இன்றும் உயிர்ப்போடு இருக்கிறார் எம்.ஜி.ஆர்.!

இராமாயணம் என்ற புராண இதிகாசத்தைப் பற்றி இந்தியாவில் பலருக்கும் தெரியும். வடமொழியில் வால்மீகியும் தமிழில் கம்பரும் எழுதியிருப்பதும் தெரியும்.

அந்த இராமாயணத்தை நினைவுபடுத்தும் விதத்தில் ‘இராமச்சந்திராயணம்’ என்ற நூலை படைத்திருக்கிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் மீது பெரும் பற்றுக் கொண்டவரும் டாக்டர் எம்.ஜி.ஆர் ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும் தலைவருமான நண்பர் ஜெ.ஹரி பிரசாந்த்.

திருவள்ளுவரின் குறளோடு துவங்குகிற நூலின் முன்னுரையில் “மக்கள் திலகத்தின் மீது நான் கொண்டிருக்கும் பக்தியின் வெளிப்பாடே இந்த நூல்” என்கிறார் நூலாசிரியரான ஹரி பிரசாந்த்.

பொன்மனச் செம்மலைப் பற்றி 108 நூற்பாக்களை இயற்றி அதற்கு விளக்கவுரையும் எழுதப்பட்டிருக்கிற இந்த நூல் தாய்த்தமிழ் வாழ்த்துடன் துவங்குகிறது.

கம்பனுக்கான நன்றிக்கடனாக செலுத்தப்பட்டிருக்கிற இந்த நூலில் புரட்சித் தலைவரைப் பற்றி சங்கத் தமிழ் தோய்ந்த சொற்களுடன் விதவிதமாகப் பாராட்டியிருக்கிறார் ஆசிரியர்.

நூல் முழுக்க கவித்துவம் கலந்த எளிய சொற்களில் பாக்களைப் படைத்திருக்கிறார்.

“அண்ணன் அவன் இதயத்தின் கனியே” என்றும், “எழுபது வரை வாழ்ந்த சரித்திரமே எங்கள் எழுச்சி” என்றும்,

“சந்திரனாய்ப் பிறந்தாய் சூரியனாய் வளர்ந்தாய், சாதனை இலையாய் வாழ்ந்தாய் – நல்லதோர் சத்துணவு தந்து தாயுமானாய்” என்றும், “கடை நீதி வள்ளலின் செம்பாதி” என்றும் விதவிதமாக நீளுகின்றன இந்த நூலில் உள்ள நூற்பாக்கள்.

“அண்ணலின் அசராத வெற்றிக்கு ஆதாரம் அவர் செய்த அறம் தந்த ஆரம்” என்கிறார் ஒரு நூற்பாவில்.

இன்னொரு நூற்பாவில் “தம்மை இகழ் மாக்களையும் பொறுத்த மன்னனின் இஃதியல்பு என்கிறார்.

நிறைவாக 108-வது பாடலில் “புகழ் வாசியென வாழ்ந்த வள்ளலே, யோசித்தேன் பூசிக்க உனக்கில்லை நிகர்” என்று முடிக்கப்பட்டிருக்கிறது இந்நூல்.

முடிவுரையில் “தப்பா இருப்பின் தவிர்ப்ப நன்பாயெனின் அன்பா ஆதரிப்ப நண்பா என்பா” என்கிற பாடலுடன் நிறைவடையும் இந்த நூலை தன்னுடைய ஆசைப் பெருக்கால் இந்நூலை இயற்றியிருப்பதாக தெரிவித்திருக்கிறார் நூலாசிரியர்.

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி இதுவரை எத்தனையோ நூல்கள் அவரவர் கோணத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.

அவற்றில் சில நூல்கள் செய்யுள் வடிவிலும் எழுதப்பட்டிருக்கின்றன.

இந்நூலும் அப்படித்தான் – எளிய காவிய தன்மை கொண்ட நயத்துடன் எழுதப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு.

மக்கள் திலகம் அவர்களின் திரை மற்றும் அரசியல் வாழ்வுக்கு பின்னிருக்கிற அறத்தையும் மக்களுடன் அவருக்கிருந்த நல்லிணக்கத்தையும் மக்கள் நேயத்தையும் மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிற இந்த நூலாசிரியர் ஹரி பிரசாந்த் அவர்களை டாக்டர். எம்.ஜி.ஆர் அவர்களின் உறவினர் என்கிற முறையில் மனதாரப் பாராட்டுகிறேன்.

குமார் ராஜேந்திரன்

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” என்று ‘பணம் படைத்தவன்‘ திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் பாடியிருப்பார்.

அதற்கேற்ப அவரை நேசிக்கின்ற கோடிக்கணக்கான தொண்டர்கள் மனங்களில் இன்றும் உயிர்ப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். என்பது தான் வரலாறு உணர்த்தும் உண்மை.

இந்த நூலும் அதைத் தான் உணர வைத்திருக்கிறது. உணர்த்திய ஹரி பிரசாந்த்திற்கு புரட்சித்தலைவரின் ஆசிகள் என்றும் உரித்தாகட்டும்.

  • முனைவர் குமார் ராஜேந்திரன், தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை.

*********

இராமச்சந்திராயணம்
ஜெ.ஹரி பிரசாந்த்
எழிலினி பதிப்பகம்

விற்பனை : எமலால்டு பதிப்பகம்
பக்கங்கள் – 112
விலை: ரூ.200/-

தொடர்புக்கு: 9840696574

You might also like