இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞன் வடிவேலு. தன் திறமையால் தமிழ்ச் சமூகத்தின் அங்கமாகவே மாறிவிட்ட வடிவேலுவுக்கு இன்று 64 வது பிறந்தநாள். அவரைப் பற்றி ஒரு சிறு தொகுப்பு இதோ!
* நமக்கு வடிவேலு காமெடி பிடிக்கும். அவருக்குப் பிடித்த காமெடி டாம் அண்ட் ஜெர்ரி தான் ரொம்ப இஷ்டம். அதை டி.வியில் ஓடவிட்டு விழுந்து விழுந்து சிரிப்பார்.
* வீட்டில் கலைஞர் ஜெயலலிதாவிடம் அவார்டு வாங்கும் படங்களை பெரிய அளவில் மாட்டி வைத்திருக்கிறார். `அவர்கள் இரண்டு பேருமே எனக்குப் பெரிய ரசிகர்கள். அதை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அதோட அவர்கள் பெரிய தலைவர்கள். அதனால் இங்கே இருக்கிறார்கள்’ என்பார்.
* முதல் கார் டாடா சியாராவை இன்னும் பத்திரமாகத் துடைத்து வைத்திருக்கிறார். சம்பாதித்து முதலில் வாங்கிய சொத்து இதுதான் என்பதால் இந்த கவனிப்பு. `இந்த கார்கிட்டே நான் பேசுவேன்!’ என சொல்வார் வடிவேலு.
* விடுமுறை கிடைத்தது என்றால் குடும்பத்தை அள்ளிப் போட்டுக் கொண்டு குற்றாலம் போய்விடுவார். வெளிநாடு என்றால் அவருக்கு லண்டன் தான். தேம்ஸ் நதி தான் அவருக்கு பார்க்கப் பிடிக்குமாம்.
* நகைச்சுவையில் அவருக்கு தங்கவேலு, சுருளிராஜன், சந்திரபாபு தான் குருக்களாக இருக்கிறார்கள். தன்னை இவர்களின் கலவை என ரஜினி ஒரு தடவை மேடையில் சொன்னதை நினைவில் வைத்திருக்கிறார்.
* ஜோதிடத்தில் வடிவேலுக்கு எக்கச்சக்க நம்பிக்கை. நல்ல நேரம் பார்த்து தான் வெளியே கிளம்புவார். வியாழன் மஞ்சள், வெள்ளி அரக்கு, சனிக்கிழமை கருப்பு கலர் சார்ந்து சட்டை அணிவார்.
* ஐய்யனார், மதுரை மீனாட்சி, பழனி முருகன், அம்மா சரோஜினி தான் வடிவேலு வணங்கும் தெய்வங்கள். ஆபீஸ் வீடு முழுக்க இந்த தெய்வங்களின் படங்கள் தான் இருக்கும்.
* டி எம் சௌந்தரராஜனின் அதீத ரசிகர் வடிவேலு. அவரது 200 பாடல்களை மனப்பாடமாக அச்சு பிசகாமல் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால்கூட பாடுவார்.
* விதவிதமான கடிகாரங்கள் அணிவார். கிட்டத்தட்ட 500 கடிகாரங்களை நல்ல நிலைமையில் வைத்திருக்கிறார். கையில் காசு இல்லாத சிறு வயது முதலே எங்கிருந்தாவது பிய்த்து பீராய்ந்து வாட்ச் கட்டிக் கொள்வார்.
* வடிவேலுவிற்குப் பிடித்த நடிகை சரோஜா தேவி தான். `ஆதவன்’ படப்பிடிப்பில் அவரிடமே, `நில்லடி நில்லடி சீமாட்டி!’ பாடலை முழுதாக பாடிக்காட்டி நடித்தும் காண்பித்து பாராட்டு வாங்கியதை எல்லோரிடமும் குறிப்பிட்டுச் சொல்வார்.
– நா.கதிர்வேலன்
- நன்றி : ஆனந்த விகடன்