முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும் கெஜ்ரிவால்!

முன் கூட்டியே டெல்லிக்கு தேர்தல் நடத்த கோரிக்கை

தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி அமைந்துள்ளது. அந்த அரசின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.

இந்த ஊழலில் நிதி மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்ததால், அமலாக்கத் துறையும், இந்த வழக்கில் நுழைந்தது.

இரு மத்திய ஏஜென்சிகளும் கை கோர்த்து செயல்பட்டு, இந்த ஊழல் வழக்கை விசாரித்தன. அவர்கள், ஆம் ஆத்மி கட்சியின் பல தலைவர்கள், மதுபான ஆலை அதிபர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

உச்சக்கட்டமாக முதலமைச்சர் கெஜ்ரிவால், கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. சில நாட்கள் பிரச்சாரம் செய்த கெஜ்ரிவால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஏகப்பட்ட தடைகளுக்குப் பிறகு கடந்த 13-ம் தேதி கெஜ்ரிவால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். எனினும் அவருக்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது. ஆளுநரின் ஒப்புதல் இன்றி கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது என்பன உச்சநீதிமன்றம் விதித்த முக்கிய நிபந்தனைகள் ஆகும்.

சிறையில் இருந்து விடுதலையான கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்துக்கு நேற்று திடீரென, தனது மனைவி சுனிதாவுடன் சென்றார். அங்கு கட்சி நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசினார்.

‘’இன்னும் 2 நாட்களில் டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன் – ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வார்கள்‘’ என அதிரடியாக அவர் அறிவித்தார்.

‘’என்னை நேர்மையற்றவன், ஊழல்வாதி என்று பாஜக குற்றம் சாட்டுகிறது – சட்டப்பேரவைத் தேர்தல் வரை நான் முதலமைச்சர் பதவியில் அமர மாட்டேன்.

டெல்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் செல்வேன் – மக்கள் எனக்கு வாக்களித்த பிறகே முதலமைச்சர் இருக்கையில் அமர்வேன்’’ என அவர் சூளுரைத்தார்.

‘’ஆம் ஆத்மி கட்சியை உடைக்க பாஜக முயற்சி செய்கிறது – பொய் வழக்குகளைப் பதிவு செய்து எங்கள் கட்சி தலைவர்கள் சிறையில் தள்ளப்படுகின்றனர்.

எனது குடும்பத்தினரை சந்திக்கக்கூடாது என்று மிரட்டல் விடுத்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததால், மாநில முதலமைச்சர்கள் மீது வழக்கு தொடரப்படுகிறது.

சித்தராமையா, பினராயி விஜயன், மம்தா பானர்ஜி ஆகிய முதலமைச்சர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன’’ என அவர் கர்ஜித்தார்.

”டெல்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – ஆனால் முன் கூட்டியே, மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலுடன் இணைந்து நவம்பர் மாதம் டெல்லி சட்டசபைக்கும் தேர்தல் நடத்தும்படி, தேர்தல் ஆணையத்திடம் கேட்க உள்ளோம்” என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

இரண்டாம் முறையாக விலகல்

டெல்லியை தளமாக கொண்டு, அரவிந்த் கெஜ்ரிவாலால் கடந்த 2012-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டது.

கடந்த 2013-ம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலில் வென்று, முதன் முறையாக அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார்.

டெல்லி சட்டசபையில் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாததால், 49 நாட்களில் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்.

கடந்த 2020-ம் ஆண்டு தேர்தலிலும் ஆம் ஆத்மி வெற்றி பெற்று 3-வது முறையாக கெஜ்ரிவால் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார்.

அவர் முதலமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவது, இது, இரண்டாம் முறையாகும்.

புதிய முதலமைச்சர் யார்?

இதனிடையே கெஜ்ரிவாலின் பதவி விலகலை ‘நாடகம்‘ என பாஜக விமர்சனம் செய்துள்ளது. ‘அரவிந்த் கெஜ்ரிவாலின் நேர்மை கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே மக்களை ஏமாற்ற அவர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்’ என பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி விமர்சித்துள்ளார்.

‘’இது அரசியல் நாடகம் – கடந்த காலத்தில் மன்மோகன் சிங்கை பிரதமராக்கிய சோனியா, அவரை கைப்பாவை போன்று இயக்கினார் – இதே பாணியை கெஜ்ரிவாலும் பின்பற்றுவார்’ என பிரதீப் பண்டாரி மேலும் தெரிவித்தார்.

கெஜ்ரிவால் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதால், புதிய முதலமைச்சராக யார் பதவி ஏற்கப் போகிறார் என்ற வினா அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, ‘’முதலமைச்சர் பதவியை ஏற்கமாட்டேன்‘’ என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

எனவே கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா புதிய முதலமைச்சராக பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் மறுத்தால், ஆதிஷி, கைலாஷ் கெலாட், கோபால் ராய், சவுரப் பரத்வாஜ் ஆகியோரில் ஒருவர் புதிய முதலமைச்சராக பதவியேற்கக்கூடும்.

டெல்லிக்கு ராஜா அல்லது ராணி, யார்? என்பதை அறிய இரண்டொரு நாட்கள் பொறுத்திருப்போம்.

– மு.மாடக்கண்ணு

You might also like