3 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த ‘ரிக்ஷாக்காரன்‘!

‘புரட்சித் தலைவர்‘ எம்ஜிஆரின் தாயார் சத்யா அம்மையார் பெயரில் ‘சத்யா மூவீஸ்’ எனும் திரைப்பட நிறுவனத்தை 1963-ம் ஆண்டு ஆரம்பித்தார், ஆர்.எம்.வீரப்பன்.

எம்ஜிஆரை வைத்து அவர் மொத்தம் 6 படங்களைத் தயாரித்தார். சத்யா மூவீசின் நான்காவது படமான ‘கண்ணன் என் காதலன்‘ படத்தை நான்கே மாதங்களில் எம்ஜிஆர், முடித்துக்கொடுத்து விட்டார்.

ஆனால் ஐந்தாவது படமான ‘ரிக்ஷாக்காரன்‘ 3 ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பிலேயே, இருந்தது. பல காரணங்கள். 1968-ம் ஆண்டு பூஜைப்போடப்பட்ட ‘ரிக்ஷாக்காரன்‘, 1971-ம் ஆண்டுதான் வெளியானது.

படத்தின் பெயரில் ‘ரிக்ஷா’ இருந்ததாலோ என்னவோ, அந்தப் படத்துக்கு பல்வேறு  நிறுத்தங்கள் உண்டானது. அந்த ‘ரிக்ஷா‘ பல மாற்றங்களையும் எதிர்கொண்டது ‘காலத்தின் கட்டாயம்‘ என்றே சொல்ல வேண்டும்.

கதாநாயகி இல்லாமலேயே படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படத்தை முதலில் டைரக்டு செய்தவர் காசிலிங்கம். எம்ஜிஆரின் சகோதரியாக பண்டரிபாய் நடிக்க, சில நாட்கள் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்றது.

அந்த நேரத்தில் எம்ஜிஆர், தனது சொந்த படமான ‘அடிமைப்பெண்’ படத்தை முடிப்பதில் தீவிரம் காட்டியதால், ரிக்ஷாக்காரன் படப்பிடிப்பு தற்காலிமாக நிறுத்தப்பட்டது. மற்றொரு பேரிடியாக முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணாவும் மறைந்தார்.

இதனைத் தொடர்ந்து திமுகவிலும், ஆட்சியிலும் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டன. இதன் மையப்புள்ளியாக இருந்தார் எம்ஜிஆர். இதனால் ‘ரிக்ஷா’வை இயக்குவது தாமதமாகிக் கொண்டே சென்றது.

1969-ம் ஆண்டு இறுதியில் படம் குறித்து எம்ஜிஆருடன் விவாதித்தார், ஆர்.எம்.வீரப்பன். இதன் தொடர்ச்சியாக படத்தில் சில மாற்றங்கள்.

காசிலிங்கத்துக்கு பதிலாக, எம்.கிருஷ்ணன் இயக்குநர் ஆக்கப்பட்டார். அவர், அப்போது மலையாளத்தில் வெற்றிப்பட இயக்குநராக விளங்கினார்.

எம்ஜிஆர் சகோதரியாக பண்டரிபாய்க்கு பதிலாக ‘ நாட்டியப் பேரொளி’ பத்மினி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

கதாநாயகி யார்? என்பது மட்டும் ரொம்ப நாட்கள் முடிவு செய்யப்படாமல் இருந்தது.

ஒரு வழியாகத் தேர்வு செய்யப்பட்டவர் – மஞ்சுளா. அவர் அப்போது, எம்ஜிஆர் பிக்சர்சின் அடுத்த படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, நடனப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தார்.

படத்தில், மஞ்சுளா அறிமுகமாகும், பாடல் காட்சி பிரமாண்ட அரங்கம் அமைத்து படமாக்கப்பட்டது.

மிரள வைக்கும் முகத்துடன் தோன்றும் ஜஸ்டினுடன் எம்ஜிஆர் மோதும் படத்தின் ’கிளைமாக்ஸ்’ சண்டைக் காட்சி இன்றளவும் பேசப்படுகிறது.

ஆசியாவின் மிகப்பெரிய படப்பிடிப்பு தளமான வாஹினி ஸ்டூடியோவின் எட்டாவது தளத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் அரங்கம் அமைத்து, இந்தக் காட்சி படமாக்கப்பட்டது.

1971-ம் ஆண்டு மே மாதம் 29-ம் தேதி வெளியான ‘ரிக்ஷாக்காரன்‘ தமிழ்நாட்டையே ஒரு கலக்கு கலக்கியது. சென்னை தேவி பாரடைஸ் திரையரங்கில் முதன்முதலாக 163 காட்சிகள் தொடர்ந்து அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடியது.

மதுரை நியூசினிமா தியேட்டரில் 161 நாட்கள் ஓடியது. அதுவரை இல்லாத சாதனையாக தமிழகம் முழுவதும் 51 நாட்களில் 50 லட்சம் ரூபாய் வசூலித்து எம்.ஜி.ஆரை ‘வசூல் சக்கரவர்த்தி’ என்று மீண்டும் நிரூபித்த சாதனை சினிமா ‘ரிக்ஷாக்காரன்’.

‘பாரத்‘ எம்ஜிஆர்.

‘ரிக்ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற்காக, 1971-ம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருது எம்ஜிஆருக்கு கிடைத்தது. அதாவது, இந்தியாவின் சிறந்த நடிகராக அவர் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக அவருக்கு ‘பாரத்’ விருது வழங்கப்பட்டது.

(அப்போது தேசிய அளவில் சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்படுபவருக்கு ‘பாரத்’ விருதும், நடிகைக்கு ‘ஊர்வசி‘ விருதும் அளிக்கப்பட்டது. இப்போது, அந்தப் பட்டங்கள் கிடையாது)

அந்த நேரத்தில் ‘இதய வீணை’ படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றிருந்தார் எம்ஜிஆர். அப்போது காஷ்மீர் வானொலி அவரிடம் பேட்டி கண்டது. ‘பாரத்’ விருது பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

‘’நான் இதை எதிர்பார்க்கவில்லை. எனக்கு பாரத் விருது அளிக்கப்பட்ட செய்தியை மனதில் பதிய வைத்துக் கொள்ளவே எனக்கு கொஞ்ச நேரம் பிடித்தது. இப்படி ஒரு பட்டம் எனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் இருந்த காரணத்தால், இதை நம்புவதற்கே சிறிது நேரம் ஆனது’’ என்று அடக்கத்துடன் பதில் அளித்தார், புரட்சித் தலைவர்.

– பாப்பாங்குளம் பாரதி.

#புரட்சித்_தலைவர் #எம்ஜிஆர் #சத்யா_மூவீஸ் #ஆர்_எம்_வீரப்பன் #ரிக்ஷாக்காரன் #காசிலிங்கம் #பண்டரிபாய் #அடிமைப்பெண் #அண்ணா #திமுக #எம்.கிருஷ்ணன் #மஞ்சுளா #வாஹினி_ஸ்டூடியோ #mgr #sathya_movies #r_m_veerappan #rickshawkaran #kasilingam #pandaribai #adimaipen #anna #dmk #m_krishnan #manjula #vahini_studio #rickshawkaran_movie

You might also like