‘ஆயுதம் ஏந்தியவன், ஆயுதத்தால் அழிவான்’ என்பார்கள். வரலாற்றில் இதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. துப்பாக்கி தூக்கும் தீவிரவாதிகள், துப்பாக்கிக்கு இரையாவது நிகழ்கால உதாரணம். தாதாக்கள், ரவுடிகள் போன்ற கிரிமினல்களின் முடிவுகளும், இதே வகையில் முடிகின்றன.
இந்த ரகத்தினர், எதிரிகளின் ஆயுதங்களுக்கு பலியானால், அது – கொலை. போலீசாரின் தோட்டாக்களுக்கு இரையானால், அது – ‘என்கவுண்டர்’.
தமிழகத்தில் 1980-களில் நக்சலைட்டுகள் பலர், போலீசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்கள். அதன் பின், அமைதியாக இருந்த தமிழகத்தில், ஆதாயக் கொலை, நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து என ரவுடிகளும் தாதாக்களும் புதிய ‘தொழில்’ துவங்கினர்.
இணை அரசாங்கம் நடத்தினர். போலீசாருக்கு அடங்க மறுத்தனர். அந்த கிரிமினல்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தி, அவர்களின், கொட்டங்களை அடக்க வேண்டியதாயிற்று. ‘என்கவுண்டர்’ என்ற பதம் அதன்பிறகே பரவலானது.
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் நெல்லையில் சீவலப்பேரி பாண்டியை போலீசார் சுட்டுக்கொன்றது தமிழ்நாட்டின் முதல் ‘என்கவுண்டர்’ எனச் சொல்கிறது போலீஸ். அதன்பின், ஏராளமான ‘என்கவுண்டர்கள்’ அரங்கேறின.
அயோத்திக் குப்பம் வீரமணி:
சென்னையில் நிகழ்ந்த ‘என்கவுண்டர்’களில், மிக முக்கியமானது ‘அயோத்திக் குப்பம் வீரமணி’யின் ‘என்கவுண்டர்’. மும்பையில் தாவூத் இப்ராஹிம் போன்று சென்னையில் செயல்பட்ட கடல் திமிங்கலம் வீரமணி.
மெரினா கடல்பகுதியே இவரது தளம். நடுக்கடலில்தான் இவரது கட்டப் பஞ்சாயத்துகள் நடக்கும்.
போலீசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரமணி மீது கொலைகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
2003-ம் ஆண்டு ஜுலையில் இவரது கதையை முடித்து வைத்தது, வெள்ளத்துரை தலைமையிலான போலீஸ் ‘டீம்’.
அத்தனை சுலபத்தில் வீரமணியை, போலீசாரால் நெருங்க முடியாது. லுங்கி அணிந்து பேப்பர் பொறுக்குபவர்கள் போல், மெரினா கடற்கரையில் உலாவி, அவரது நடமாட்டத்தை கண்காணித்தது, வெள்ளத்துரை டீம்.
படகு மூலம், கடலிலிருந்து இறங்கி தரைக்கு வந்ததும், வீரமணியின் மார்பில் சுட்டு, அவருக்கு முடிவுரை எழுதியது, சென்னை போலீஸ்.
2003-ம் ஆண்டு தி.மு.க. நடத்திய பேரணியில் ஒன்பது பேர் கொலை செய்யப்பட்டனர். இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வீரமணி என்று சொல்லப்பட்டது.
பிரபல நடிகரை மிரட்டியது, ‘பீச்’சில் ‘வாக்கிங்’ சென்ற காவல்துறை உயர் அதிகாரி மனைவியிடம் வம்பு செய்தது என்பன போன்ற புகார்களும் வீரமணி மீது உண்டு.
அப்போது சென்னை காவல்துறை ஆணையராக இருந்த விஜயகுமார், “போலீசார் தோள்களில் தொங்கும் துப்பாக்கிகள், வெறும் அணிகலங்கள் அல்ல” எனச் சொல்லி, இந்த என்கவுண்டருக்கு நியாயம் சேர்த்தார்.
வீரமணி கொல்லப்பட்ட அடுத்த ஆண்டிலேயே ‘சந்தன வீரப்பன்’, தர்மபுரி அருகே ‘என்கவுண்டர்’ செய்யப்பட்டார். அதன் பின் அங்கொன்றும், இங்கொன்றுமாக தோட்டாக்கள் வெடித்து வந்த நிலையில் இப்போது, அடிக்கடி ‘என்கவுண்டர்கள்’அரங்கேறி வருகின்றன.
ஏன்? எதற்கு? எப்படி?
விரிவாக அலசலாம்.
ரவுடிகள் மொழியில் பதில்..
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங், கடந்த ஜுலை மாதம் 5-ம் தேதி சென்னையில் அவரது வீட்டருகே வெட்டிக் கொல்லப்பட்டார். தலைநகரில் நிகழ்ந்த இந்த படுகொலை, அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து சென்னை மாநகரக் காவல்துறை புதிய ஆணையராக அருண் பதவி ஏற்றார்.
நாற்காலியில் அமர்ந்ததும், அவர், “ரவுடிகளுக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும்” என எச்சரித்தார்.
வரிசையாக ‘என்கவுண்டர்கள்’ நடக்கப்போவதை கோடிட்டுக் காட்டியே ஆணையர் அருண், இவ்வாறு சொன்னார் என்பதை சென்னையில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் நிரூபித்தன.
அருண் பதவி ஏற்றபின், போலீஸ் துப்பாக்கிக் குண்டுக்கு முதலில் இரையானது, திருவேங்கடம் என்ற ரவுடி. ஆர்ம்ஸ்ட்ராங், கொலையில் கைதாகி போலீஸ் காவலில் இருந்த அவர், புழல் அருகே ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ளதாகச் சொன்னார்.
அதனை கைப்பற்ற ஜுலை 14-ம் தேதி தனிப்படை போலீசார் அழைத்துப்போனார்கள். ரெட்டேரி அருகே, போலீசைத் தாக்கிவிட்டு, தப்ப முயன்றபோது, திருவேங்கடம் ‘என்கவுண்டர்’ செய்யப்பட்டார்.
தனி ஒரு ரவுடி, போலீஸ் படையைத் தாக்கும் அளவுக்கு ‘துணிச்சல் ‘ பெற்றிருந்தது, போலீசுக்கு விடப்பட்ட சவாலாகவே கருதப்பட்டது.
இதனால், சென்னையை அச்சுறுத்தும் ‘ஏ’ பிளஸ் ரவுடிகளைக் கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்த படையிடம் கடந்த 18-ம் தேதி சிக்கினார், ‘காக்கா தோப்பு ‘ பாலாஜி,
5 கொலை வழக்குகள் உள்ளிட்ட 59 வழக்குகளில் தொடர்புடைய பாலாஜி, வியாசர்பாடியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார். தங்களை தற்காத்துக் கொள்ள போலீசார் சுட்டனர். பாலாஜியின் கதை முடிந்தது.
பாலாஜியின் கதை முடிந்த 5 நாட்களில், ‘சீசிங்’ ராஜா எனும் ரவுடியின் அத்தியாயமும் முடிவுக்கு வந்தது. ’ஏ’ பிளஸ் ரவுடியான இவர் மீது, 6 கொலை வழக்கு உள்ளிட்ட 39 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆந்திராவில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை என்ற இடத்தில் ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ளதாகச் சொன்னதால், அவரை அந்தப் பகுதிக்கு போலீசார் கடந்த 23-ம் தேதி அழைத்துப் போனார்கள்.
கண் இமைக்கும் நேரத்தில் அங்குள்ள புதரில் புதைத்து வைத்திருந்த துப்பாக்கியைப் பாய்ந்து சென்று எடுத்து போலீசாரை குறி வைத்து சுட ஆரம்பித்தார், ராஜா.
தங்களை தற்காத்துக்கொள்ள, போலீசார் ராஜாவை திருப்பி சுட நேரிட்டது. ‘மார்பில் குண்டுகள் பாய்ந்து, அந்த இடத்திலேயே, சுருண்டு விழுந்து பலியானார், ராஜா.
ரவுடி தொழிலை தொடங்குவதற்கு முன்னர், இவர் தனியார் வங்கியில், வேலை பார்த்தார். தவணை கட்டாத வாகனங்களை பறிமுதல் (சீசிங்) செய்வது தொழில். இதனால் ராஜாவின் பெயருக்கு முன்னால் ‘சீசிங்’ ஒட்டிக் கொண்டது. இவருக்கு. ஆர்ம்ஸ்டாங் கொலையில் தொடர்பு கிடையாது.
நாமக்கல் என்கவுண்டர்..
சென்னையில் ரவுடிகளை தேடித்தேடி போலீசார் வேட்டையாடி, விளையாடிக் கொண்டிருக்க, நாமக்கல்லில் போலீஸ் வலையில் எதிர்பாராமல் வந்து விழுந்தார் ஜுமான்.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர், கேரளாவின் திருச்சூரில் வங்கி ஏ.டி.எம்.மில் கொள்ளையடித்து விட்டு, கன்டெய்னர் லாரியில், தனது சகாக்கள் 5 பேருடன் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
நாமக்கல் அருகே 6 பேரும் நமது போலீசில் சிக்கினர். தப்பி ஓட முயன்றபோது, ஜுமான், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
சென்னை ‘என்கவுண்டர்’களுக்கு சில நாள் முன்னதாக புதுக்கோட்டையில் துரை என்ற ரவுடி, ‘என்கவுண்டரில்’ வீழ்த்தப்பட்டிருந்தான்.
இவனையும் சேர்த்து தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 5 கிரிமினல்கள் ‘என்கவுண்டர்’ செய்யப்பட்டுள்ளனர்.
தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், போலீசார் கொளுத்தும் ‘பட்டாசுகள்’, ரவுடிகளை, தமிழ்நாட்டைவிட்டே தலை தெறிக்க ஓட வைத்துள்ளது நிஜம்.
பொம்மை துப்பாக்கிகளும், ரவுடிகளை இனி கதி கலங்கச் செய்யும் என்பது அதனினும் நிஜம்.
முந்தைய அதிமுக ஆட்சியின்போது சாத்தான்குளத்தில் தந்தை, மகன் போலீசாரால் கொல்லப்பட்டதற்கு, தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை, தற்போதைய என்கவுண்டர்களையும் விமர்சித்து, தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
– மு.மாடக்கண்ணு