முன்மாதிரியான பெண் மருத்துவர்!

மருத்துவர் பிரித்திகா சாரி அம்மையார் அவர்களுக்கு மனமார்ந்த வணக்கம்.

தனது வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் கவனமாக செதுக்கியிருக்கிறார் இந்த மதிப்பிற்குரிய அம்மையார்.

தனது வாழ்க்கையில் முதுமைக் காலத்தில் ஏற்பட்ட மிகக் கொடிய நோயைக் கூடத் தேர்ந்த சிந்தனையுடனும், அறிவு பூர்வமாகவும் முடிவு செய்து, அதற்கான வழிமுறைகளை வகுத்துக் கொண்டிருக்கிறார்.

அவர் கூறுகின்ற ஒவ்வொரு விஷயங்களும் இன்றைய இளைய சமூகத்தினருக்கு கூறப்படுகின்ற மிக முக்கியமான செய்திகளாகும்.

இளம் வயதிலே நரம்பியல் துறையில் பட்டம் பெற்றிருக்கிற பிரித்திகா சாரி, நரம்பியல் அறுவை சிகிச்சையிலும் பட்டம் பெற்றிருக்கிறார். 46 ஆண்டுகள் அனுபவத்துடன் நரம்பியல் துறையில் சேவையாற்றி வருகிறார். வலிப்பு நோய் குறித்த பிரிவிலும் தனக்கான தனி இடத்தைப் பதித்துக் கொண்டிருக்கிறார்.

சென்னை மயிலாப்பூரில் மருத்துவமனையைத் தொடங்கி இருக்கியிருக்கும் இவர், தற்போது காவேரி மருத்துவமனையில் நரம்பியல் பிரிவுத் தலைவராகவும் இருக்கிறார்.

முன்பு, அழகான தோற்றம் இருந்தால்தான் சாதனைகளைப் படைக்க முடியும் என்று சிலர் நம்பிக் கொண்டிருந்த சமூகத்தில், அது தவறான கருத்து என்பதைத் தனது செயல்பாடுகள் மூலம் நிரூபித்தார் டாக்டர் பிரித்திகா சாரி.

கல்வி அறிவினால் பல்வேறு விஷயங்களைச் சாதிக்க முடியும் என்பதற்கு  உதாரணமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

வேறு சில காரணங்களுக்காக திருமணத்தைத் தள்ளிப் போட்டாலும் கூட, சமூகத்திற்கு தன்னாலான பங்களிப்பை ஆக்கப்பூர்வமாக செய்யவேண்டும் என்ற ஒற்றைக்  குறிக்கோளோடும், அது குறித்து சிந்தனையுடன் திட்டமிட்டுச் செயல்பட்டு வந்திருக்கிறார் மருத்துவர் பிரித்திகா சாரி.

தனக்கு ஏற்பட்ட புற்றுநோய், பலருக்கும் பரவியிருப்பதை அறிந்த அவர், அந்த நோயைப் பற்றிய சரியான புரிதலையும், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையும் நன்றாக உணர்ந்து, அந்த முடிவில் எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளாமல் கடினமான எல்லாச் சூழல்களையும் கடந்து வந்திருக்கிறார்.

அதனால் தான் மரணத்தைப் பற்றிய எந்த வித அச்சமும் இல்லாமல், மக்களுக்கு விழிப்புணர்வைத் தர வேண்டும் என்ற தெளிவான எண்ணத்தோடு இருக்கிறார்.

“பூமியில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் இந்த சமூகத்திற்கு ஏதாவது ஒரு பங்களிப்பைச் செய்துவிட்டுப் போக வேண்டும்; அதுவும் அந்தப் பங்களிப்பை உரிய முறையில் செய்ய வேண்டும்.

அந்தப் பங்களிப்பின் மூலம் மக்களுக்குப் பலன் கிடைக்க வேண்டும்;  அதுவே இந்த உலகில் நாம் வாழ்ந்ததற்கான அடையாளம்” என்பது தான் இந்த மருத்துவரின் அசைக்க முடியாத எண்ணம்.

இந்தப் புரிதல் இருப்பதால், இந்த வயதிலும் தனிமையாக இருந்தாலும் கூட, தனக்கான வேலைகளை, தானே செய்து கொண்டும்,

முடியாத சூழலில் மட்டும் நண்பர்களின் உதவியை நாடுவது என மிக எளிமையான, நிறைவான ஒரு வாழ்க்கையை இவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இவரைப் போன்றவர்களது வாழ்க்கை, இன்றைய இளைய தலைமுறையினருக்கு மிகப்பெரிய பாடம்.

இன்றைய தலைமுறை நுகர்வுக் கலாச்சாரத்தில் மாட்டிக்கொண்டு, வாழ்க்கையில் விரைவில் முன்னேறி விட வேண்டும்; பணம் மட்டுமே அதிகம் சம்பாதிக்க வேண்டும்;

செல்வம் சேர்க்க வேண்டும்; அதற்கான பாதையை மட்டும் முதன்மையாகக் கொண்டு, மற்ற சமூகச் சிந்தனைகள் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

இளைஞர்கள் மட்டுமல்ல, முதியவர்கள் கூட ஓய்வுக் காலத்திற்குப் பிறகு, தங்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் இருந்தாலும், தங்களுக்கான தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்யும் அளவிற்கு ஓய்வூதியமோ அல்லது வேறு சில வருமானங்களும் இருந்தாலும் கூட,

வீட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒடுங்கி, எந்தவிதமான அக்கறையும் இல்லாமல், மன அழுத்தத்துடன் வாழ்கின்ற ஒரு அவலநிலை இன்று இந்தியா முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது.

குழந்தைகள், பேரன்கள், பேத்திகள், உறவுகள் என இதுகுறித்த சிந்தனையோடு மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய முதியோர் கூட்டம், தாங்கள் ஒதுக்கப்பட்டு விட்டோம், புறக்கணிக்கப்பட்டு விட்டோம் என்ற ஒரு எண்ணத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறது.

என்னைப் பொருத்தவரை இது தேவையற்ற சிந்தனை.

உலகத்தில் எத்தனையோ மூலைகளில், எவ்வளவோ முதியோர்கள் மிகவும் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மகிழ்ச்சி என்பது மனநிலையை பொறுத்தது.

உடல் சோர்வைத் தவிர்க்க முடியாது. உடல் சோர்வை மீறிய ஒரு ஆரோக்கிய வாழ்க்கை முறையை நாமே தான் வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

அதற்கான சிந்தனைத் துளிகளே மருத்துவரின் பதிவு.

இதில் கவலைக்குரிய ஒரு விஷயம் என்னவென்றால், முதியவர்களாக இருப்பவர்களுக்கு நிதி சுதந்திரம் இல்லாமல், குழந்தைகளால் புறக்கணிக்கப்பட்டு அவர்களது வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய இயலாத நிலையில் எத்தனையோ முதியவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கான வாழ்வியல் இன்னும் சரியாக இல்லை. இப்படிப்பட்ட முதியவர்கள் மீது அக்கறை செலுத்த அரசாங்கம் முன்வர வேண்டும்.

சமீபத்தில், 70 வயதுக்கு மேல் இருக்கும் முதியவர்களுக்கான பாதுகாப்புத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடைமுறைப்படுத்த இருக்கிறது.

அந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

மத்தியிலும், மாநிலத்திலும் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், முதியோர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் நோக்கமாக இருக்கிறது.

மருத்துவ ரீதியாக, சுகாதார ரீதியாக முதியவர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். அதையும் தாண்டி, அவர்களுடைய இறுதிக்காலம் வரை எல்லாச் சூழல்களையும் மனவலிமையோடு எதிர்கொள்ள வேண்டும்.

தங்களுக்குப் பிடித்தமான, விருப்பமான காரியங்களை செய்ய வேண்டும். ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும்.

அதற்கான பங்களிப்பை தங்களால் முடிந்த அளவு ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்பதையே இந்த மருத்துவரின் பேச்சும், வாழ்வும் நமக்கு உணர்த்துகிறது.

நாமும் நம் சமூகத்திற்கு தன்னாலான பங்களிப்பை வழங்குவோம்.

 – தமிழ் பாலன்

#Cancer #Survivor #Prithika_Chary #cancer #cancer_survivor #neurosurgeon #Indias_first_lady_Neurologist  #முதல்_பெண்_நரம்பியல்_மருத்துவர் #டாக்டர்_பிரித்திகா_சாரி #இளைஞர்கள் #முதியவர்கள் #புற்றுநோய் #மருத்துவமனை #சென்னை_மயிலாப்பூர் #நரம்பியல் #அறுவை_சிகிச்சை #இந்தியா

You might also like