ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் நடிகர் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்த ‘ராஜாதி ராஜா’ படத்தில் இடம்பெற்ற “மாமா உன் பொண்ணக் குடு” பாடலையும், “எங்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா” பாடலையும் இன்றும் கேட்கும் அளவிற்கு ஹிட் ஆகியுள்ளது.
இரட்டை வேடங்களில் கலக்கியிருக்கும் ரஜினி, பயந்த சுபாவம் உடையவராகவும், விவேகமானவராகவும் நடிப்பில் அசத்தியிருப்பார்.
கூச்ச சுபாவம் கொண்ட ரஜினிக்கு நதியா ஜோடி, தன் மாமாவிற்கு பயப்படும் ரஜினியை தைரியசாலியாக்குவார்.
அந்தக் காட்சிகள் முழுவதும் காமெடி பகுதியாக அமைந்திருக்கும். மற்றொரு ரஜினி பணக்காரராக இருப்பார். வெளிநாட்டில் இருந்து திரும்பும் அவர் தனது தந்தை இறந்ததையறிந்து,
தனக்கு எதிராக நடக்கும் சதித்திட்டங்களைக் கண்டறிவதற்காக தன் வீட்டில் தனது நண்பரை தன்னைப்போல் நடிக்க வைப்பார். அப்போது சதிகாரர்கள் ரஜினியின் நண்பராக வரும் ஜனகராஜைக் கொன்று அந்தப் பழியை ரஜினி மீதே போடுவார்கள்.
இதனால், சிறை செல்லும் ரஜினி, உண்மையைக் கண்டுபிடிக்க சிறையிலிருந்து தப்புவார். அப்போது, வழியில் தன்னைப் போல் உருவ ஒற்றுமை கொண்ட பயந்த சுபாவம் கொண்ட ரஜினியை சந்திக்கிறார்.
இந்த உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி அவரை ஜெயிலுக்குள் இருக்க வைத்துவிட்டு, வெளியே உண்மையைக் கண்டுபிடிக்கிறார்.
தனது மாமா மகள் நதியாவை திருமணம் செய்துகொள்ள தேவைப்படும் பணத்திற்காக இந்த ஆள்மாறாட்டத்தை ஏற்றுக்கொண்டு சிறை செல்லும் பயந்த சுபாவி ரஜினியும் தனக்கு பணம் கிடைத்து தனது மாமன் மகளுடன் சேர்ந்துவிடுவார்.
ரஜினிக்கு உதவியாக வரும் எஸ்டேடில் உள்ள ராதா, பணக்கார ரஜினியுடன் ஜோடி சேருவார். இதுவே படத்தின் கதை.
இளையராஜாவின் இசையில் இந்தப் படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே ஹிட்.
மீனம்மா…மீனம்மா…. கண்கள் மீனம்மா, உன் நெஞ்சத்தொட்டு சொல்லு ஏன் ராசா, வா….வா…மஞ்சள் மலரே… ஒன்று… தா தா கொஞ்சும் குயிலே, மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி… என ஒவ்வொரு பாடலும் ஒரு ரகம்.
இன்று கேட்டாலும் இந்தப் பாடல்கள் இனிக்கும். அந்த காலத்தின் ஆர்கெஸ்ட்ராக்களில் இந்த பாடல்கள், குறிப்பாக மீனம்மா, மீனம்மா பாடல் இல்லாத கச்சேரிகளே இல்லையெனுமளவிற்கு மிகப்பிரபலமான பாடல்.
ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய இந்த படத்தில் ராதாரவி, விஜயகுமார், ஆனந்தராஜ் உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும்.
இப்படத்தின் கதையை முழுமையாக கேட்காமல் நடிக்க ஒத்துக்கொண்ட ரஜினி, இந்தப் படம் ஓடாது என்றே கருதினார்.
ஆனால், முதல் நாள் வசூலே பல லட்சங்களைத் தொட்டதுடன், 175 நாட்கள் ஓடி சாதனையும் படைத்தது.
– நன்றி: முகநூல் பதிவு