உடைந்துவிடாமல் வாசிக்கவேண்டும் கவிதைகளை!

கவிஞர் கவின்மலர்

மனுஷ்யபுத்திரனின் இரு தொகுப்புகள் அண்மையில் மதுரையில் வெளியிடப்பட்டன. ‘காதலின் நூறு சம்பவங்கள்’ குறித்து பேராசிரியர் அ.ராமசாமியும் கவிஞர் ஆத்மார்த்தியும் பேசினர். ‘பிரிவின் நூறு சம்பவங்கள்’ தொகுப்பு குறித்து நானும் லிபி ஆரண்யாவும் பேசினோம்.

‘பிரிவின் நூறு சம்பவங்கள்’ பற்றிப் பேசவேண்டும் என மேடையில் அறிவித்தபோதும் இரு தொகுப்புகளையும் ஏற்கனவே மனுஷ் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.

எதைப் பற்றிப் பேசவேண்டும் எனக் கேட்டபோது ‘இரண்டையும் பற்றிப் பேசலாம்.

இரண்டுக்கும் சம்பந்தமில்லாமலும் பேசலாம்’ என்றார். எனவே இரண்டையுமே பேசினேன்.

காதலைப் பற்றிப் பேசாமல் பிரிவை எங்ஙனம் பேசுவது? பிரிவைப் பற்றிப் பேசும்போது கலங்காமல் பேச இயலுமா?

கண்ணீரின்றிப் பேசவேண்டும் என சென்னையிலிருந்து கிளம்பும்போதே வைராக்கியம் எடுத்துக்கொண்டேன்.

அதன்படி பேசிவிட்டு வந்து அமர்ந்தாயிற்று. உணர்வுவயப்படக் கூடாதென்ற எச்சரிக்கை உணர்வோடு சில கவிதைகள் பற்றிப் பேசாமல் வேண்டுமென்றே தவிர்த்துவிட்டேன்.

ஆனால் வந்தமர்ந்த கொஞ்ச நேரத்தில் கலங்கிக்கொண்டே இருந்த கண்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

*
சில கவிதைகள் ‘காதலின் நூறு சம்பவங்கள்’ தொகுப்பில் இருந்து…

“ஒரு செடிக்கு
நீர் ஊற்றுவதைப் போல
ஒரு காதலுக்குள் வருகிறோம்
ஆனால் அது ஒரு மணல் பரப்பிற்கு
நீர் ஊற்றுவதைப் போல
அது ஏன் நம்மை
அவ்வளவு உறிஞ்சுகிறது என்று குழம்பிப் போகிறேன்”

#
“ஒரு முத்தம் எனது உடலை
இவ்வளவு எடையற்றதாக்கும் எனில் ஒரு பிரிவு
என் உடலை இவ்வளவு
கனத்துப் போகச் செய்யும் எனில்
இது என் உடல் தானா
என்று கேட்டுக்கொள்கிறேன்”

*

‘பிரிவின் நூறு சம்பவங்கள்’ தொகுப்பில் இருந்து…

*

“நம் பாதைகள்
நிரந்தரமாகப் பிரிந்த நாளிலும்
இதே போலத்தான்
மழை பெய்துகொண்டிருந்தது
அந்தக் டைசித் தேநீரில்
புயல்கள் தோன்றின
ஆயினும் அதை அருந்தினோம்”

#

“அது ஒரு பிரிவே அல்ல
இடைவேளை என்றுதான்
அப்போதும் நம்பினேன்
மரணத்தின் கடைசிப் படிக்கட்டுகளில் இருப்பவர்கள்
திரும்பி வந்துவிடலாம் என்றுதானே எப்போதும் நினைக்கிறார்கள்”

****

– உடைந்துவிடாமல் வாசிக்கவேண்டும் கவிதைகளை.

நன்றி: முகநூல் பதிவு

You might also like