ராதிகா – திரை ரசிகர்கள் விரும்பும் பெண்ணாளுமை!

தமிழ் திரையுலக வரலாற்றில் நடிகைகளைக் குறித்து ஒரு அத்தியாயம் எழுதினால், அதில் தவிர்க்கப்பட முடியாத பெயர்களில் ஒன்றாக ராதிகாவும் இடம்பெறுவார். 2கே கிட்ஸ்களுக்கு கூட அவரது பெயர் நன்கு தெரியும்.

ஒரே நேரத்தில் விவரத்துடனும் அப்பாவித்தனமாகவும் பதில் சொல்ல முடியுமா? மிகச்சாதாரணமாக நாம் காணும் பல நடுத்தர வயதுப் பெண்மணிகள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்களின் திரையுருவமாகத் தோன்றப் பலர் இன்றிருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் முப்பதுகளில் அல்லது நாற்பதுகளில் நடிக்க வந்தவர்களாக இருப்பார்கள்.

எண்பதுகளில் நாயகிகளாக நடித்து, பின்னர் அம்மா வேடத்திற்கு மாறியவர்களில் அந்த வரிசையில் அர்ச்சனா, சுலோச்சனா, பானுப்ரியா என்று ஒரு சிலரையே நிறுத்த முடியும். ராதிகாவுக்கு நிச்சயமாக அதில் முதலிடம் உண்டு. அதுவே, இன்றைய தலைமுறையினரும் ரசிக்கிற நட்சத்திரமாக விளங்கக் காரணமாக இருக்கிறது.

முதல் படம்!

‘16 வயதினிலே’ படத்தின் பெரு வெற்றிக்குப் பிறகு, அதே போன்று ஒரு கிராமியக் காதல் படத்தை எடுக்க முனைந்தார் இயக்குனர் பாரதிராஜா. முதல் படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்தை வித்தியாசமான கோணத்தில் காண்பித்தவர், இரண்டாவதில் முற்றிலும் புதுமுகங்களைப் பயன்படுத்த நினைத்தார்.

ஒரு இயக்குனர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள நிச்சயம் அப்படிப்பட்ட முயற்சிகள் தான் உதவும். அந்த வகையில், ஒரு ‘ட்ரெண்ட்செட்டர்’ ஆகச் சிந்தித்தார். முதலில் சிவச்சந்திரனும் ஸ்ரீதேவியும் நடிப்பதாக இருந்த இந்தக் கதையில் சுதாகரையும் ராதிகாவையும் நடிக்க வைத்தார்.

பெல்பாட்டம் பேண்ட், காலர் இல்லாத பனியன் அணிந்த தோற்றத்தில்தான் ராதிகாவை முதன்முறையாகப் பார்த்திருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா. ஆனாலும், அவர்தான் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் நாயகி என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். அப்படித்தான் அதில் ‘பாஞ்சாலி’யாகத் தோன்றினார் ராதிகா.

அந்தப் படத்தில் ராதிகாவின் நடிப்பு எப்படி இருக்கும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்குமே தெரியும். செல்லமாக வளர்ந்த உயர் நடுத்தரவர்க்கப் பெண் என்பது போன்றே அவரது இருப்பு அதில் தெரிந்தது.

அதன் படப்பிடிப்பில் கூட, சட்டென்று கோபித்துக்கொள்ளும் ராதிகாவைச் சமாதானப்படுத்த படக்குழு சாக்லேட்களை அடிக்கடி தந்து சமாதானப்படுத்தியதாக, அவரே சில பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

அப்படிப்பட்டவர் தொடர்ந்து வெவ்வேறு கதைகள், பாத்திரங்களைக் கொண்ட படங்களில் நடித்ததும், அதன் வழியே ஒரு நட்சத்திரமாக உயர்ந்ததும் ஆச்சர்யமான ஒன்றுதான்.

சீரான முன்னேற்றம்!

ஒரு கல் சிற்பத்தை, மரச் சாமானை, நல்லோவியத்தை மெல்ல மெல்லச் சீராக்கி முழுமையாக்கும்போது ஒரு தோற்றம் கிடைக்கும். அப்படியொரு முன்னேற்றத்தை தொண்ணூறுகளில் திரையுலகில் அடைந்தார் ராதிகா. அதற்கேற்ப, எண்பதுகளில் அவர் பல இயக்குனர்கள், கதாசிரியர்கள், நடிகர் நடிகைகளோடு இணைந்து பணியாற்றினார்.

1981-ல் வெளியான ‘இன்று போய் நாளை வா’ படம், ராதிகா நகைச்சுவையிலும் வெளுத்துக் கட்டுவார் என்று காட்டியது. அந்த படத்தில் அப்பாவித்தனமும் குயுக்திகளும் கலந்த பதின்ம வயதுப் பெண்ணைத் திரையில் வெளிப்படுத்தியிருந்தார். அந்த அம்சங்கள் அவரது தோற்றம், நடிப்பு மட்டுமல்லாமல் குரலிலும் கூட தென்பட்டது.

போக்கிரிராஜா, பொய் சாட்சி, ரங்கா, மூன்று முகம் போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்தவர், அதே வேகத்தில் மெட்டி, ஈரவிழி காவியங்கள் போன்று வழக்கத்திற்கு மாறான கதையம்சங்களைக் கொண்ட படங்களுக்கும் முக்கியத்துவம் தந்திருக்கிறார்.

அந்த அனுபவங்களே ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் இன்னொரு நாயகிக்குத் தாயாக நடிக்கத் தயங்காத நிலையை உண்டுபண்ணியது. ‘பிள்ளை நிலா’வில் வில்லத்தனமாக நடிக்கத் தைரியம் தந்தது. ’நானே ராஜா நானே மந்திரி’ போன்ற கதைகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாயகிகளில் ஒருவராக இடம்பெறச் செய்தது.

கிடைத்த நடிப்பு வாய்ப்புகள் மூலமாகத் தன்னை நாளும் மெருகேற்றிக்கொண்டே வந்தார் ராதிகா. அவர் எப்பேர்ப்பட்ட நடிகை என்பதை ரசிகர்கள் முழுமையாக அறியும் விதமாக, ஒரு படம் தந்தார். அது, கே.விஸ்வநாத்தின் ‘சிப்பிக்குள் முத்து’. கிட்டத்தட்ட ஒரு உலகசினிமா பார்க்கும் அனுபவத்திற்கு ஈடான ஒரு திரையனுபவத்தை இன்றும் தரவல்லது அப்படம். அதில் ராதிகாவின் நடிப்பு ‘கிளாஸ்’ ஆக அமைந்தது.

ராதிகா நினைத்திருந்தால், அப்போது இந்தி திரையுலகில் அதுபோன்ற பாத்திரங்களில் நடித்து வந்த ஷப்னா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டீல் வரிசையில் இடம்பெற்றிருக்கலம். ஆனால், கமர்ஷியல் படங்கள், கலை படங்கள் என்ற பேதம் தேவையில்லை என்பதாகவே அவரது படத்தேர்வுகள் இருந்தன.

அதனாலேயே பேர் சொல்லும் பிள்ளை, ரெட்டைவால் குருவி, உழவன் மகன், ஊர்காவலன், பாசப்பறவைகள், பூந்தோட்ட காவல்காரன், நல்லவன், நினைவு சின்னம் என்று தன்னை ரசிகர்கள் நினைவில் வைத்துக்கொள்ளும் படங்களில் நடித்தார் ராதிகா.

பின்பாதி மாற்றங்கள்!

1990-ல் வசந்தின் இயக்கத்தில் ‘கேளடி கண்மணி’யில் நடித்தார் ராதிகா. அது அவரை இன்னும் வித்தியாசமாகக் காட்டியது.

ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் தனது நடிப்புலக வாழ்வில் ஒரு உயரத்தை எட்டினார் ராதிகா. அவற்றை அடையாளப்படுத்தும் படங்களில் ஒன்றாக அது அமைந்தது.

‘கிழக்குச் சீமையிலே’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘நம்ம அண்ணாச்சி’, ‘பவித்ரா’, ’பசும்பொன்’, ‘கருவேலம்பூக்கள்’, ‘சூர்ய வம்சம்’, ‘ஜீன்ஸ்’, ‘பூமகள் ஊர்வலம்’, ‘சிறகுகள்’ போன்ற படங்கள் அந்த காலகட்டத்தில் அவருக்குப் பெரும்புகழைத் தந்தன.

தான் நடிக்க வந்த ஆறேழு ஆண்டுகளிலேயே அம்மா பாத்திரங்களை ஏற்ற ராதிகா, 2000ஆவது ஆண்டுக்குப் பின்னர் அப்படிப்பட்ட வேடங்களுக்காக மட்டுமே அழைக்கப்பட்டபோது தயங்காமல் ஏற்றுக்கொண்டார்.

ரோஜா கூட்டம், கண்ணாமூச்சி ஏனடா, சகுனி, பூஜை போன்ற படங்கள் அவரை வேறுபட்ட பெண்மணியாகக் காட்டின.

நானும் ரவுடிதான், தெறி, தர்மதுரை போன்ற படங்கள், ’அவருக்காக அந்த அம்மா பாத்திரங்கள் எழுதப்பட்டனவோ’ என்ற சந்தேகத்தை எழுப்பின.

‘லவ் டுடே’, ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ வரை தன்னைத் தனித்துவமாகக் காட்டும் படங்களில் மட்டுமே அவர் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் கூட இன்றும் அவர் நடிக்கிறார். திலீப்புடன் அவர் நடித்த ‘பவி கேர்டேக்கர்’ படம் அப்படியொன்றாக இருந்தது.

பின்பற்றத்தக்க ஆளுமை!

திரையில் மட்டுமல்லாமல் ஒரு பெண் ஆளுமையாகவும் இன்றைய தலைமுறையினருக்கு ஆச்சர்யம் அளிக்கக்கூடியது ராதிகாவின் இயல்பு. தன்னம்பிக்கை, தன்னிறைவு, தற்சார்பு போன்ற விஷயங்கள் அவரிடத்தில் நிறைந்திருப்பதைக் காண முடியும்.

சில நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்வையும் திரை வாழ்க்கையையும் ரசிகர்கள் ஒன்றோடொன்று பிணைத்துக் காண்பார்கள். ஆனால், தொண்ணூறுகள் முதலே இரண்டையும் வெவ்வேறாகச் சமூகத்தின் முன்னால் வெளிக்காட்டியவர் ராதிகா.

போலவே, தன்னைக் குறித்த சர்ச்சைகளுக்குத் தயக்கம் ஏதுமின்றிப் பதில் சொல்பவர். அந்தக் குணாதிசயத்தைக் காண்பது அரிது. அந்த வகையில் பலரும் பின்பற்றத்தக்க சில இயல்புகள் அவரிடத்தில் இருக்கின்றன.

அறுபதுகள், எழுபதுகளில் நாயகியாக நடித்தவர்கள் அம்மா, பாட்டி பாத்திரங்களிலும் பின்னர் பரிமளித்தனர். அந்த வரிசையில், இனி வரும் தலைமுறையினரிடம் அவர் பாட்டியாகவும் அறிமுகமாகலாம். அதையும் அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு செயல்படுவார் என்றே தோன்றுகிறது.

1978-ம் ஆண்டு திரையில் அறிமுகமானது முதல் இன்றுவரை இடைவிடாது ஓய்வற்றுச் செயல்பட்டு வருகிறார் ராதிகா. அந்த உழைக்கும் குணம் கூட நமக்கு ஒரு முன்மாதிரி தான். அப்படிப்பட்ட ராதிகா, இன்று 62 ஆண்டுகளைப் பூர்த்தி செய்திருக்கிறார். அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

– மாபா

You might also like