ரசனைக்குரிய கவிதை:
நீ கொடுத்த சட்டைக்குக் கீழே துடிக்கிறது எனது இதயம்.
சட்டைப் பொத்தான்களில் ஒன்றாக நினைத்து
உன் இதயத்தை
என் பொத்தானுக்கான ஓட்டையில் பொருத்துகிறேன்.
தன்னைத் தானே நேசித்தலின் அடையாளமாய்
ஃப்ளெமிங்கோ பறவைகள் எங்கிருந்தோ பறந்து வந்து
இயற்கைக்கு விரோதமாய் நீல நிறத்தில் என் சட்டையில்.
நான் விநோதமாக உணர்கிறேன்.
நாம் இருவரும் பார்த்துப் பார்த்து செதுக்கியது எல்லாம்
வெறும் பிரம்மைகளின் சிற்பம்.
சேற்று நிலத்தில் தேங்கும் நீரில்
தங்கள் பிம்பம் பார்த்துக் குதூகலிக்கும் பறவைக் கும்பல்
ஒரு வருஷத்துக்கான ஒற்றை முட்டைகளை
என் பாக்கெட்டில் இடுகின்றன.
ருசியான நத்தைகளுக்காக
ஒல்லியான நீண்டு வளையும் கழுத்தைப் பாம்புபோல்
சேற்றில் புதைக்கையில்
பறவைகளின் அலகுகளில் நம் இருவரின் இதயங்கள்.
ஒன்று தெரியுமா உங்களுக்கு?
ஃப்ளெமிங்கோ பறவைகளைக் கூட்டமாய்க்
கனவு கண்டால்
நம்மை நாமே ஏற்றுக் கொண்டோம் என்று அர்த்தம்.
- கவிஞர் இந்திரன்