தில் ராஜா – இயக்குனர் ஏ.வெங்கடேஷின் முத்திரை இதிலிருக்கிறதா?

கமர்ஷியல் திரைப்படங்களைத் தொடர்ந்து ஒரு இயக்குனர் வெற்றிகரமாகத் தருவதென்பது மிகச்சாதாரணமாகக் கைவராது. அதனை நிகழ்த்தப் பலரது உழைப்பும் ஒருங்கிணைப்பும் வேண்டும். அப்படி அமைந்த படங்கள் தான், காலத்தைத் தாண்டியும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கின்றன.

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதே போன்ற படங்களைச் சம்பந்தப்பட்டவர்கள் தர முனைந்தாலும், அவற்றின் வெற்றிக்கு எவராலும் உத்தரவாதம் தர முடியாது. அதேநேரத்தில், அவை நேர்த்தியாக இருக்கிறதா, இல்லையா என்று சொல்லிவிட முடியும்.

‘தில் ராஜா படத்திற்கும் இவ்வாறு சொல்வதற்கும் என்ன சம்பந்தம்’ என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

’மகாபிரபு’ படத்தில் வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமான ஏ.வெங்கடேஷ் பிறகு செல்வா, நிலாவே வா, சாக்லேட், பகவதி, தம், குத்து, ஏய், மலை மலை, மாஞ்சா வேலு என்று பல படங்களைத் தந்திருக்கிறார்.

அவற்றுக்கு ரசிகர்கள் எத்தகைய வரவேற்பைத் தந்தார்கள் என்பது நாம் அறிந்ததே. ’இது ஒரு ஏ.வெங்கடேஷ் படம்’ என்று சொல்லத்தக்க வகையில், அவை சிறப்பான ‘கமர்ஷியல் படங்களாக’ விளங்குகின்றன.

இடையே ‘அங்காடித்தெரு’ மூலமாக ஒரு நடிகராகவும் அறிமுகமானார் ஏ.வெங்கடேஷ். அதனைத் தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்தச் சூழலில் அவர் வில்லனாக நடித்த, இயக்கிய ‘தில் ராஜா’ திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

தான் இயக்கிய வெற்றிப்படங்களில் நிறைந்திருந்த நேர்த்தியை இதில் ஏ.வெங்கடேஷ் கைக்கொண்டிருக்கிறாரா? இந்தப் படம் எப்படியிருக்கிறது?

’தில் இருக்கா’ ரக கதை!

மனைவி ராதிகா (ஷெரின்), ஐந்து வயது மகள் நிலாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கொண்டிருக்கிறார் ரஜினி (விஜய் சத்யா). ஒரு கட்டுமான நிறுவனத்தில் ஆர்க்கிடெக்ட் ஆகப் பணியாற்றுகிறார்.

அதேநேரத்தில் ஒரு மெக்கானிக் ஷாப் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர், தீவிர ரஜினி ரசிகர் என்பது இன்னொரு சிறப்பம்சம்.

நிலாவின் பிறந்தநாளையொட்டி ‘ஷாப்பிங்’ செல்கிறார் ரஜினி. திரும்பி வரும்போது ஒரு அசம்பாவிதம் நேர்கிறது. அதனால் ராதிகாவும் நிலாவும் அதிர்ச்சியடைகின்றனர்.

அடுத்த நாள் காலையில், அமைச்சர் ஈஸ்வர பாண்டியனின் (ஏ.வெங்கடேஷ்) மகன் கொல்லப்பட்டதாகச் செய்தி வெளியாகிறது. அதனைக் கேட்டதும் ரஜினியும் ராதிகாவும் நிலை குலைகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, முன்பக்கத்தில் சிதைவுக்கு உள்ளான தங்களது காரை வெளியே எடுக்க வேண்டாம் என்று முடிவெடுக்கின்றனர்.

இந்த நிலையில், ரஜினி வேலை பார்க்கும் கட்டுமான நிறுவன உரிமையாளரை நாடுகிறார் ஈஸ்வரன். தனது மகனுக்கு ஒரு நினைவு மண்டபம் கட்ட வேண்டுமென்று கேட்கிறார். உடனே, அப்பணியை ரஜினியிடம் ஒப்படைக்கிறார் உரிமையாளர்.

அந்த கட்டுமானப் பணியைத் திட்டமிடும்போது, ஈஸ்வரனோடு இருக்கும் ஒவ்வொரு கணமும் மரண அவஸ்தையை உணர்கிறார் ரஜினி.

ஒருநாள், தனது மகன் இறந்த இடத்திற்கு ரஜினி உடன் செல்கிறார் ஈஸ்வரன். அப்போது, ஒரு போன் கால் வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, ரஜினியைக் கோபத்துடன் பார்க்கிறார் ஈஸ்வரன். அவரையும் அவரது குடும்பத்தையும் தீர்த்துக் கட்ட முடிவெடுக்கிறார்.

அதன்பிறகு என்னவானது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

அமைச்சர் ஈஸ்வரனின் அடியாட்கள் துரத்த, அவர்களிடம் இருந்து ரஜினி தப்பித்து ஓடுவதில் இருந்து ’தில் ராஜா’ திரைக்கதை தொடங்குகிறது.

மேற்சொன்னவற்றில் இருந்தே, இப்படம் குறித்த பிம்பம் நிச்சயமாகக் கண் முன்னே தோன்றியிருக்கும்.

’தில் இருக்கா ராஜா’ என்று வில்லன் சொல்வதை ஏற்று, அவரது சவால்களை முறியடிக்கிற ஹீரோவின் சாகசங்களே இக்கதை என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால், இப்படம் அவ்வாறு அமையவில்லை. அதற்கேற்ற வாய்ப்புகள் இருந்தும், அனைத்தையும் கோட்டை விட்டிருக்கிறது இப்படம்.

எப்படியிருந்த நான்..!?

சிக்ஸ் பேக் உடன் நாயகன் விஜய் சத்யா நிற்கும் தோற்றமே, ‘தில் ராஜா’ புரோமோஷன்களில் பயன்படுத்தப்படுகிறது.

‘அது கிராபிக்ஸ் இல்லை’ என்பது போலப் படத்திலும் தனது கட்டுமஸ்தான உடல்வாகை அவர் காட்டியிருக்கிறார்.

ஆக்‌ஷன் ஹீரோவுக்கு ஏற்ற உடல்மொழியும் கூட இருக்கிறது. ஆனால், இதர காட்சிகளில் தான் அவரது நடிப்பு ‘விலை என்ன’ என்கிற ரகத்தில் உள்ளது.

நீண்ட காலத்திற்குப் பிறகு இதில் ஷெரின் நாயகியாக வருகிறார். முகப்பொலிவு இருந்தாலும், அவரது உடல்வாகு கவர்ச்சியான உடைகளில் வலம் வரத் தக்க வகையில் இல்லை. அதனை ஆடை வடிவமைப்பாளர் மறந்து போயிருக்கிறார்.

இதில் ஏ.வெங்கடேஷ் உடன் அவரது மனைவியாக வனிதா விஜயகுமார் வருகிறார். அவர்கள் நடிப்புக்குத் தீனி போட, இதில் காட்சிகள் இல்லை.

இவர்கள் தவிர்த்து சம்யுக்தா, கு.ஞானசம்பந்தம், கராத்தே ராஜா உட்படப் பலர் இதில் உண்டு.

விஜய் டிவி பாலாவும் இமான் அண்ணாச்சியும் ஆங்காங்கே சில ‘ஒன்லைனர்’களை உதிர்க்கின்றனர். அதிலும் பாலாவின் தோற்றமே, இப்படம் எந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்டது என்பதைச் சொல்லிவிடுகிறது.

மனோ நாராயணனின் ஒளிப்பதிவு. சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பு, சூப்பர் சுப்பராயனின் சண்டைக்காட்சி வடிவமைப்பு, ஆண்டனி பீட்டரின் கலை வடிவமைப்பு என்று இதில் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரை ஒருங்கிணைத்திருக்கிறார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்.

அம்ரிஷின் இசையில் தொடக்கப் பாடலும், நாயகன் நாயகி டூயட் பாடலும் கேட்கும் ரகத்தில் இருக்கிறது. சில காட்சிகளில் பின்னணி இசை அருமையாக இருக்கிறது. ஆனால், அதற்குப் பொருத்தமான உள்ளடக்கம்தான் கிடைக்கப் பெறவில்லை.

இந்தப் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ‘பகவதி உள்ளிட்ட பல படங்களில் ஏ.வெங்கடேஷ் எப்படி அமர்க்களப்படுத்தி இருந்தார்’ என்ற எண்ணம் நம்முள் தோன்றுகிறது.

அதுவே, ‘எப்படியிருந்த நான்..’ என்ற நகைச்சுவை வசனத்தை மீம்ஸ்களாக அவர் மீது வாரியிறைக்கக் காரணமாகிறது.

‘இந்தியன் 2’ பார்த்தபோது, ‘ஷங்கர் படமா இது’ என்று நினைத்தவர்கள் பலர். அதே போன்றதொரு எண்ணத்தை இதில் விதைத்திருக்கிறார் ஏ.வெங்கடேஷ்.

திரையில் தங்கள் பலமாக எதையெல்லாம் வெளிப்படுத்தினார்களோ, அவற்றையெல்லாம் பலவீனமாக ஒரு இயக்குனர் வெளிப்படுத்தக் காரணம் என்ன?

படத்தின் பட்ஜெட், படம்பிடிக்கப்பட்ட சூழல், ஒருங்கிணைப்பு இல்லாமை என்று பல காரணங்கள் அதன் பின்னே இருக்கலாம்.

ஆனால், அதையும் மீறி ஒரு படம் வெளியாகும்போது, அந்த இயக்குனரின் முந்தைய சாதனைகள் எல்லாம் நீர்த்துப் போகின்றன.

‘தில் ராஜா’வைப் பொறுத்தவரை, திரைக்கதையில் பல காட்சிகள் முன்பின்னாக அடுக்கப்பட்டிருக்கின்றன.

அதற்கான தேவையே இக்கதையில் இல்லை. அது மட்டுமல்லாமல், படம் பார்க்கிறபோதே லாஜிக் சார்ந்து பல கேள்விகள் தொற்றுகின்றன.

ஒரு கமர்ஷியல் படத்தைத் தோல்வியடையச் செய்வதில் முக்கிய விஷயம் அதுவே. முக்கியமாக, ஏ.வெங்கடேஷின் முந்தைய படங்களில் இருந்த நேர்த்தி இதில் இல்லை.

அதனால், அவரது முத்திரை இப்படத்தில் எங்கும் வெளிப்படவில்லை.

இப்படத்தின் டேக்லைன் ஆக உள்ள ‘வீறு கொண்டு எழு’ வார்த்தைகளைத் தங்களுடையதாக்கிக் கொண்டு இயக்குநர் ஏ.வெங்கடேஷ் தனது அடுத்த படத்தைச் சிறப்பானதாகத் தர வேண்டும். அதுவே நமது ஆசை!

உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like