வேளாண் சுற்றுலாவை முன்னெடுப்போம்!

உலக சுற்றுலா தினம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது. கலாச்சார மரபுகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் சுற்றுலாவைப் பரந்த நோக்கில் அணுகுவதே உலக சுற்றுலா தினத்தின் நோக்கம்.

ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் சுற்றுலா பங்களிப்பு முக்கியமானது. இதை புரிந்து கொள்ள வேண்டும்.

நிலையான நடைமுறைகள் மூலம் சுற்றுலாவை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும். உலக நாடுகளுக்கு இடையேயான நல்லுறவைப் பேணுவதற்கும் அந்நிய செலவாணியை ஈட்டுவதற்கும் சுற்றுலா முக்கியப் பங்களிப்பு செய்து வருகிறது.

கரோனா முடக்கத்தால் இலங்கைபோன்ற பல நாடுகள் சுற்றுலா வருமானத்தை இழந்து, பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பொருளாதாரம் சுற்றுலா வருமானத்தால் மேம்படுகிறது.

பல்வேறு காரணிகளால் சமூகத்தில் மன அழுத்தம் மேலோங்கி இருக்கும் காலகட்டத்தில், சுற்றுலா பெரும் நிவாரணியாக அமையும். 1980-ல் ஐக்கிய நாடுகள் சபை உலக சுற்றுலா அமைப்பை (UNITED NATIONS WORLD TOURISM ORGANISATION) உருவாக்கியது.

சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார மதிப்புகளை பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.

அரசு நிறுவனங்களும், சுற்றுலா அமைப்புகளும் இந்தநாளில் கண்காட்சிகள், கருத்தரங்குகள் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

2024-ம் ஆண்டுக்கான உலக சுற்றுலா தின நோக்கம், “சுற்றுலாவும் அமைதியும்” என்பதாகும். உலக அமைதியை முன்னெடுக்க, சுற்றுலா முக்கியமான சாதனமாகப் பயன்படுத்த முடியும் என்பதே இதன் பொருள்.

வேளாண் சுற்றுலா…

உலக சுற்றுலா தினத்தில் வேளாண் சுற்றுலாவைப் புரிந்து கொள்ளவும், வளர்த்தெடுக்கவும் உறுதி ஏற்போம். பல்வேறு நாடுகளில் வேளாண் சுற்றுலா முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தியாவில் வேளாண் சுற்றுலாவை ஆழமாகப் புரிந்துகொண்டு, அதை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

வேளாண் சுற்றுலா, கிராமப்புறங்களில் விவசாயப் பண்ணைகளை பார்வையிடவும், விவசாயிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வழிவகை செய்கிறது.

விவசாய அனுபவங்கள் பெறவும், கிராமப்புற வாழ்வைப் புரிந்து கொள்ளவும் இது பாலமாக அமைகிறது.

விவசாய அனுபவங்களை மையமாகக் கொண்டு, வேளாண் கல்வி மற்றும் கிராமப்புற வாழ்க்கையுடன் நேரடித் தொடர்பை வழங்குவது, சூழல் நட்பை உருவாக்குவது, விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் ஈட்டித் தருவது இதன் நோக்கங்களாகும்.

இளைஞர்களை ஈர்க்கும்மேலும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும் வேளாண் சுற்றுலா வழிவகுக்கும். புதிய அணுகுமுறையில் விவசாயத்தில் ஈடுபட இளைஞர்களை ஈர்க்கும்.

வேளாண் சுற்றுலாவை முன்னெடுக்க மாநில அரசு, இதற்கான கொள்கைகளை உருவாக்க வேண்டும். இதை வேளாண் சார்ந்த தொழிலாக அங்கீகரிக்க வேண்டும். விவசாயத்துக்கான திட்டங்களில் வேளாண் சுற்றுலா இடம் பெற இது வழிவகை செய்யும்.

அதேநேரத்தில், போக்குவரத்து, மின்சாரம், தண்ணீர் போன்ற சுற்றுலாவுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

இதில் ஈடுபட்டுள்ள பல்வேறுஅமைப்புகளை ஒருங்கிணைத்து, ஒன்றுபட்ட செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். மாநில அளவில் இதற்கான பிரச்சாரத்தை உருவாக்க வேண்டும்.

கண்காணிக்க வேண்டும்:

மேலும், விவசாயிகளிடம் இது குறித்த ஆர்வத்தை உருவாக்கி, இதற்கான திறன்களை மேம்படுத்த பயிற்சியளிக்க வேண்டும். வேளாண் சுற்றுலாவை மேற்கொள்ள கடனுதவி, மானியங்கள் வழங்க வேண்டும்.

வேளாண் சுற்றுலாவை முறையாகத் திட்டமிட்டு, கண்காணித்து, உரிய முறையில் செயல்படுத்தினால், இந்த திட்டத்தில் தமிழகத்தை முன்னிலை வகிக்க செய்யலாம்.

உலக சுற்றுலா தினத்தில் வேளாண் சுற்றுலாவை முனைப்புடன் முன்னெடுக்க உறுதி ஏற்போம்.

– கு.செந்தமிழ்ச் செல்வன், ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு வேளாண் சுற்றுலாக் கூட்டமைப்பு சென்னை மண்டலம்.

  • நன்றி: இந்து தமிழ் திசை நாளிதழ்
You might also like