என் வாழ்வில் மறக்கமுடியாத புகைப்படம்!

நெகிழும் பத்திரிகையாளர் விகே. சுந்தர்

நான், என் வாழ்வில் எவ்வளவோ புகைப்படங்கள் எடுத்திருக்கிறேன். இயற்கை, சினிமாவில் இன்று உச்சத்தில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள், நண்பர்கள், திருமண நிகழ்வுகள் என என் பார்வையில் பதிவு செய்த புகைப்படங்கள் எண்ணில் அடங்காதவை என்று பேஸ்புக்கில் ஒரு நெகிழ்வான பதிவை எழுதியுள்ளார் பிரபல பத்திரிகையாளர் விகே. சுந்தர்.

இன்று இரவு சாப்பிடும் முன் எடுத்த இந்தப் புகைப்படம் என் வாழ்வில் மறக்க முடியாதவை..!

இது தம்பி ஒருவன் வீட்டிலிருந்து வந்த மீன் குழம்பு பாக்ஸ். அடைக்கப்பட்ட பாக்ஸ்க்கு மேல் இரண்டு காய்ந்த மிளகாய் இருந்தது. அதைப் பார்த்ததும், எனக்கு ஆச்சர்யமும்; அழுகையும் முட்டிக்கொண்டு நின்றது.! அந்தக் குறியீடு யாருக்கேனும் நினைவில் இருக்கிறதா என்று தெரியவில்லை.?!

கிராமங்களில் இரவு ஆறு மணிக்கு மேல் உறவுக்காரர்களுக்கு கறிக்கொழம்பு கொடுத்துவிடுவதாக இருந்தால், ‘அடுப்புக்கரி’த் துண்டோ / அல்லது காய்ந்த மிளகாய் இரண்டையோ போட்டு அனுப்புவது வழக்கம்.!

போகிற வழியில் பேயடித்து விடக்கூடாது என்று அதற்கு காரணம் சொல்லப்பட்டாலும் உறவு விட்டுப் போகக்கூடாது என்றொரு காரணமும் இருந்தது.

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அப்படியொரு அன்பை என் தம்பி, Kbb Naveen னும், அவன் மனைவியும் செய்திருக்கிறார்கள்!

கிராமங்களிலே மறந்துபோன ஒரு வழக்கத்தை இன்று நினைவுபடுத்திய தம்பிக்கு, நான் எதுவும் பெரிதாக செய்துவிடவில்லை; இதுவரை.!

என் உறவு தொலைந்துபோகக்கூடாது என்று நினைக்கும் அவனது குடும்பத்துக்கு, பிரதி உபகாரமாக நான் என்ன செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை..!?

கிராமத்தின் அன்பையும் / குறியீட்டையும் நினைவூட்டி என் பசியாறிய தம்பிக்கு இப்போதைக்கு ‘லவ் யூ டா…’ என்று சொல்வதைத்தவிர வேறொன்றும் இல்லை.

நன்றி: முகநூல் பதிவு

 

You might also like