைய விரும்பும் தொண்டர்கள்

ஜெயலலிதா உடல் நலக்குறைவால் 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இயற்கை எய்தினார். இதனால் அதிமுகவில் உள்கட்சி மோதல் எழுந்ததால், 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 66 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்திலும் அதிமுகவால் வெல்ல இயலவில்லை.

இந்த சூழலில்தான் அதிமுக இன்று 53-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று இன்றைக்கு ஆளுமைகள் இல்லை.

ஒரு மக்கள் இயக்கம், ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில், பல பிரிவுகளாகச் சிதறி இருக்கும் எம்,ஜி.ஆரின் விசுவாசிகள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே புரட்சித் தலைவரின் தொண்டர்கள் விருப்பம்.

– மு.மாடக்கண்ணு.

You might also like