குளிர் நிலமாக இருந்தாலும், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரவாத வெப்பம் பரவியுள்ள பூமி, ஜம்மு – காஷ்மீர்.
விடுதலைக்கு முன்னர் மன்னராட்சியின் கீழ், தனி நாடாக இருந்த இந்தப் பனிப் பிரதேசம் இந்தியாவுடன் இணைய ஒரு கட்டத்தில் சம்மதித்தது.
இதனால் அந்த மாநிலத்துக்கு மட்டும் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்துக்கும் அளிக்கப்படாத பல்வேறு சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டன. இந்த சலுகைகளால் தீவிரவாதிகள் குளிர் காய்ந்ததால், அவை பறிக்கப்பட்டன.
2019-ம் ஆண்டில் ஜம்மு–காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம், லடாக் மற்றும் ஜம்மு – காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
ஓரளவு அல்லது பெரும்பாலான பகுதிகளில் அமைதி நிலவிய காரணத்தால், ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மட்டும் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
களத்தில் முட்டி மோதும் கட்சிகள்:
இதையடுத்து அரசியல் கட்சிகள், தேர்தல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டன. இந்தத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது.
காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜம்மு – காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன.
மெஹ்பூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இது தவிர வெளி உலகம் அதிகம் அறிந்திராத, அவாமி இத்திஹாத் எனும் கட்சியும் கோதாவில் குதித்துள்ளது.
இந்தக் கட்சியின் தலைவரான ‘என்ஜினியர்’ ரஷீத், கடந்த மக்களவைத் தேர்தலில் பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்.
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லாவைத் தோற்கடித்து ஆச்சரியப்படுத்திய ரஷீத், இந்தத் தேர்தலில் ஜமாத்-இ-இஸ்லாமி, மக்கள் மாநாட்டுக் கட்சி, அப்னி கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.
மக்களவைத் தேர்தலில் சிறையிலிருந்தபடியே போட்டியிட்ட ரஷீதுக்கு, இந்தத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய இடைக்கால ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாகத் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுவந்த ஜமாத் – இ – இஸ்லாமி கட்சி, இந்தத் தேர்தலில் தனது வேட்பாளர்களை, சுயேச்சைகளாகக் களமிறக்கி உள்ளது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய குலாம் நபி ஆசாத் இந்தத் தேர்தலில் தனித்துக் களம் காண்கிறார்.
அமைதியாக நடைபெற்ற 2 கட்டத் தேர்தல்கள்
அந்த மாநிலத்தில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. கடந்த 18 ஆம் தேதி 24 தொகுதிகளுக்கு நடந்த முதல்கட்ட வாக்குப்பதிவில் 61% வாக்குகள் பதிவானது. இது, அனைத்துத் தரப்பினரிடமும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான வாக்குப்பதிவு இது.
2-ம் கட்டமாக நேற்று (25.09.2024) 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. எந்தவித அசம்பாவிதங்களும் இல்லை. நேற்றைய தேர்தலில் 56 சதவீத வாக்குகள் பதிவானது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த, காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் புதிய மாற்றங்களும் அரங்கேறின.
இதுவரை காஷ்மீர் தேர்தலை வெளிநாட்டு ‘அம்பாசிடர்கள்’ நேரில் பார்வையிட அனுமதிக்கப்பட்டதில்லை. முதன் முறையாக ஓட்டுப்பதிவை பார்வையிட வெளிநாட்டு பிரதிநிதிகள் அனுமதிக்கப்பட்டனர்.
அமெரிக்கா, நார்வே, சிங்கப்பூர் உள்ளிட்ட 16 நாடுகளின் தூதரக அதிகாரிகள், தேர்தல் நடவடிக்கைகளை பார்வையிட்டனர்.
‘ஜனநாயக முறையில் வாக்குப்பதிவு நடந்தது’ என அமெரிக்க பிரதிநிதியும், ‘எங்கள் நாட்டை போலவே தேர்தல் நடைபெற்றது’ என சிங்கப்பூர் பிரதிநிதியும் புகழாரம் சூட்டினர்.
மூன்றாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு அடுத்த மாதம் 1 ஆம் தேதி நடைபெறுகிறது . வாக்கு எண்ணிக்கை 4 ஆம் தேதி.
அகதிகளுக்கு வாக்குரிமை
கடந்த 1947 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசித்த இந்துக்கள் அகதிகளாக ஜம்முவில் அடைக்கலம் அடைந்தனர்.
1960 ஆம் ஆண்டில் ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். 370-வது சட்டப்பிரிவின் காரணமாக அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டனர். வாக்குரிமை இல்லாமல் இருந்தது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2019-ம் ஆண்டு 370-வது சட்டப்பிரிவை ரத்துசெய்ததால், இந்து அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை கிடைத்தது. தற்போதைய காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.
அக்டோபர் 1-ம் தேதி நடைபெற உள்ள மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் முதல்முறையாக இவர்கள் வாக்களிக்க உள்ளனர். இதை மிகப்பெரிய திருவிழாவாக அவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
– மு.மாடக்கண்ணு.