மறுபிறவி எடுத்த மக்கள் திலகம்!

1967. ஜனவரி 12ம் தேதி எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர் சுடப்படுகிறார். அதன்பிறகு தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்ட எம்.ஜி.ஆர், ஏப்ரல் 21ம் தேதி, அதாவது சுமார் 100 நாட்களுக்குப் பிறகு அரச கட்டளைப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வருகிறார்.

அன்றைய பொழுது எப்படி இருந்தது என்பதை அந்த மாதம் (28.04.1967) வெளிவந்த நடிகன் குரல் இதழ் இப்படி எழுதியுள்ளது. 

******

கலையுலகம் புத்துயிர் பெற்றது; பூரித்து எழுந்தது!

நல்லிதயம் படைத்த மக்கள் நாட்டோரிலே பெரும்பகுதியினர் – ஆனந்தக் கூத்தாடினார்கள்! 

வெளிநாடுகளிலே வாழ்ந்து, விழியெல்லாம் தமிழகத்தின் பக்கம் திருப்பியிருக்கும் பாட்டாளிப் பெருங்குடியினர் ஆனந்தக் கண்ணீர் சொறிந்தனர்!

தாய்க்குலம் மகனீன்ற நேரத்தைப்போல் பெருமகிழ்ச்சியில் திளைத்தது!

மிகக் கொடுமையானதொரு சோதனைக்காலம் – நெஞ்சை அரித்துக் கொண்டிருந்த துன்ப நினைவு – விடைபெற்றுக் கொண்டு சென்றுவிட்டது.

துரோகம் வென்றதில்லை: தூய்மை செத்ததில்லை – என்ற தத்துவம் – இருபதாம் நூற்றாண்டிலே – நாம் வாழும் தலைமுறையிலே மற்றுமொருமுறை நிருபணமாகிவிட்டது.

கடலது பொங்கினாலும் புயலது வீசினாலும் அசையாது நிமிர்ந்து நிற்கும் பெருமலையே போல்,

பொல்லாங்கு நினைப்பையெல்லாம் பொடிப் பொடியாக்கிவிட்டு

கெடுமதியின் சூழ்ச்சியைச் சூரணம் செய்துவிட்டு –

தொகையாக வந்த பகையனைத்தையும் புகையாக்கி விட்டு –

தொண்டு மீண்டது!
தர்மம் சிரித்தது !
நீதி வலம் வந்தது!

ஆம்; கலையுலகத்தில் மட்டுமல்ல; பாசத்தையும் பண்பையும் மதிக்கின்ற இந்தப் பூவுலகத்திலும் இருண்ட நூறு நாட்கள் இடையிலே அழிய, கருணை ஒளி காட்சியளித்தது!

அன்றுதான், மறுபிறவி எடுத்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மீண்டும் தன் கலைப்பணியைத் தொடர்ந்தார்.

“பிழைப்பாரா” – என்று திகிலுடன் காத்திருந்த நெஞ்சங்களைக் மகிழ்வித்து – அண்ணனைக் காணாது அழுதிருந்த லட்சக்கணக்கான தம்பிகளின் கண்ணீரைத் துடைத்து – அவர் நுழைந்தார் சத்யா படப்பிடிப்பு நிலையத்தில்!

ஸ்டுடியோவெங்கும் மாவிலைத் தோரணங்கள் – வாசலில் சூழ்ந்திருந்த ஆயிரக்கணக்கானோர் நெஞ்சமெல்லால் மகிழ்ச்சித் தோரணங்கள்!

ஆனந்தப் பண் எழுப்புகின்றன, காத்திருக்கும் இசைக்கருவிகள். ஆனால், “வருக, வருக, வள்ளலே!” என்று எழும்பும் மகிழ்ச்சிக் குரலிலே அது மங்கி மறைகிறது!

காரைவிட்டு இறங்குகிறார் கூப்பிய கரங்களுடன்! நண்பர்களும் கலையுலகப் பிரமுகர்களும் வருகிறார்கள்! மாலைகள் விழுகின்றன! கண்ணீர்விட்டபடியே கட்டித் தழுவுகின்றனர் பேசும் சக்தியை இழந்துவிட்டவர்கள்! காலைத் தொட்டு தங்கள் வணக்கத்தைக் கொட்டுகிறார்கள் வயதிலே குறைந்தவர்கள்!

எல்லாரையும் இன்முகத்துடன் நோக்கிச் சிரிக்கிறார் – மனம்விட்டுச் சிரிக்கிறார் – “உங்களைவிட்டு என்னைப் பிரிக்க இந்த உலகத்தில் எந்தச் சக்தியும் இல்லாதபோது, ஏன் அச்சம்? ஏன் இந்தப் படபடப்பு?” – என்று கேட்கிறது அந்தச் சிரிப்பு.

எல்லாரும் சிரிக்கிறார்கள் –

இயற்கை…?

அது வாளாவிருக்குமா?

அதுவும் சிரிக்கிறது –

‘சடசட’வென்று பொழிகிறது வானம்!

ஆமாம். வானத்திற்கு வாயில்லை; வாழ்த்தைக் கொட்ட! 

வானத்திலே வனம் இல்லை; பூவைச் சொரிய!

வானத்திலே சோலை இல்லை; பழத்தை வீச! –

வானத்திலே மேகமிருந்தது; மழையைக் கொட்டிற்று!

தனது நன்றியை – மகிழ்ச்சியை – மரியாதையைச் சொல்லிற்று!

ஆம்; மக்களின் தவிப்பை மக்கள் திலகம் தீர்த்ததற்கும் பூமியின் கொடிய வெப்பத்தை மேகம் தீர்த்ததற்கும் ஏதோ தொடர்பிருக்கிறது.

மக்களின் இதயம் மலர்ந்தது! பூமி குளிர்ந்தது!

என்ன அற்புதமான ஒற்றுமை.

மக்கள் திலகம் அவர்கள் நடிப்பதற்குத் தேவையான வேடமணிந்து கொண்டு, பள்ளிச்சிறார்கள் போல் குதித்துக்கொண்டே நுழைகிறார், படமெடுக்கும் ‘செட்’டுக்குள்!

விளக்குகள் காத்திருக்கின்றன –

காமிரா தயாராக இருக்கிறது –

‘ஸ்டார்ட்’ என்கிறார் டைரக்டர் சக்ரபாணி.

“வாழ்க! மன்னன் வாழ்க!’ என்று குரலெடுத்துக் கத்துகிறார், நடிகர் வீரப்பா.

மறுகணம் அண்ணன் தலையிலே மகுடம் ஏறுகிறது!

“வாழ்க” – ஒலி எங்கும் எழுகிறது!

‘அரச கட்டளை’ படத்திற்கான காட்சிதான், ஆனாலும் அவர் தலையிலே மகுடம் சூட்டப்பட்டது திரைப்படக் காட்சியாகத் தோன்றவில்லை, மற்றவர்களுக்கு.

வந்திருந்தோரிலே ஒருவர் சொல்கிறார். “படத்திலே மகுடம் எதற்கு? வெளியே மக்கள் சூட்டிவிட்டார்கள் அன்பு மகுடத்தை” என்று!

“குண்டு பாய்ந்து மீண்டதாக சரித்திரம் உண்டா? ஆனால், இவரைத் துளைத்த இரும்புக் குண்டுக்கும் இதயம் இருந்திருக்கிறது! காங்கிரஸ் ஆட்சியின் நேரத்தில் உள்ளே நுழைந்த அது, கழகத்தின் ஆட்சியின்போது, ‘மன்னிப்பார்கள்’ என்ற துணிவில் வெளியே வந்திருக்கிறது!” என்கிறார், ஒரு பத்திரிகை நிருபர்.

”இவருக்கு விபத்து ஏற்பட்டது சரிதான்!” என்கிறார் ஒருவர், ரகசியமாக. பக்கத்தில் இருப்பவர் பல்லைக் கடிக்கிறார்.

”ஆமாம் சார்! ஓய்வே இல்லாமல் இரவு பகலாக உழைக்கிறார். ஆகவே, அவராக எடுக்காத ஓய்வை, ஆண்டவனாகத் தரவேண்டாமா? அதனால்தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவது.

முன்பு ஒருமுறை காலொடிந்து படுக்கையில் கிடந்ததும் இந்த ரகத்தைச் சேர்ந்ததுதான்!” – என்று அவர் பதில் சொல்கிறார் – அவர் ஒரு பக்திமான் போலும்.

“காலிலே ஒரு விபத்து; தலையிலே ஒரு விபத்து! முதலும், முடிவும் நடந்துவிட்டது! இனி அவரை யாரும் எதுவும் செய்ய முடியாது!”

– என்று உறுதியுடன் சொல்கிறார், ஒரு ஸ்டுடியோ தொழிலாளி!

உள்ளே காட்சியின் வசனம் பேசுகிறார் வீரப்பா!

“இவனை நான் ஏன் மன்னனாக்கினேன்? ஏன் இந்த ஆட்சி மாற்றம்? காரணத்தைச் சொல்கிறேன். இது நாடல்ல; கொடும்புலி வாழும் காடு; குற்றமிலார் உயிர் பறிக்கும் வீடு – என்று உணர்த்தியவன் இவன்!

”இது அரியாசனமல்ல – மக்களின் குறைகளை அறியாத ஆசனம்!

”இதுவரை நான் பிடித்திருந்தது செங்கோல் அல்ல: கொடுங்கோல்; கொள்ளையர் சுமக்கும் கன்னக் கோல் – என்று உணர்த்திய உத்தமன் இவன்தான்!” என்கிறார்.

மேலும் பேசுகிறார். டைரக்டர் கட்டளை இடுகிறார்; ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்: விளக்குகள் அணைகின்றன; எரிகின்றன; படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது!

இடை இடையே தன்னைக் காணவந்து வாழ்த்துச் சொல்கின்ற தன் உயிர் நண்பர்களுடன் பேசி மகிழ்கிறார், மறு பிறவி எடுத்த மக்கள் திலகம்.

– சொர்ணம்

– நன்றி: சமநீதி இதழ் 28.04.1967

You might also like