அழியாப் புகழுக்கும் அற்புதக் குரலுக்கும் சொந்தக்காரர் சுவர்ணலதா!

சில கலைஞர்கள் என்றும் நம்மை மகிழ்வித்துக் கொண்டே இருக்கப் போகிறார்கள். அந்த வகையில் அவர்கள் எப்போதும் நம்முடன் வாழப் போகிறார்கள் என்று நினைத்துக்கொண்டே இருப்போம்.

ஆனால் திடீரென்று அவர்கள் வாழ்வு முடிவுக்கு வந்துவிடும். நீண்டுகொண்டே சென்றிருக்க வேண்டிய கலைப் பயணம் மின்விளக்கை அணைத்தது போல் நின்றுபோய்விடும்.

ஆனாலும் அவர்கள் அதுவரை நிகழ்த்திய கலைச் சாதனைகள் மூலம் அவர்கள் நம் மனங்களில் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் பாடகி ஸ்வர்ணலதா.

2010-ம் ஆண்டு செப்டம்பர் 12 அன்று 37 வயதில் அகால மரணமடைந்தவர். அதற்கு முன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்கம் எனப் பல மொழிகளில் ஏழாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடி, இசையாலும் குரலாலும் ரசிகர்களுக்கு இன்பமளித்துவந்தவர் நம்மை விட்டுச் சென்று இன்றோடு பத்து ஆண்டுகள் நிறைவடைகின்றன.

மெல்லிசை மன்னரின் அறிமுகம்

1987 முதல் 2010 வரையிலான 23 ஆண்டுக் காலத் திரைப் பயணத்தில் பல அரிய சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார் ஸ்வர்ணலதா.

கேரளத்தில் பிறந்து மூன்று வயது முதலே பாடத் தொடங்கி, கர்நாடக இசைப் பயிற்சி பெற்று சினிமா பாடகராகும் கனவுடன் சென்னைக்கு வந்து மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சென்று வாய்ப்புக் கேட்டிருக்கிறார்.

‘உயர்ந்த மனிதன்’ படத்தில் பி.சுசீலா குரலில் இடம்பெற்ற ‘பால் போலவே’ பாடலைப் பாடிக் காட்டியிருக்கிறார். அதுவே அவரைத் திரைப்படப் பாடகி ஆக்கிவிட்டது.

ஆம் 1987-ல் மெல்லிசை மன்னரின் இசையில் வெளியான ‘நீதிக்கு தண்டனை’ படத்தில் மகாகவி பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ பாடல் ஸ்வர்ணலதாவின் முதல் பாடலாக அமைந்தது.

கவனம் ஈர்த்த பாடல்கள்

அதைத் தொடர்ந்து இளையராஜா. சங்கர்-கணேஷ், கங்கை அமரன், எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோர் இசையில் அமைந்த பாடல்களைப் பாடிவந்தார்.

1990-ல் வெளியான ‘சத்ரியன்’ திரைப்படத்தில் இளையராஜா இசையில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச’ என்னும் பாடல் ஸ்வர்ணலதாவை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தது.

‘சின்னத்தம்பி’ படத்தில் அவர் பாடிய ‘போவோமா ஊர்கோலம்’ பாடல் பட்டிதொட்டி எங்கும் வெற்றிபெற்றது.

தமிழக அரசின் சிறந்த பாடகிக்கான விருது உட்பட மாநில அளவில் பல விருதுகளை அந்தப் பாடலுக்காக வென்றார் ஸ்வர்ணலதா.

‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் இடம்பெற்ற ‘குயில் பாட்டு’, ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆட்டமா தேரோட்டமா’, ‘தர்மதுரை’ படத்தில் கே.ஜே.யேசுதாஸுடன் சேர்ந்து அவர் பாடிய ‘மாசி மாசம் ஆளான பொண்ணு’ போன்ற பல பாடல்கள் மாபெரும் வெற்றிபெற்று ஸ்வர்ணலதாவை முன்னணிப் பாடகியாக ஆக்கின.

தேசிய விருதும் தேசிய கவனமும்

தமிழிலும் தெலுங்கிலும் தொடர்ந்து பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் படங்களில் ஸ்வர்ணலதா பாடிய பாடல்கள் வெற்றிபெற்றன.

ஏ.ஆர்.ரஹ்மானின் வருகைக்குப் பிறகு ஸ்வர்ணலதாவின் வெற்றியின் வீச்சு மேலும் பல மடங்கு உயர்ந்தது. 1993-ல் வெளியான ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் ‘உசிலம்பட்டி பெண் குட்டி’ பாடல்தான் ஸ்வர்ணலதா – ரஹ்மான் இசையில் பாடிய முதல் பாடல்.

அதற்குப் பிறகு தொடர்ந்து ரஹ்மான் இசையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் பாடிவந்தார். இளையராஜா இசையிலும் தொடர்ந்து பாடிவந்தார். 1994-ல் பாரதிராஜாவின் ‘கருத்தம்மா’ படத்தில் இடம்பெற்ற ‘போராளே பொன்னுத்தாயி’ பாடலுக்காக சிறந்த பாடகிக்கான தேசிய விருதை வென்றார் ஸ்வர்ணலதா.

ரஹ்மான் இசையில் அமைந்த ‘பம்பாய்’ படத்தின் இந்தி வடிவத்திலும் ‘ஹம்மா ஹம்மா’ பாடலைப் பாடினார். இதன் மூலம் இந்தியிலும் அவருடைய கலைப் பயணம் தொடங்கியது.

மும்மூர்த்திகளுடன் பயணம்

1980-களின் பிற்பகுதி அல்லது அதற்குப் பின் வந்த பாடகர்களில் தமிழ் சினிமாவின் இசை மும்மூர்த்திகள் என்று கருதத்தக்க எம்.எஸ்.விஸ்வநாதன். இளையராஜா. ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய மூவரின் இசையிலும் பாடும் வாய்ப்பைப் பெற்ற மிகச் சிலரில் ஸ்வர்ணலதாவும் ஒருவர்.

தேவா, சிற்பி. ஆதித்யன், வித்யாசாகர், பரத்வாஜ், மணிசர்மா, ரமண கோகுலா என தமிழ், தெலுங்கு மொழிகளின் முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவரின் படங்களிலும் தொடர்ந்து பாடிவந்தார் ஸ்வர்ணலதா.

2000 ம் ஆண்டுக்குப் பிறகு புகழடைந்த யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரும் ஸ்வர்ணலதாவை தங்கள் இசையில் பாடவைக்கத் தவறவில்லை.

மேதையின் பாராட்டு

தென்னிந்திய மொழிப் பாடகர்களில் இந்திப் பாடல்களை மிகச் சரியான உச்சரிப்புடன் பாடுபவர் என்ற நற்பெயரைப் பெற்றவர் ஸ்வர்ணலதா. இதற்காக மூத்த இசையமைப்பாளர் நெளஷாத் அலியால் பாராட்டப்பட்டவர்.

தன் வாழ்வின் மறக்க முடியாத தருணம் எது என்று கேட்கப்பட்டபோது நெளஷாத் அலியின் பாராட்டைப் பெற்ற தருணத்தையே குறிப்பிட்டார் ஸ்வர்ணலதா.

எல்லாப் பாடல்களிலும் ஈர்ப்பவர்

பல மொழிகளில் திறன்மிக்க பாடகியாக விளங்கிய ஸ்வர்ணலதா அனைத்து வகையான பாடல்களை சிறப்பாகவும் தனித்தன்மையுடனும் பாடுபவராக இருந்தார். ‘மாலையில் யாரோ;’ போன்ற மெலடிப் பாடல்களையும், ‘போறாளே பொண்ணுத் தாயி’ போன்ற மென்சோகப் பாடல்களையும், ‘ஆட்டமா தேரோட்டமா” போன்ற துள்ளலான பாடல்களையும், ‘ஹம்மா ஹம்மா’ போன்ற அதி நவீன துடிப்பு மிக்க பாடல்களையும், ‘மாசி மாசம் ஆளான பொண்ணு போன்ற விரகதாபத்தை வெளிப்படுத்தும் பாடல்களையும் அவரால் அவற்றுக்கான உணர்வைக் கச்சிதமாக வெளிப்படுத்தி வெகு சிறப்பாகப் பாட முடிந்தது.

மென்சோகம் கசியும் குரல்

இருந்தாலும் பெண் மட்டும் பாடக்கூடிய சற்று மென்சோகமோ பிரிவின் ஏக்கமோ இழையோடும் பாடல்களே அவருடைய ஆகச் சிறந்த கலை வெளிப்பாடாக அமைந்தன.

‘வனஜா கிரிஜா’வில் இடம்பெற்ற ‘உன்னை எதிர்பார்த்தேன்’, ‘அலைபாயுதே’வில் இடம்பெற்ற ”எவனோ ஒருவன் யாசிக்கிறான்’ ஆகிய பாடல்கள் அடைந்திருக்கும் வெற்றியும் தலைமுறைகளைக் கடந்து ஈர்க்கும் இறவாப் புகழும் இதற்குச் சான்று பகிர்கின்றன.

அதே நேரம் காதலின் உச்சத் தருணத்தை அது தரும் உன்னத உணர்வை வெளிப்படுத்தும் ‘என்னுள்ளே என்னுள்ளே’ (வள்ளி) போன்ற பாடல்களாலும் ஸ்வர்ணலதாவின் அபாரமான குரல் வளத்தையும் உணர்வுகளைக் கச்சிதமாக வெளிப்படுத்தும் திறனையும் பறைசாற்றுகின்றன.

2008-ல் வெளியான ‘பீமா’ படத்தில் இடம்பெற்ற ‘ரங்கு ரங்கம்மா’ தமிழில் ஸ்வர்ணலதாவின் கடைசிப் பாடலாக அமைந்துவிட்டது. தெலுங்கிலும் மலையாளத்திலும் 2010 வரை அவருடைய பாடல்கள் வெளியாகியுள்ளன.

2009-ல் ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் “நிறையப் பாடல்களைப் பாடி தொடர்ந்து மகிழ்விப்பதையே தன்னுடைய வருங்காலத் திட்டம்” என்று கூறியிருக்கிறார். அந்தத் திட்டத்தைக் காலம் நிரந்தரமாக நிறுத்திவிட்டது.

ஆனால் ஸ்வர்ணலதாவின் பாடல்களையும் அவற்றின் மூலம் அவர் மக்களிடம் பெற்றிருக்கும் அன்பையும் மதிப்பையும் காலத்தால் அழிக்க முடியாது என்று உறுதியாகக் கூறலாம்.

– நன்றி: இந்து தமிழ் திசை நாளிதழ்

#ஸ்வர்ணலதா #எம்_எஸ்_வி #பி_சுசீலா #இளையராஜா #சங்கர்_கணேஷ் #கங்கை_அமரன் #எஸ்_ஏ_ராஜ்குமார் #ஏ_ஆர்_ரஹ்மான் #தேவா #சிற்பி #ஆதித்யன் #வித்யாசாகர் #பரத்வாஜ் #மணிசர்மா #swarnalatha #msv #p_suseela #ilayaraja #gangai_amaran #s_a_rajkumar #a_r_rahman #deva #sirpi #athithyan #vidyasagar #bharathwaj

You might also like