குறட்டை எப்போது ஆபத்தானதாக மாறுகிறது?

தூக்கம் என்பது நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. ஆனால் குறட்டை பிரச்சினை பலரது தூக்கத்தையும், அதாவது அருகில் படுப்பவர்களின் தூக்கத்தையும் கெடுத்துவிடும். குறட்டை என்பது ஒருவர் தூங்கும் நிலை மற்றும் தீவிரமான உடல்நல பிரச்சனைகள் காரணமாக ஏற்படலாம்.

முன்பெல்லாம் வயதில் மூத்தவர்களுக்கு மட்டும் குறட்டைப் பிரச்னை இருந்தது. தற்போதோ வயது வரம்பு இல்லாமல் எல்லோருக்கும் வர கூடிய நோயாக குறட்டை மாறிவிட்டது.

குறட்டை ஏற்படுவதற்கு முக்கிய காரணம், தூங்கும்போது நம் தொண்டை பகுதியில் உள்ள மென்மையான திசுக்கள் தளர்ந்து, காற்று செல்லும் வழியை குறுகச் செய்யும்.

இதனால், குறுகிய பாதை வழியே காற்று செல்லும்போது திசுக்கள் அதிர்ந்து சத்தம் எழுகிறது. இதுதான் குறட்டை.

அதிக எடை, டான்சில் உள்ளவர்கள், சிறு தாடை இடமாற்றம் கொண்டவர்கள், 17 இன்ச்சைவிட பெரிய கழுத்து இருக்கும் ஆண்கள், 16 இன்ச்சைவிட பெரிய கழுத்து இருக்கும் பெண்கள், அதிகம் புகைப்பழக்கம் உள்ளவர்கள், மது அருந்துபவர்கள்,

சீரற்ற இதய துடிப்பு உள்ளவர்கள் மற்றும் சில மரபியல் காரணங்களும் குறட்டைப் பிரச்னைக்கு காரணமாக இருக்கிறது. இதனை மருத்துவ உலகில், ஸ்லீப் அப்னியா (Sleep Apnea) என்பார்கள்.

இரவில் குறட்டைவிடுவது ரத்த அழுத்தம், இதய நோய்கள், மறதி பிரச்னைகளை ஏற்படுத்தும். இரவில் குறட்டைவிடுபவர்கள் பகலில் சோர்வான மனநிலையில் இருப்பார்கள், மன உளைச்சல் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் அதிகம். எந்த விஷயத்தின் மீதும் கவனம் செலுத்தமுடியாமல் போகும்.

குறட்டை விடுபவர்களுக்கு பகல் பொழுதுகளில் தூக்கம் வரும். இதய நோய்கள் வர அதிக வாய்ப்புள்ளது.

வாயை மூடிக் கொண்டு குறட்டைவிட்டால் நாக்கு, காற்று செல்லும் பாதையில் பிரச்னையாக இருக்கலாம். வாயைத் திறந்தபடி குறட்டைவிட்டால் தொண்டையில் இருக்கும் திசுக்களால் பிரச்னை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

குறட்டை பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தினாலும், அதைத் தடுக்கும் வழிகளை தெரிந்துகொள்வோம்.

உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு குறட்டை வருவதற்கான வாய்ப்பு அதிகம். குறிப்பாக, கழுத்துப் பகுதியில் அதிக கொழுப்பு இருப்பது குறட்டைக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

எனவே, ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி மூலம் உடல் எடையைக் குறைப்பது குறட்டை பிரச்சனையைக் குறைக்க உதவும்.

பக்கவாட்டில் தூங்குவது குறட்டை வருவதைக் குறைக்கும். குறிப்பாக, இடது பக்கம் திரும்பி தூங்குவது நல்லது. ஏனெனில், இது மூச்சுக்குழாய் வழியாக காற்று செல்வதற்கு உதவுவதால், குறட்டை பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

அதிகமாக மது மற்றும் புகை பிடிப்பது குறட்டை பிரச்சனை ஏற்படுவதற்கான முக்கியமான காரணமாகும். எனவே, இத்தகைய தீய பழக்கத்தை கைவிடுவதன் மூலமாக, குறட்டையைத் தவிர்க்க முடியும்.

சிலருக்கு அலர்ஜி காரணமாக மூக்கு மற்றும் தொண்டை பகுதிகள் வீங்கிவிடும். இது மூச்சுக் குழாயை அடைத்து குறட்டை ஏற்பட வைக்கும். எனவே, இத்தகைய பாதிப்புகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெற்று சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

தூங்குவதற்கு முன் அதிகமாக உணவு உண்பது செரிமானத்தை பாதித்து குறட்டை ஏற்பட வைக்கும். எனவே, தூங்குவதற்கு குறைந்தது 2-3 மணி நேரத்திற்கு முன்பாக இரவு உணவை உண்ண வேண்டும்.

குப்புறப் படுத்து உறங்குவதாலும் குறட்டை வரலாம். தூங்கப் போவதற்கு முன் சட்டை பையில் ஒரு டென்னிஸ் பந்தை வைத்து கொண்டு படுக்கலாம். தலையணையின் உயரத்தை கொஞ்சம் அதிகரியுங்கள்.

அறை மிகவும் சூடாக இருந்தால் தொண்டையில் காற்று புகும்போது நெரிசல் ஏற்பட்டு சுவாசிக்க முடியாமல் குறட்டை வர வாய்ப்பிருக்கிறது. இதனால் அறையை முடிந்த வரை குளுமையாக வைத்திருங்கள்.

குறட்டைக்கு தூசும் ஒரு காரணமாக இருக்கலாம். வீட்டை சுத்தமாக வைத்துகொள்ளுங்கள். மூச்சுப் பயிற்சி, யோகா பயிற்சி நல்ல பலனைத் தரும்.

சில எளிய வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி குறட்டையை தவிர்க்கலாம்.

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான குடி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் பொடியைப் போட்டுக் கலக்கி இரவு படுக்கச் செல்லும் முன் தினமும் பருகலாம்.

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து கலக்கி இரவு படுக்கச் செல்லும் முன் தினமும் பருகலாம். (மஞ்சள் தூள் கலப்படமின்றி சுத்தமாக தயாரிக்கப்பட்டதாக இருந்தால் நல்லது).

காலையிலும், இரவு படுக்க செல்லும் முன்னும் மூக்கில் 2 சொட்டு மிதமான சூடுள்ள பசு நெய்யை விட்டுக்கொள்ளலாம். நெய்யுக்குப் பதில் பிராமி எண்ணை கிடைத்தால் உபயோகிக்கலாம்.

சளி அல்லது ஜலதோஷம் பிடித்தால், அதற்கு உடனே சரியான சிகிச்சை அளித்து வந்தால், குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம். நீராவி பிடித்தாலும் குறட்டை வருவதை தவிர்க்கலாம். ஏனெனில் இது மூக்கில் உள்ள அடைப்புக்களை நீக்கி, காற்று எளிதாக செல்ல வழிவகுக்கும்.

இரவில் தூங்கச் செல்லும் முன் பிட்சா, பர்கர், சீஸ் பாப்கார்ன் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால், அது சளியின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து குறட்டைக்கு வழிவகுக்கும். எனவே, கொழுப்புச் சத்துள்ள உணவுப் பொருட்களை இரவில் தவிர்ப்பது நல்லது.

மேற்கண்ட வழிமுறைகளை நீங்கள் பின்பற்றியும் குறட்டை பிரச்சனை அதிகமாக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

ஏனெனில், சிலருக்கு குறட்டை சில தீவிரமான உடல்நலப் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

உங்கள் அருகில் தூங்குபவரிடம் நீங்கள் எவ்வளவு சப்தமாக குறட்டைவிடுகிறீர்கள் என்பதை கவனிக்கச் சொல்லுங்கள்.

ஒருவேளை மிக அதிகமான சத்தத்துடன் குறட்டைவிடுகிறீர்கள் என தெரிய வந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். அலட்சியம் வேண்டாம்.

சிலர் குறட்டையின் பாதிப்பிற்கு சிகிச்சை மேற்கொள்ள முடியாதபடிக்கு உடல் பருமன், வயது முதிர்வு, குள்ளமான கழுத்து, மூக்கு-வாய் பகுதியில் தசை வளர்ச்சி போன்றவைகளால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்.

அவர்கள் மூச்சு திணறல் இல்லாமல் இரவில் தூங்குவதற்காக “சி.பி.ஏ.பி.” (CPAP – Continuous Positive Airway Pressure) என்ற கருவி உள்ளது. இதனை பொருத்திக் கொண்டு தூங்கினால் மூச்சு திணறலோ, குறட்டை தொந்தரவோ ஏற்படாது.

குறட்டைக்கு சிகிச்சை மட்டும் போதாது, உடல் பருமனை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதற்காக உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு போன்றவைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி: வேல்ஸ் மீடியா

You might also like