கலைஞர் கருணாநிதி இருக்கின்ற ஒரு கவியரங்க மேடையில், கவிஞர்.மு.மேத்தா அவர்கள் கவி பாடுகிறார். அந்தக் கவிதையில் அவர், “கலைஞர் இரு ‘நா’ படைத்தவர்” எனக் கூறிவிட்டு பேசுவதை சற்று நிறுத்துகிறார்.
கவியரங்கத்தில் கலந்து கொண்டவர்கள், கவிஞர் மேத்தாவை கோபங்கலந்த அதிர்ச்சியோடு பார்க்கின்றனர்.
ஏனென்றால் இரு – ‘நா’ படைத்தவர் என்பதற்கு இரட்டை நாக்கு உடைய சந்தர்ப்பவாதி என பொருள்படும்.
அதன் பிறகு மேத்தா அவர்கள் மீண்டும், “ஆமாம் கலைஞரிடம் இருப்பது இரு ‘நா’. அதில், ஒரு நா… அவர் பேசும் செந்நா, இன்னொரு நா… அவர் கைப்பிடிக்கும் பேனா…!” என்றார்.
கூட்டத்தினர் மகிழ்கின்றனர்.
மேத்தா பேசி அமர்ந்ததும், தலைவர் கலைஞர் அவர்கள் எழுந்து பேச்சைத் தொடர்கிறார். அப்போது,
“மேத்தா எனக்கு இரு நா என்றார்.
ஏற்க மாட்டேன் அக்கருத்தை.!
எனக்கு மூன்றாவது நாவும் உண்டு,
அதுதான் முதன்மையான நா.!
அந் நா- எதுவெனில்
அன்றாடம் நான் போற்றும் அண்ணா.!”
– எனக் கலைஞர் கூறியதும் அரங்கம் அதிர்ந்து. கவியரங்கத்தில் இருந்த அத்தனைக் கவிஞர்களும் எழுந்து நின்று, கை தட்டி வணங்கி மகிழ்ந்தனர்.
இது கலைஞர் கருணாநிதி அவர்கள் எந்நிலையிலும் எப்போதும் யாராயினும் அவர்களை வெல்லும் சொற்களை வீசும் வித்தை தெரிந்த ஆற்றலாளர் அவர் என்பதற்கு சான்று…
– செங்குன்றம், திராவிடமணி முகநூல் பதிவு