எண்பதுகளில் பாலின சமத்துவம் பற்றிப் பேசுகிற படங்கள் அதிக எண்ணிக்கையில் வெளியாகின.
பெங்காலி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அது போன்ற திரைப்படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.. அது இங்கும் பிரதிபலித்தது.
அதே நேரத்தில், ‘ஆணுக்கு நிகரானவள் பெண்’ என்று பேசுகிற அப்படங்களுக்குக் கிடைத்த ஆதரவு, மூன்றாம் பாலினத்தவர் குறித்த படங்களுக்குக் கிடைக்கவில்லை. வழக்கமான திரைப்பார்வையோடு அந்த படங்களின் உள்ளடக்கம் அமையாததும் அதற்கொரு காரணம்.
இந்தச் சூழலில், அந்த எண்ணத்தைத் தவிடுபொடியாக்கும் வகையில் வெளியாகியிருக்கிறது ‘நீலநிறச் சூரியன்’.
சம்யுக்தா விஜயன் இதனை எழுதி, இயக்கியிருப்பதோடு முதன்மைப் பாத்திரமேற்று நடித்திருக்கிறார்.
இந்தப் படம் எப்படிப்பட்ட அனுபவத்தை நமக்கு வழங்குகிறது?
மனதுக்குள் போராட்டம்!
கோவை வட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் அரவிந்த் (சம்யுக்தா விஜயன்).
இயற்பியல் பாடம் எடுக்கும் அவர், தன்னை ஒரு பெண்ணாகவே உணர்கிறார். சிறு வயதில் இருந்து இதுதான் நிலை. ஆனால் குடும்பத்தினருக்கோ, பிறருக்கோ அது தெரிவதில்லை.
குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, தான் ஒரு பெண்ணாகவே வாழ வேண்டுமென்று அவர் முடிவு செய்கிறார். அதற்காக ஹார்மோன் சிகிச்சைகளையும் பின்பற்றுகிறார்.
ஆனால், அறுவைச் சிகிச்சை செய்துகொள்வதற்கு முன்பாக ஒரு மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டுமென்று சொல்கிறார் அறுவைச் சிகிச்சை நிபுணர்.
அதனைச் செய்கிறார் அரவிந்த். அவரது ஆலோசனைகளைக் கேட்டபிறகு, அறுவைச் சிகிச்சைக்கு முன்பாகவே வாழ்விடத்தில் பெண்ணாக இருக்க விரும்புகிறார்.
அதற்காகத் தனது உடை, நடை, பாவனைகளை மாற்றும் முயற்சியில் இறங்குகிறார். குடும்பத்தில் பெரும் அதிர்வை இது விளைவிக்கிறது. பள்ளியிலும் கிட்டத்தட்ட அதே போன்ற நிலைதான்.
பள்ளி துணை முதல்வர் (கேவிஎன் மணிமேகலை) அதனைக் கேட்டதுமே அதிர்கிறார்.
ஆனால், அரவிந்த் குறித்த செய்தியை ஊடகங்களில் பரவச் செய்வதன் மூலமாகப் பெருங்கவனத்தை ஈட்ட முடியும் என்று அந்தப் பள்ளியின் தாளாளர் நினைக்கிறார். அரவிந்தின் முடிவை ஆதரிக்கிறார்.
அதற்கடுத்து, வீட்டிலும் வெளியிலும் ‘பானு’ என்ற பெண்ணாகத் தன்னை வெளிப்படுத்துகிறார் அரவிந்த். ஆனால், சமூகம் அவரை ‘திருநங்கை’யாக நோக்குகிறது.
அந்தப் பயணம் எளிதானதாக இருந்ததா? கட்டுப்பாடுகள் அதிகமிக்க ஒரு சிறு நகரச் சூழலில் அவரால் தான் நினைத்தபடி வாழ முடிந்ததா என்று சொல்கிறது ‘நீலநிறச் சூரியன்’ படத்தின் மீதி.
ஆக்கத்தில் நேர்த்தி!
திரைக்கதை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பில் நேர்த்தியைக் கூட்டி, ‘ஒரு அவார்டு படம்’ பார்க்கிற உணர்வை உண்டுபண்ணுகிறது ‘நீலநிறச் சூரியன்’ படத்தின் ஆக்கம். அதில் பிசகு ஏதும் நமக்குத் தெரிவதில்லை என்பதால், காட்சிகள் பெரிதாக போரடிக்கவில்லை.
வழக்கமாக, ‘இது ரொம்ப மெலோட்ராமாவா இருக்குமே’ என்று நினைக்கிற சில தருணங்களை இதில் தவிர்த்திருக்கிறார் இயக்குநர் சம்யுக்தா விஜயன்.
அதன் மூலமாக, தான் பேச வேண்டிய விஷயங்களைப் பார்வையாளர்கள் முகம் சுளிக்காத வண்ணம் தந்திருக்கிறார்.
ஸ்டீவ் பெஞ்சமின் இப்படத்தின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசையைக் கையாண்டிருக்கிறார். அம்மூன்றும் இப்படத்தின் ஆக்கத்திற்குப் பெருந்துணையாக அமைந்திருக்கின்றன.
மீட்டுவின் கலை வடிவமைப்பு அதற்கு உதவி புரிந்திருக்கிறது.
இப்படத்தில் சம்யுக்தா விஜயனோடு கஜராஜ், கீதா கைலாசம், பிரசன்னா பாலச்சந்திரன், கே.வி.என்.மணிமேகலை, கிட்டி உட்படப் பலர் வருகின்றனர்.
மருத்துவராக வருபவர், உடற்கல்வியியல் ஆசிரியை, ஆசிரியராக வருபவர்கள், இதர ஆசிரியர்கள், மாணவர்களில் ஒருவராக வரும் மசாந்த் ராஜன், பள்ளி தாளாளராக வருபவர் என்று பல பாத்திரங்கள் இதில் வருகின்றன.
திருநங்கையாக மாறும் ஒருவர் சமூகத்தை எதிர்கொள்ளும் விதம், அரசு அலுவலகங்களில் தங்களைப் பதிவு செய்கிற முறை, வாழ்க்கைச்சூழலை நினைத்தவாறு மாற்றுவதில் இருக்கிற தடைகள் என்று பலவற்றைப் பேசுகிறது ‘நீலநிறச் சூரியன்’.
அதேநேரத்தில், திருநங்கைகளைப் பாலியல் இச்சைகளுக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்பவர்களையும், அவர்களைப் பிச்சைக்காரர்களாக நோக்குபவர்களையும் கேள்விக்குட்படுத்துகிறது.
தன்னைப் பெண்ணாக உணரும் ஒரு ஆணின் வாழ்வு குறித்த எந்தவொரு விஷயத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டாமல், முடிந்தவரை அதிக ‘ட்ராமா’ இன்றி மென்மையாக அணுகியிருக்கிறது ‘நீலநிறச் சூரியன்’.
நிச்சயமாக, இதன் ஆக்கத்தில் இருக்கும் நேர்த்தி நம்மை ஒருமுறை இதனை ரசிக்க வைக்கும்.
அதேநேரத்தில், இப்படத்தில் இருக்கும் குறைகளையும் பட்டியலிடச் செய்யும்.
‘queer’ என்ற சொல்லாடலோடு, மூன்றாம் பாலினத்தவர் குறித்த திரைப்படங்கள் ஐரோப்பாவில் அதிகம் வெளிவருவதாகச் சொல்லப்படுகிறது.
கிட்டத்தட்ட அந்த வரிசையில் சேர்க்கத்தக்க ஒரு படமாக வந்து சேர்ந்திருக்கிறது ‘நீலநிறச் சூரியன்’.
இப்படத்திற்குக் கிடைக்கும் மக்கள் ஆதரவு, இன்னும் பல ‘பேசாப்பொருட்களை’ திரையில் பேச வழிவகை செய்யும்..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்