ஆம்பூரில் ஓர் அன்னை தெரசா!

ஆலிஸ் ஜி பிராயர் (1938 – 2024) :

ஆலிஸின் தந்தையார் பெயர் ரிச்சர்ட் ஹென்றி பிராயர். அவர் 1925-ல் அமெரிக்காவிலிருந்து கப்பலில் பல மாதங்கள் பயணம் செய்து தரங்கம்பாடி துறைமுகத்தை வந்தடைகிறார்.

அங்கிருந்து மாட்டு வண்டியில் பயணித்து மிஷினெரியாக நாகர்கோவிலுக்கு வருகிறார்.

பனை மரங்கள் நிரம்பிய அடர்ந்த காட்டுக்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பனையோலை குடிசைகள் வேய்ந்த குடிசைகளைக் கொண்ட ஊர்கள்.

மின்சாரம் இல்லை. அடிப்படை வசதிகள் ஒன்றுமில்லாத மிகவும் இருண்ட காலம். வாகனங்கள் ஏதுமில்லாமல் முதலில் கால்நடையாக பல மைல்கள் நடந்தே சென்று ஊர்களில் மக்களைச் சந்தித்து தம் சேவையினைத் தொடங்கினார்.

சில ஆண்டுகளுக்கு பின்னர் மிதிவண்டி பயணம். அவரது அற்பணிப்பு சேவையினால் மக்களால் “பிராயர் அய்யர்” என்று பேரன்போடு அழைக்கப்பட்டார்.

மிக கடுமையான சூழலில் தான் தம் சேவையினைத் தொடங்குகிறார் பிராயர் அய்யர். அவர். 1931 – ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் அமெரிக்காவைச் சேர்ந்த ஏர்னா மிடில்டாவை மணக்கிறார்.

அவர்களுக்கு முதலில் ஈடன் ரிச்சர்ட் பிராயர் என்ற ஓர் ஆண் குழந்தையும், அடுத்து ரோடா எலிசபெத் பிராயர் ஏர்னா தியோடரா பிராயர் ஆகிய இரட்டை குழந்தைகளும் பிறந்தனர்.

பின்னர் பிராயர் இணையருக்கு நான்காவது செல்ல மகளாக ஆலிஸ் 1938-ஆம் ஆண்டு நாகர்கோவிலில் பிறந்தார். கடைக்குட்டி செல்லமாக ஆறு வயது வரை அப்பா அம்மாவுடன் நாகர்கோவில் வாசம்.

பின்னர் அவரது சகோதரர் சகோதரிகள் படித்த கொடைக்கானல் லேக் எண்ட் பள்ளியில் நான்காம் வகுப்பு வரை படித்தார்.

அப்போது அண்ணனும் அக்காக்களும் கோடை இண்டர்நேஷனல் பள்ளியில் படித்து கொண்டிருந்தனர்.

1948-ல் ஆலிஸ் 4-ம் வகுப்பு முடித்ததும் மகனின் உயர் கல்விக்காக பிராயர் அய்யரின் குடும்பம் தாய் நாட்டிற்கு புலம் பெயர்ந்தது. ஒரு மாத காலம் கப்பலில் பயணம் செய்து அமெரிக்கா சென்றடைந்தனர். அப்போது ஆலிஸின் வயது 10. அது 1948-ம் ஆண்டு.

ஆலீஸ் 1948 முதல் 1968 வரை பள்ளி கல்லூரி என பயின்று மருத்துவக் கல்வியையும் முடித்தார். 1968-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆலிஸின் அண்ணனும் அக்காக்களும் படித்து முடித்து வேலைகளில் சேர்ந்து திருமணம் செய்து குடும்பமாக வாழ்க்கையைத் தொடங்கியிருந்தனர்.

அப்போது ஆலிஸ் தான் தன் தந்தையைப் போலவே மிஷினெரியாக இந்தியா போக விரும்புவதாக தெரிவித்தார்.

அதன்படி Community health service – பணிக்காக 1968-ல் இந்தியாவிற்கு விமானத்தில் வந்தார்.

சில நாட்களில் தமிழ் மொழி கற்க வேண்டிய அவசியம் உணர்ந்து மதுரை பல்கலைக்கழகத்தில் சுமார் ஓராண்டு தமிழ்க் கற்றுத் தேர்ந்தார்.

1969 முதல் அவரே ஜீப்பை ஓட்டிக்கொண்டு கிராமம் கிராமமாக சென்று வீடு வீடாக தாய் சேயைத் தேடிச் சென்று குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் போட்டார்.

கல்வி அதிகம் இல்லாத பெண்களிடம் சத்து குறைபாடு, ஊட்டச்சத்தின் அவசியம், தாய்ப்பால் கொடுத்தலின் நன்மைகள் நோய் எதிர்ப்புச் சக்தி போன்ற பல விழிப்புணர்வுகளை வலியுறுத்தி வந்தார்.

போலியோ அம்மைகள் கக்குவான் இருமல் இரணல் ஜன்னி போன்ற நோய்கள் தலை விரித்தாடிய காலத்தில் அவைகளை தடுக்க தடுப்பூசி போட்டவர் ஆலிஸ்.

ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்து பயிற்சியினைத் தனியே பயின்று, சத்து மாவினைத் தயாரித்து தாய் – சேய்க்கு கொடுத்து வந்தார்.

இந்த சத்து மாவு மக்களிடம் மிகவும் பிரபலம். அந்த மாவிற்கு மக்கள் வைத்திருக்கும் பெயர் “மிசிமா”, “மிசிமாவு”.

குழந்தை இன்மையால் மக்கள் துன்புறுகையில் 1990-களில் அதற்கான மருத்துவத்தினைத் தொடங்கினார் ஆலிஸ்.

அன்று முதல் கடந்த வாரம் வரை ஆயிரக்கணக்கான கணவன் மனைவிகள் சிகிச்சை மருந்து மற்றும் ஆலோசனை மூலமாக குழந்தைகளைப் பெற்று வந்துள்ளார்கள்.

அவர் தங்கியிருந்த பங்களாவிற்கு “லேடீஸ் பங்களா” என்று பெயர்.

அவர் வரும்போது அதில் கன்னியராக நான்கு ஐந்து இளம் மிஸியம்மாக்கள் தங்கி இருந்தனர்.

அவர்கள் எல்லோரும் ஒரு கணிசமான கால சேவைக்கு பிறகு திய் நாட்டிற்கு திரும்பி போய்விட்டனர். திருமணம் செய்து குடும்ப வாழ்வைத் தொடர்ந்தனர்.

ஆலீஸுக்கு முன்பாக மக்கள் சேவையா குடும்ப வாழ்க்கை யா என்ற கேள்வி வருகையில் தன் தனிப்பட்ட வாழ்க்கையைத் துறந்து மக்கள் சேவையினைத் தேர்ந்தெடுத்தார் ஆலிஸ்.

ஆம்பூரைச் சுற்றி உள்ள ஏழை எளிய மக்கள் ஒவ்வொரு மாதமும் முதல் வியாழ கிழமைகளில் ஆலிஸைத் தேடி வருவார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறிய பண உதவிகள் தருவார்.

ஆண்டுக்கு ஒரு முறை டிசம்பர் மாதத்தில் அந்த மக்களுக்கு குளிராடைகளைப் பரிசளிபாபார்கள். ஓராண்டு ஈராண்டுகள் அல்ல சுமார் நாற்பது ஆண்டுகளாக இதனைச் செய்து வந்தார் டாக்டர் ஆலிஸ்.

ஆடு, கோழிகள், பூனை, மயில், வான்கோழி, நாய்கள், மரங்கள், செடிகள் என எல்லா உயிர்களையும் வளர்த்தார் ஆலிஸ். தன்னைப் போலவே எல்லா உயிர்களையும் நேசித்தார் ஆலிஸ்.

வயது முதிர்ச்சியாலோ நோய்கள் வந்தோ நாய்கள் இறந்தால் அழுதபடியே அதைப் பார்த்திருந்து மரியாதையோடு அடக்கம் செய்வார். லேடீஸ் பங்களாவைச் சுற்றி அத்தனை கல்லறைகள்.

நாய்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவார் ஆலிஸ். மூன்று வேளையும் உணவளிப்பார். உள்ளேயும் வெளியேயும் பதினைந்துக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வந்தார்.

அவை ஒவ்வொன்றுக்கும் தன் உறவுகளின் பெயர்களை வைத்து அன்பாய் அழைப்பார்.

இப்படி எவ்வளவோ நினைவுகள் தேவதை ஆலிஸின் ஆம்பூர் வாழ்வில்.

டாக்டர் ஆலீஸுக்கு இப்போது வயது 87. இதில் (1948-1968) 20 ஆண்டுகள் மட்டுமே அமெரிக்க வாழ்க்கை… அதுவும் கல்வி பயின்ற காலம்.

மீதமான 67 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தார். 10 ஆண்டுகள் (1938- 1948) நாகர்கோவில், கொடைக்கானல்.. பால்ய பருவம். 57 ஆண்டுகள் ஆம்பூர் வாழ்க்கை.

தன் கடைசி மூச்சு வரை மக்களுக்காகவே வாழ்ந்தார் ஆலிஸ். செப்டம்பர் 29 ஆம் தேதியன்று ஆலிஸ் தம் நேசிப்பை நிறுத்திக்கொண்டார்.

You might also like