தமிழில் வந்த மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இன்றுவரை பேசப்படும் படம் கேளடி கண்மணி. பாலச்சந்தர் அப்போதைய நேரத்தில் இயக்கி வெற்றி கண்ட ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தில் வரும் கேளடி கண்மணி பாடலின் ஹிட்டால் பாலச்சந்தரின் சிஷ்யரான வசந்த் அந்த பாடலின் முதல் வரியையே தலைப்பாக்கி விட்டார்.
விவேக் சித்ரா நிறுவனம், அதிபர் சுந்தரம் அவர்கள் பாலச்சந்தரிடம் பல படங்களின் முன்னணி உதவி இயக்குநராகப் பணியாற்றிய வசந்திடம் ஒரு படம் பண்ணச் சொல்லி இருக்கிறார். வசந்திடம் கதை இல்லை. இந்த நேரத்தில் வசந்துக்காக முன்னணிக் கதாசிரியர் அனந்து உருவாக்கிக் கொடுத்த கதைதான் இது.
படத்தின் ஒன்லைன் அன்பான அப்பா, அன்பான மகள், அவள் ஒரு வாலிபரை காதலிக்கிறார். ஆனால், அந்த சமயத்தில் மகள் தீராத நோயினால் பாதிக்கப்படுகிறார். அப்பா மகள் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
அப்பாவாக எஸ்.பி.பி நடித்திருந்தார். அவர்தான் படத்தின் ஹீரோ. அவருக்கும் கடந்த கால காதல் மற்றும் கல்யாணத்திற்கு ஒரு ப்ளாஷ்பேக் என கதை அமைக்கப்பட்டிருந்தது.
நோயுடன் போராடும் எஸ்.பி.பியின் மகளாக அஞ்சு நடித்திருந்தார். இந்த வேடத்திற்கு முதலில் சுகன்யா புக் செய்யப்பட்ட நிலையில் அவரால் நடிக்க முடியாமல் போய் விட்டதாம், அதன் பின்னர் அஞ்சு தேர்வு செய்யப்பட்டாராம்.
எஸ்.பி.பியின் கதாபாத்திரத்திற்கு முதலில் எஸ்.பி.பி. தான் வேண்டும் என்று அடம்பிடித்து அவரை அந்த கதாபாத்திரத்தில் சேர்த்திருக்கிறார் இயக்குனர் வசந்த்.
மனதில் உறுதி வேண்டும் படத்தில் எஸ்.பி.பி ஒரு டாக்டர் வேடத்தில் நடித்திருப்பார். அந்த நடிப்பின் மீது பிரியப்பட்ட வசந்த், எஸ்.பி.பியின் கதாபாத்திரத்தை உருவாக்கி அவரிடம் சொன்னாராம். ஆனால் எஸ்.பி.பி, “வேண்டாம் வசந்த், நீங்க என்னை முன்னணிக் கதாநாயகன் போல ப்ரமோட் செஞ்சு ரிஸ்க் எடுக்குறிங்க” என்று சொன்னாராம்.
எல்லாவற்றையும் புறந்தள்ளி எஸ்.பி.பியையே நடிக்க வைத்தாராம் வசந்த். உடன் நடிக்க சுகாசினியை அணுகி இருக்கிறார். சுகாசினி தெலுங்கு படத்தில் நடித்ததால் இதில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். அதனால் அந்த கதாபாத்திரத்தில் எஸ்.பி.பியின் தோழியாக ராதிகா நடித்திருந்தார்.
எஸ்.பி.பியின் மனைவியாக கீதா நடித்திருந்தார். அஞ்சுவின் சின்ன வயது வேடத்தில் பேபி நீனா நடித்திருந்தார். அந்த நேரத்தில் பேபி நீனா பிரபலமான குழந்தை நட்சத்திரம்.
ரமேஷ் அரவிந்த், அஞ்சுவை அவர் நோயுற்றாலும் கடைசி வரை காதலிப்பவராக நடித்திருந்தார்.
இப்படத்தில் இடம்பெற்ற மண்ணில் இந்த காதலன்றி பாடலை மூச்சு விடாமல் பாடி இன்று வரை அந்தப் பாடல் புகழின் உச்சத்தில் உள்ளது.
நீ பாதி நான் பாதி, தென்றல்தான் திங்கள்தான், முதலில் டைட்டிலில் வரும் என்ன பாடுவது போன்ற அனைத்து பாடல்களும் ஹிட்.
இதில் அருமையான ரொமாண்ட்டிக் பாடலான தென்றல்தான் திங்கள்தான் பாடல் சூழ்நிலையைச் சொல்லி இளையராஜா சொல்ல, அதற்கு வரிகள் எழுத யோசித்து யோசித்து, தனது மனைவியை பிரசவத்துக்காக தனது சொந்த ஊரான தஞ்சாவூர் ரயிலில் அனுப்ப ஆட்டோவில் அழைத்துச் சென்றபோது, எங்கோ காற்றில் கேட்ட பழைய பாடலான “தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்” பாடல் இவரைத் தட்டி எழுப்பிவிட்டிருக்கிறது கவிஞர் விஞர் பிறைசூடனுக்கு. ஆட்டோவில் உதித்த சிந்தனைதான் இந்தப் பாடல் என மறைந்த கவிஞர் பிறைசூடனே சொல்லி இருக்கிறார்.
இப்படத்தில் உமா ரமணன் பாடிய தண்ணியில நனைஞ்சா என்ற பாடல் ஆல்பத்தில் மட்டும் இடம்பெற்றது. படத்தில் வரவில்லை.
இப்படம் சுவையாக எடுக்கப்பட்டிருந்தாலும் காமெடி டிராக் ஆக வரும் ஜனகராஜின் கதாபாத்திரமும் புகழ்பெற்றது. அடைக்கலராஜ் அச்சகம் என்ற பெயரில் அச்சகம் நடத்தி வரும் ஜனகராஜ் கனவில் கண்டது எல்லாம் நிஜத்திலும் நடக்க, ரகளையான காமெடியாக அது அந்த நேரத்தில் புகழ்பெற்றது.
இறுதியில் கனவில் இறப்பது போல் கனவு கண்டு ஜனகராஜின் கதாபாத்திரமும் சோகமாக முடிக்கப்பட்டது.
எல்லாம் சரிவிகிதக் கலவையாக சேர்க்கப்பட்ட இந்த படம் 1990-ல் ஜூலை 27-ல் வெளியாகி 285 நாட்கள் ஓடியது.
தமிழ்நாடு திரைப்பட விருதுகளை மூன்று பிரிவுகளில் இந்தப் படம் வென்றது. ராதிகா, சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசின் விருது பெற்றார்.
நன்றி: முகநூல் பதிவு.