நா.முத்துக்குமார் பார்த்த மனிதர்கள் நம்முன்னே தெரிகிறார்கள்!

நூல் அறிமுகம்: கண்பேசும் வார்த்தைகள்

பாடல் வரிகள் பிறந்த விதமும் எந்தெந்த சூழ்நிலையில் வரிகளுக்கு உயிர் கொடுக்கப்பட்டது என்ற தகவலும் நா.முத்துக்குமார் சந்தித்த மனிதர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட பல வரிகள் தான் இன்று நாம் கேட்டுக் கொண்டிருக்கும் ஏராளமான பாடல்கள்.

நா.முத்துக்குமார் அவர்களின் ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு தாக்கத்தை கொடுத்துக் கொண்டே வருகிறது. இந்தப் புத்தகம் கொஞ்சம் வலியோட கனத்த இதயங்களும் கரையாமல் நின்று கொண்டு பாடல் இசைப்பதாக இருக்கிறது.

படத்துக்கும் படத்தின் காட்சிகளுக்கும் ஏற்றவாறு எழுதும் பாடலாசிரியர்கள் அவரவர் அனுபவத்தால் வாழ்வில் நடந்தேறியதை உணர்வுகளோடு கொண்டு வந்து சில வரிகளோடு இசையமைத்து கேட்ட பிறகு தான் அவர்கள் எழுதின அந்த வரிகளின் உயிர்ப்பை தக்கவைத்துக் கொள்கிறார்கள்.

கல்லூரி நாட்களில் நண்பர்களோடு வெளியே சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு கடையில் டெலிபோன் பூத்தில் ஒரு பெண் தன் காதலுடன் கொஞ்சி குலாவிக் கொண்டிருப்பதை இவர்கள் பார்த்து ரசிக்கிறார்கள் அவளையும் அவள் கொஞ்சலையும்.

அப்படி எடுக்கப்பட்ட அந்த வார்த்தைகள் தான் – “செல்லமே செல்லமே என்றாயடி” பாடல்.

ஐயர் வீட்டு நண்பரின் அக்கா இவருக்கும் நண்பராகிப்போக அக்காவின் காதலுக்கு மீன் வாங்கிக் கொடுத்து சமைத்து பழக உதவுகிறார் நா.மு.

ஊதுபத்தி ஏற்றிவைத்து மீன் சமைத்த அக்காவை நினைத்து புன்னகைக்கிறார், பின்னாளில் அவளுக்காக அவர் கணவரே சைவமாக மாறியதைக் கண்டு.

அந்த நினைவின் நிமித்தமே;

“ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா
லவ் மேரேஜ்னு தெரிஞ்சுக்கோ” பாடல்.

காதல் திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சி சென்னை to திண்டிவனம் எடுத்துருக்காங்க.

அதற்கான வரிகள் அமைக்க கட்டாயம் சென்னையிலிருந்து திண்டிவனம் ஒரு பயணம் செய்தாக வேண்டும் என்று சொன்னதால் நா.மு. அவர்கள் அந்தப் பயணம் சென்று திரும்பிய போது பேருந்து நிறுத்தத்தில் எழுதிய பாடல் தான்

“உனக்கென இருப்பேன் பாடல்”.

‘நிலவொளியை மட்டும் நம்பி
இலை எல்லாம் வாழ்வதில்லை’.

எனக்கு இந்தப் பகுதியில் மிகவும் பிடித்த, கவர்ந்த ஒரு பின்னணிக் கதையின் பாடல் பிறந்த ஒரு தோல்வியுற்ற காதலின் கதை தான்.

பட்டாம்பூச்சி விற்கும் அந்த ‘சுகுமாரன்’ காதல். சுகுமாரன் எப்படி நா.மு அவர்களை சந்தித்தாரோ அதே எண்ணம் இவரின் கதை அவரை தேட வைக்கிறது. சுகுமாரின் காதலுக்கும் அவரை நினைவில் நிறுத்தவும் எழுதப்பட்ட பாடல்;

“தேவதையைக் கண்டேன்
காதலில் விழுந்தேன் ” பாடல்.

இப்படி நிறைய பாடல்கள் பிறந்த விதத்தை ஆசிரியர் குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் தான் இந்தப் புத்தகத்தில் கொடுத்துள்ளார். அதுவும் சில ‘வரிகள்’ தான் ஒவ்வொரு நினைவின் அங்கமாக இருக்கிறது.

ஒரு பாடலில் ‘பல்லவி’, ‘சரணம்’ (2 அல்லது 3) இடம்பெறும். அப்போ மொத்த வரிகளையும் நாம் நினைத்துப் பார்த்தால் எவ்வளவு கதைகள், எவ்வளவு நினைவுகள் இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தால் நா.மு வை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதற்கான கதைகளை கூறுங்கள் என கேட்டுத் தெரிந்து கொள்வோம். அந்த அளவிற்கு வரிகளின் கனம் நிறைந்தது.

இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், துணை இயக்குனர் என்று பிரபலங்கள் அனைவரும் இதில் அடக்கம். ஏனென்றால் பாடல்கள் அந்த அளவிற்கு குறிப்பிடத்தக்கது. ஒரு ஒற்றுமையை அனைத்து இசையமைப்பாளர்களிடம் என்னால் பார்க்க முடிந்தது.

நா.முத்துக்குமார் அவர்களும் இரவில் எழுதத் தொடங்கி நள்ளிரவு / விடிகாலை வரை எழுதிய பாடல் வரிகளும் இங்கு அதிகம். இரவு தான் அனைத்திற்கும் அந்தமாய் இருக்கின்றது.

அந்த அமைதியான நிலா வெளிச்சத்தின் நடுவே இரைச்சலற்ற ஒரு தனிமையை எல்லாருக்கும் பிடித்தமானதாக அமைத்து விடுகிறது இந்த இரவு.

வண்ணத்துப் பூச்சிக்கும் இரவுக்கும் ஒரு பந்தம் இருக்கு. அதுதான் அந்தப் பூச்சியின் இரவு இசை. அதை கேட்பவர்கள் ஜாம்பவான்கள்!

இனி இந்தப் பாடல்களை கேட்கும்போதெல்லாம் நா.மு பார்த்த மனிதர்கள் தான் என் பார்வையிலும் வருவார்கள். 

– சரண்யா

*****

நூல்: கண்பேசும் வார்த்தைகள்
ஆசிரியர்: நா.முத்துக்குமார்
டிஸ்கவரி புக் பேலஸ்

பக்கங்கள்: 120
விலை : ₹140/-

You might also like