மூளையை சுறுசுறுப்பாக்கும் சிறந்த காலை உணவுகள்!

செப்டம்பர் – 25: சிறந்த காலை உணவு நாள்:

நமது அன்றாட உடல் இயக்கத்திற்கு தேவையான சத்துக்கள் என்பது காலையில் எழுந்ததும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளைப் பொறுத்தே அமைகிறது.

இந்த காலச் சூழ்நிலையில் பெரும்பாலானோர் காலை உணவுகளை தவிர்ப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. அதன் காரணமாக உடல் நிலையில் நிறைய மாற்றங்களையும் பிரச்சனைகளையும் சந்திக்கின்றனர் இன்றைய தலைமுறையினர்.

நேரமின்மை மற்றும் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் பெரும்பாலும் காலை உணவைத் தவிர்க்கின்றனர். இதனால் சர்க்கரை நோய் அதிகரிப்பதாகவும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதாக ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.

காலை உணவை தவிர்ப்பவர்களிடம் நடத்திய ஆய்வில் உணவு எடுத்துக் கொள்பவர்கள் விடவும் சாப்பிடாமல் தவிர்ப்பவர்களுக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு அதிகம் என எச்சரிக்கின்றனர்.

உடலில் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றம் ஏற்படுவதால் சர்க்கரை நோய் அதிகரிக்கிறது. உடல் சோர்வு, எடை அதிகரிப்பு, ஹார்மோன் குறைபாடு, மனநிலையில் மாற்றம் என பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

ஆரோக்கியமாக வாழ்வதற்கு காலை உணவு அவசியம். இதனை வலியுறுத்தும் நோக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 25-ம் தேதி சிறந்த காலை உணவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

இதன் நோக்கம் காலை உணவில் எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும் என்பது. அவசரமான நாகரிக சமுதாயத்தில் சாப்பிட்டும் சாப்பிடாமலும், அவசர அவசரமாக ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

ஆனால், சத்தான உணவு என்பது காலையில் அவசியம் என்று யாருக்கும் தெரிவதில்லை. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பால், காபி, டீ என்றுதான் எடுத்துக் கொள்கிறோம்.

பசி வந்தவுடன் வெறும் வயிற்றில் நீங்கள் உண்ணும் முதல் உணவானது குடலை தொந்தரவு செய்யாத, அமிலச் சுரப்பு அதிகம் இல்லாத உணவாக இருப்பது அவசியம். காலை உணவுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

காலை உணவுடன் சிறந்த பழங்கள்:

காலை நாம் எடுத்துக்கொள்ளும் பழங்கள் அன்றைய நாளை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். என்னென்ன பழங்களை காலையில் சாப்பிடலாம்.

ஸ்டாபெர்ரி, ப்ளாக்பெர்ரி, அவ்வுரி நெல்லிக்காய், தர்பூசணி, ஆப்பிள், அத்திப்பழம், மாதுளை, பப்பாளி வாழை மற்றும் மாம்பழம், ஆரஞ்சு, கிவி, திராட்சை போன்ற சிட்ரிக் பழங்கள் காலையில் எடுத்துக் கொள்ளலாம்.

இதில் இருக்கும் வைட்டமின் சி சத்து, வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, மூளைக்கு அதிகமான ஆக்ஸிஜனை அனுப்புகிறது.

எனவே, வைட்டமின் சி நிறைந்த பழங்களை காலையில் எடுத்துக் கொண்டால் அன்றைய நாள் முழுவதும் சோர்வு இல்லாமல் உடலும் மூளையும் சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

காலை சிறந்த தானிய உணவுகள்:

காலை உணவு பெரும்பாலும் இட்லி, தோசை தான் இருக்கும். ஆனால் அதே உணவை சற்று வித்தியாசமான முறையில் கொடுக்கலாம்.

உடைக்காத முழு தானியங்களால் செய்யப்பட்ட இட்லி, தோசையாக கொடுக்கலாம். கம்பு தோசை, இட்லி, சிவப்பரிசி கஞ்சி, கருப்பு கவுனி கஞ்சி, தோசை, உடச்ச உப்புமா, சம்பா ரவை உப்புமா, மக்கா சோள உப்புமா,

கிச்சடி, வெள்ளை சோள தோசை, நவதானிய கோதுமை சப்பாத்தி, சிறுதானியங்களால் ஆனா பொங்கல், முளைகட்டிய பயறுகள், கேழ்வரகு தோசை, இட்லி மற்றும் ரொட்டி போன்ற உணவுகள் வைட்டமின் சி அதிகம் நிறைந்தவை.

மேலும் பால், தயிர், பாலாடைக் கட்டிகளில் சுண்ணாம்புச் சத்தும் இருக்கிறது. இது மூளை மற்றும் நரம்பு மண்டலத்திற்கு தேவையான வலிமையை கொடுக்கிறது.

காலையில் காய்கறி சாலட்கள்:

தேவையான பொருட்கள்:

கேரட் – 1

பீட்ரூட் – ½ கப்

தக்காளி – 1

சின்ன வெங்காயம் – 5

குடை மிளகாய் – ½ கப்

முட்டை கோஸ் – ½ கப்

வெள்ளரிக்காய் – 1 கப்

ஊறவைத்த வேர்க்கடலை – 1/2 கப்

மிளகு தூள் – தேவையான அளவு

எலுமிச்சை சாறு – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை பொடியாக அரிந்து கொள்ளவும்.

நறுக்கிய காய்கறிகள் ஒன்றாக கலந்து உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி பரிமாரினால் வெஜிடபிள் சாலட் ரெடி…

காலை உணவுடன் எப்போதும் பருப்பு, பால், சோயா பீன்ஸ், முட்டை முக்கியமாக இருக்கட்டும்.

ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்றவற்றை காலை உணவாக எடுத்துக் கொண்டால், அவற்றில் இருக்கும் லைசின் என்ற புரதச்சத்து, உடல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.

ஆகவே செப்டம்பர் 25-ம் தேதியான சிறந்த காலை உணவு தினமான இன்று காலை உணவு என்பது நமது உடலுக்கு அவசியம் தேவை என்பதைப் புரிந்து கொள்வோம்.

ஆரோக்கிய வாழ்விற்கு காலை உணவைத் தவிர்க்காமல் உணவுக்காகவே ஓடுகிறோம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு காலை உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து நமது ஆரோக்கியம் காப்போம்.

– யாழினி சோமு

You might also like