ஜம்மு-காஷ்மீரில் வெற்றி யாருக்கு?

3 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல்

இந்தியாவில் சட்டசபைகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். சில அசாதாரண சூழல்களில் ஓரிரு மாதங்கள் குறையும் அல்லது அதிகரிக்கும். ஆனால் வரைபடத்தில், நாட்டின் உச்சியில் இருக்கும், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சட்டசபை சந்தித்து 10 ஆண்டுகள் ஆகின்றன.

கடைசியாக ஜம்மு காஷ்மீரில் 2014-ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 5 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.

அந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியும் பாஜகவும் இணைந்து ஆட்சி அமைத்தன. இந்த ஆட்சி 3 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.

2018-ம் ஆண்டு ஜுன் மாதம் பாஜக, தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் மெகபூபா முப்தி அரசு ராஜினாமா செய்தது.

இதையடுத்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் அந்த மாநிலம் மத்திய அரசின் ஆளுகையின் கீழ் இருந்தது.

இந்த இடைப்பட்ட காலத்தில் சில முக்கிய நிகழ்வுகள் அரங்கேறின. தீவிரவாதிகள் கொட்டத்தை அடக்கி, அங்கு அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.

அதுவரை தனி மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீர், யூனியன் பிரதேசமாக தரம் குறைக்கப்பட்டது. இந்தியாவில் யூனியன் பிரதேசங்கள், தனி மாநிலமாக தரம் உயர்த்தப்பட்ட வரலாறுகள் உண்டு. ஆனால், ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக முகம் மாற்றப்பட்டது அதுவே முதன்முறை.

மூன்று கட்ட தேர்தல்

இந்த நிலையில்தான், 90 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் 28 ஆண்டு சரித்திரத்தில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுவது இதுவே முதல்முறை.

பாதுகாப்பு காரணங்களால், நான்கு, ஐந்து கட்டங்களாக அங்கு தேர்தல் நடத்தப்படுவதே வழக்கம்.

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு  2014-ம் ஆண்டில் நவம்பர் – டிசம்பரில் 5 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.

தற்போது நடைபெற உள்ள தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சியும் காங்கிரசும் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளன.

பாஜக, சில சிறிய கட்சிகளுடன் தனி அமைத்துள்ளது. ஜனநாயகக் கட்சியும் தனி அணியாக களம் காண்கிறது. எனினும் நிஜமான போட்டி காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையேதான்.

அந்த மாநிலத்தில் மொத்தம் 5 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியும், பாஜகவும் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றன. திகார் சிறையில் அடைக்கப்பட்ட பொறியாளர் ரஷீத் என்ற ஷேக் அப்துல் ரஷீத், பாரமுல்லா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வெற்றி யாருக்கு?

கடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி 22 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஒரு இடத்திலும் ஜெயிக்காத காங்கிரஸ் கட்சி, 19 சதவீத வாக்குகள் வாங்கியது. பாஜக 24 சதவீத வாக்குகளைப் பெற்றது. வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் பார்த்தால், காங்கிரஸ் அணி எளிதாக வெல்லும் வாய்ப்புகள் அதிகம்.

பாஜகவுக்கு, ஜம்மு பிராந்தியத்தில் மட்டுமே செல்வாக்கு உள்ளது. அங்கும், ‘சீட்’ கிடைக்காத அதிருப்தியில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மூத்தத் தலைவர்கள் பாஜகவை விட்டு வெளியேறி வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அக்டோபர் மாதம் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுவதாக இருந்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கையை அக்டோபர் 8-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் திடீரென மாற்றியுள்ளது.

அங்கு, யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது அன்று  பிற்பகலுக்குள் தெரிந்து விடும்.

– மு.மாடக்கண்ணு

You might also like