திடீர் திருமணம்… திடீர் பரிசு…!

திகைக்க வைத்த எம்.ஜி.ஆர்

1980-களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தளபதிகளில் ஒருவராக திகழ்ந்தவர் டாக்டர் கோ.சமரசம். காவேரிப்பட்டணம் சட்டமன்ற உறுப்பினர். 1977, 80 மற்றும் 84 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர்.

அவரது இரண்டு மகள்களுக்கும் 1984-ம் ஆண்டு காவேரிபட்டணத்தில் எம்.ஜி.ஆர். தலைமையில் திருமணம் நடந்தது. அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர். டெல்லியில் இருந்தார்.

திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அங்கிருந்து விமானம் பிடித்து ஜானகி அம்மாளுடன் பெங்களூர் வந்து சாலை மார்க்கமாக காவேரிப்பட்டணம் அடைந்தார். திருமண விழாக்களில் ஜானகி அம்மாள் சகிதம் கலந்து கொள்வது எம்.ஜி.ஆர் வழக்கம்.

எம்.ஜி.ஆர் பங்கேற்கும் சாதாரண பொதுக்கூட்டமே மாநாடு போல் இருக்கும். அதுபோல் இந்த திருமணத்துக்கும் பிரம்மாண்ட பந்தல் போட்டு மாநாடு போன்று ஏற்பாடு செய்திருந்தார் சமரசம். காலை முதலே கட்டுக்கடங்காதக் கூட்டம்.

தாலி கட்டும் நேரம் நெருங்கும் போது, மேடையை நோக்கி ஒரு இளைஞரும், இளம் பெண்ணும் அரக்க பரக்க ஓடி வந்தனர்.

பாதுகாப்பு வீரர்கள் விசாரித்தபோது அந்த இளைஞர் ஈரோட்டில் அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணி புரிகிறார் என்று தெரியவந்தது. உடன் வந்த பெண் அவருக்கு பெற்றோரால் நிச்சயம் செய்யப்பட்டிருந்தவர்.

காவேரிபட்டணத்தில் எம்.ஜி.ஆர். நடத்தி வைக்கும் திருமண நிகழ்ச்சியைப் பத்திரிகையில் பார்த்த அந்த ஒட்டுநர், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அதி தீவிர தொண்டரும்கூட.

எம்.ஜி.ஆர். முன்னிலையில் தன் திருமணத்தை நடத்தும் உத்தேசத்துடன் அங்கு வந்திருப்பது தெரியவந்தது.

அப்போது ஈரோடு மாவட்டத்தில் அமைச்சராக இருந்தவர் முத்துசாமி. எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். சமரசம் திருமணத்துக்கு முத்துசாமியும் வந்திருந்தார்.

அவருக்குப் பாதுகாப்பு அதிகாரிகள் செய்தி சொல்ல, அவர் எம்.ஜி.ஆரிடம் தயங்கித் தயங்கி விஷயத்தை சொல்லியுள்ளார்.

“அந்தத் தொண்டர் திருமணத்தையும் நானே நடத்தி வைக்கிறேன்’’ என்று தெரிவித்த எம்.ஜி.ஆர்., ‘திடீர்’ மணமக்களுக்கு தேவையான பட்டுச்சேலை, வேட்டி, மாலை முதலான பொருட்களை ஏற்பாடு செய்யுமாறு சமரசத்திடம் கூறியுள்ளார்.
(அந்த தம்பதியர் முன்னேற்பாடாக மாங்கல்யம் மட்டும் கொண்டு வந்திருந்தனர்)

சமரசத்தின் இரண்டு மகள்கள் திருமணத்தையும், ஈரோடு தொண்டரின் திருமணத்தையும் அதே மேடையில் நடத்தி வைத்தார் புரட்சித் தலைவர்.

எம்.ஜி.ஆர். காலில் விழுந்து ஈரோடு தம்பதியர் ஆசிபெற, அவர்களை வாழ்த்திய எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாளை ஏறிட்டு பார்த்தார்.

ஜானகி அம்மாள் தன் கைப்பையில் இருந்து இரண்டு பண்டல்களை எடுத்து எம்.ஜி.ஆரிடம் கொடுக்க, அதை வாங்கி எம்.ஜி.ஆர் அந்த தம்பதியரிடம் வழங்கினார்.

அகமும் முகமும் மலர அந்த தம்பதியர் வீட்டுக்குச் சென்று பண்டலைப் பிரித்துப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். ஒவ்வொரு பண்டலிலும் தலா 25 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது.

(இப்போது 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவரின் அப்போதைய சம்பளம் ஆயிரத்துக்கும் குறைவு. அப்படி என்றால் அந்த பணத்தின் இன்றைய மதிப்பைத் தெரிந்து கொள்ளலாம்).

எம்.ஜி.ஆர். கொடுத்த பணத்தில் புது வீடு கட்டியுள்ளதாக பின்னொரு சந்தர்ப்பத்தில் அந்த ஈரோடு தொண்டர் சமரசத்திடம் தெரிவித்துள்ளார்.

“வீட்டைக் கட்டிப்பார்… கல்யாணம் பண்ணிப்பார்’’ என்பது பழமொழி. இரண்டும் ஒரு சேர தனது உண்மைத் தொண்டனுக்கு கொடுத்திருந்தார் எம்.ஜி.ஆர்.

அதனால் தான் அவர் வள்ளல்.

– பி.எம்.எம்.

 

You might also like