மரபின மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போம்!

இயற்கைதான் எங்கள் இறைவன், பூமிதான் எங்கள் கோவில் என்று சொல்லித்தான் இன்றும் வாழ்கிறார்கள் மலைவாழ் பூர்வீகக் குடிமக்கள்.

பழங்குடிகளுக்கு மலைதான் தாய்மடி. உலகின் காடுகளும் மரங்களும் இயற்கை புல்வெளிகளும் உருவாகியதில் இயற்கையின் பங்குக்கு இணையாக ஆதிக்குடிகளின் பங்கு உள்ளது.

அத்தகைய பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுகாப்பது, அவர்களது சாதனைகளை அங்கீகரிக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் ஆகஸ்ட் 9ல் பன்னாட்டு பழங்குடியினர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அது குறித்துதான் இன்றைய நம் நிகழ்ச்சியில் காண உள்ளோம்.

உரிமைக்காக போராடிய பழங்குடியின தம்பதி

கோவை மாவட்டம் வால்பாறையில் தங்கள் நில உரிமைக்காக அகிம்சை வழியில் போராடி வென்ற பழங்குடியின தம்பதியை, டெல்லியில் இந்தாண்டு நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்க விவிஐபியாக அழைத்து கௌரவித்தது மத்திய அரசு.

அவர்கள் சாதித்தது என்ன?

கோவை மாவட்டம் ஆனைமலைப் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறையில், காடர், மலசர், மலை மலசர், எறவலர், புலயர் மற்றும் முதுவர் ஆகிய 6 வகை பழங்குடியின மக்கள் உள்ளனர்.

இதில், காடர் சமுதாயத்தினர் கல்லார், கவர்க்கல், உடுமன்பாறை, நெடுங்குன்றா உள்ளிட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கல்லார் கிராமத்தில் 2019ல் பெய்த கனமழையில், வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனைத் தொடர்ந்து வசிப்பதற்கு இடம் கேட்டு கல்லார் பழங்குடியினர் போராட்டம் நடத்தினர்.

காடர் இன மக்களின் பிரதிநிதிகளாக கல்லாரைச் சேர்ந்த பழங்குடியின விவசாயி ஜெயபால் – ராஜலட்சுமி தம்பதியினர் முன்னின்று இந்த போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றனர்.

பலவித போராட்டங்களைத் தொடர்ந்து, 2021ல் இறுதியாக இவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது, காடர் மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கைகள் அரசின் பார்வைக்குச் சென்றன.

இந்தத் தம்பதியின் தொடர் அகிம்சை வழிப் போராட்டத்தின் வெற்றியாக, கல்லார் தெப்பக்குள மேடு பகுதியில் இந்தத் தம்பதி உள்பட 26 பழங்குடியினக் குடும்பங்களுக்கு தமிழக அரசு பட்டா வழங்கியது.

கல்லார் மட்டுமின்றி கவர்க்கல், உடுமன்பாறை, நெடுங்குன்றா, எருமைப்பாறை என பல காடர் இன கிராமங்களில், 120க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு அரசு பட்டா வழங்கியது.

காடர் இன மக்களின் ஒட்டுமொத்தக் குரலாக ஒலித்து அகிம்சை வழியில் போராடி வென்றுள்ள ஜெயபால் – ராஜலட்சுமி தம்பதியை கெளவுரவிக்கும் விதமாக, இவ்வாண்டு 26ஆம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் முன்னிலையில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்க விவிஐபியாக அழைத்தது மத்திய அரசு.

நாகரீக மனிதனின் வரலாறு

ஒவ்வொரு நாடு உருவான கதையும் அதன் பழங்குடிகளின் இரத்தத்தைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

செவ்விந்தியர்களை அழித்து உருவான அமெரிக்கா, அமேசான் பழங்குடியின அழிப்பு, ஆப்ரிக்க பழங்குடியின அழிப்பு, ஆஸ்திரேலிய அடக்குமுறைகள் என உலக நாகரீக மனிதனின் வரலாறே பழங்குடியின அழிப்பில் தான் துவங்கியது என்று சொன்னால் மிகையாகாது.

தொல்குடிகள், முதுகுடிகள், ஆதிக்குடிகள், பழங்குடிகள், திணைக்குடிகள், பூர்வீகக் குடிகள் என்றெல்லாம் அறியப்படும் இவர்கள், உலகளாவிய நிலையில் 37 கோடி பேர் வாழ்ந்து வருகின்றனர்.

பழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டோ பன்னெடுங்காலமாகவோ, அதாவது ஏறக்குறைய 10,000 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும் மொழியும் நிலமும் கொண்டு அதனைச் சார்ந்த செடி, கொடி, மரம், விலங்குகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தன்னிறைவோடு வாழ்பவர்கள்.

காடுகளை, இயற்கை வளங்களைப் பாதுகாக்க பழங்குடியினரின் தீரமிக்க செயல்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. வனத்தைக் காக்க உயிர்களைத் தியாகம் செய்த பழங்குடியினரின் வரலாறு உலகெங்கிலும் உண்டு.

எனவே தான், சூழலியலைப் பாதுகாக்க நாம் பழங்குடியின மக்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்கள், தங்களது பாரம்பரிய அறிவை, இயற்கையிடம் இருந்தும், தங்களின் முன்னோர்களிடம் இருந்தும் பெறுகின்றனர்.

மரபுப் பொருளாதாரம் என்பது பழங்குடிகளின் காடு, வயல், கடல் சார்ந்த எளிமையான பொருளாதார முறையைக் குறிக்கும்.

எடுத்துக்காட்டாக அந்தமான் பழங்குடிகள், அமேசான் பழங்குடிகள், சில ஆப்பிரிக்கப் பழங்குடிகள் ஆகியோர் ஓரளவுக்கு இன்றும் இம்முறையிலேயே வாழ்கின்றனர்.

உலகில் பழங்குடியினர்

உலகம் முழுவதும் வாழும் பழங்குடியினர் பற்றிய துல்லியமான கணக்கெடுப்புகள் இல்லையென்றாலும், சுமார் 37 கோடி பழங்குடியின மக்கள் 90 நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர் என்ற புள்ளி விபரங்கள் கிடைக்கின்றன.

இது உலக மக்கள் தொகையில் 6 விழுக்காட்டிற்கும் குறைவு எனினும் இவர்கள் ஏறக்குறைய 5 ஆயிரத்திற்கு அதிகமான கலாச்சாரங்களையும், 7 ஆயிரத்திற்கு மேற்பட மொழிகளையும் பேசுகின்றனர்.

இந்தியாவில் 702 பழங்குடி இனங்கள் அடர்ந்த மலைகள், வனங்கள், சமவெளிகள், தீவுகளில் பழங்காலத் தன்மை மாறாமல் வாழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து காந்தி கிராம பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவரும், பேராசிரியருமான ஒ.முத்தையா கூறியதாவது: 1961-ல் நடந்த கணக்கெடுப்பில் இந்தியாவில் 1,100 மொழிகள் இருந்தன. 2001-ல் அது 850-ஆகக் குறைந்து 250-க்கும் மேற்பட்ட மொழிகள் மறைந்தே போயின.

பல்வேறு பழங்குடியின மொழிகள் அழிவை நோக்கி செல்கின்றன. பழங்குடிகள் பலர் தங்களது தாய் மொழியைவிட்டு, பிழைப்பு தேடிப் பொது மொழியை நாடிச் செல்வதும் அவர்களது பாரம்பரிய மொழியின் அழிவுக்கு காரணம் என்கிறார்.

மொழிகள் பேச்சுக்காக மட்டும் அல்ல. அதில் தொல்லியல் அடையாளங்களும், பாரம்பரிய அறிவு முறைகளும், சடங்குகளும், பண்பாட்டுக் கூறுகளும் அடங்கியுள்ளன.

தமிழக நிலை

தமிழக முழுவதும் 8 இலட்சம் பழங்குடியினர் இருக்கும் சூழலில், பழங்குடியினர் பெரும்பாலும் காடுகளிலும் மலைகளிலும் வசித்தவர்கள் தான் என்றாலும், தற்போது சமவெளிப்பகுதியிலும் வாழ்கிறார்கள்.

மொத்தம் 36 பிரிவு பழங்குடியினர் தமிழ்நாட்டில் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் சுரண்டப்படுபவர்களாக இருக்கின்றனர். இதற்கான அரசியல் சமூக காரணம் ஏராளம்.

யாரும் கண்டுகொள்ளாத இவர்களின் நிலை பலகட்ட விழிப்புணர்வுகளுக்கும், சில திரைப்படங்களுக்குப் பின்னும் பலரின் கவனத்துக்கும் அரசின் கவனத்துக்கும் வந்தது. அதன் பின்னர் பல இடங்களில் பழங்குடியின சமூகத்தினருக்கு வீட்டுமனை பட்டா தமிழக அரசால் கொடுக்கப்பட்டது.

தமிழகத்தில் தோடர், கோத்தர், இருளர், கசவர், முள்ளுக் குரும்பர், பொட்டக் குறும்பர், பணியர், காட்டுநாயக்கர், பளியர், குறவர், மலைமலசர், மலைவேடர், காணிக்காரர், காடர், முதுவர் என்று 36 வகையான பழங்குடியினத்தவர் வசிக்கின்றனர்.

நீலகிரியில் மட்டும் 7 வகையான பழங்குடியினர் உள்ளனர். அண்மையில் நரிக்குறவர்கள் 37ஆவதாகப் பழங்குடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

நீலகிரியில் வாழும் தோடர்கள், இயற்கையை வர்ணித்துப் பாடுவதில் வல்லவர்கள். அவர்களின் இசை மொழி தனித்துவமானது.

தோடர்களின் கைத்திறனில் உருவாக்கப்படும் ‘பூத்குளி’ என்ற ஆடைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு அங்கீகாரமும் கிடைத்துள்ளது. கோத்தர் இன மக்கள் கைவினைத் தொழில்கள் மற்றும் இசைக்கருவிகளை இசைப்பதில் திறமையானவர்கள்.

இருளர்கள் பாம்புகளைக் கையாள்வதில் புகழ் பெற்றவர்கள். ஆனைமலைக் காடர்கள் யானைகளின் போக்குகளை அறிவதில் வல்லவர்கள். பழநி மலையில் வாழும் பளியர்கள் மலைத்தேன் எடுப்பதில் கைதேர்ந்தவர்கள்.

கொல்லிமலை மலையாளிகள் மரபுவழி வேளாண்மையில் திறன் உடையவர்கள். பொதிகை மலையில் வாழும் காணிக்காரர்களின் மாந்திரீக மருத்துவம், பணியர்களின் ஒப்பனை போன்றவை தனித்துவமானவை.

இயற்கை சார்ந்த அறிவு, பருவ நிலை மாற்றங்கள் குறித்த தெளிவு என்று ஒவ்வொரு பழங்குடியும் ஒவ்வொரு விதமான தனித்திறன் பெற்றுள்ளனர். பாரம்பரிய வாழ்க்கை முறைகளை தொடர்ந்து பின்பற்றியும் வருகின்றனர்.

விரட்டப்படும் மக்கள்

ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மலை மீதும், காடுகளுக்குள்ளும், இனக்குழுக்களாகவும் வாழ்ந்த பழங்குடியினரிடம் சென்று இனி இந்த மலையும், காடும், மண்ணும் உங்களுக்கு சொந்தமில்லை.

நீங்கள் மிருகங்களுக்கு தொந்தரவு கொடுக்கிறீர்கள், இயற்கையை காயப்படுத்துகிறீர்கள் அதனால் இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்று யாராவது சொல்லியிருந்தால் ஈட்டியை எடுத்தே கொன்றிருப்பார்கள், அல்லது சிரித்து விட்டு குடிலுக்கு திரும்பியிருப்பார்கள்.

ஆனால், இன்று இதே வாசகங்களை சொல்லி பூர்வீக குடிகளை துரத்தி விட்டு அதே காடுகளை சூறையாடி கொண்டிருக்கிறது நாகரிக சமூகம்.

காடுகளை விட்டு விரட்டப்பட்டும், வலுக்கட்டாயமாக மறுகுடியமர்வு செய்யப்பட்டும், வாழ்வாதாரத்தை தேடி சென்றும் என பழங்குடியினர் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.

பழங்குடியின மக்கள் தலைமுறை தலைமுறையாக தங்களின் கலாச்சாரங்களையும், வாழ்வியலையும் இயற்கையுடன் இணைந்து காப்பாற்றி வாழ்கின்றனர். இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக பெற்ற தங்கள் பாரம்பரிய அறிவின் மூலமாக இயற்கையிடம் இருந்தே உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் அனைத்தையும் பெற்று வாழ்கின்றனர்.

இன்று பெரும்பாலான மலைகள், காடுகள் அழிப்படுவதால் பழங்குடிகளின் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்படுகிறது, இதன்காரணமாக அவர்கள் போராடும் சூழலுக்கும் தள்ளப்படுகின்றனர். அவர்களிடையே பணியாற்றி தன் உயிரையும் கையளித்த இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை இந்நேரத்தில் நாம் நினைவுகூராமல் இருக்க முடியாது.

வரலாறு சொல்வதென்ன?

வரலாறுகளைக் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். 1974-ல் தன்சானியாவின் கோரோங்கோரோ கிரேட்டர் வனப் பகுதியிலிருந்து மாசாய் பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதியில் வன விலங்கு வேட்டை அதிகரித்திருக்கிறது.

19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் பூங்கா பகுதியிலிருந்து பூர்வகுடி மக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், எல்க் எனப்படும் காட்டு மான்களாலும் மற்றும் பைசன் என்றழைக்கப்படும் காட்டெருமைகளாலும் அதிக அளவு மேய்ச்சலுக்குட்பட்டு அப்பகுதி நிலங்கள் பாழாகின.

காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த, ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் கட்டுப்பாடான எரிப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்தனர். தெற்காசியக் காடுகளின் பழங்குடி மக்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் புலிகளின் அருகில் வாழ்ந்து வந்தவர்கள்.

ஆனால், இன்று ‘புலிகள் பாதுகாப்பு’ என்ற பெயரில் அம்மக்கள் காடுகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். நேபாளத்தின் சிட்வான் தேசியப் பூங்காவின் சில பகுதிகளிலிருந்த பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அப்பகுதிகளை விடவும் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.

இந்தியாவில் பழங்குடி மக்களின் நில உரிமையை அங்கீகரிப்பதற்குப் பதிலாக, அதிகமான எண்ணிக்கையில் வனவிலங்குப் பூங்காக்களை நிறுவி, அங்கிருந்த பழங்குடி மக்களை வெளியேற்றிவருவதுடன், அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவர முயற்சிக்கின்றன அரசுகள்.

தென்கிழக்கு கேமரூனில் பாக்கா பிக்மி மக்கள் தங்கள் மூதாதைய நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அந்த வனப் பகுதிகள் தேசியப் பூங்காக்களாகவும் வேட்டைச் சுற்றுலாத் தலங்களாகவும் மாற்றப்பட்டுவிட்டன.

போட்ஸ்வானாவின் புஷ்மேன் பழங்குடியினர் கலஹாரி பாலைவனத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்துவந்தனர். இன்று அவர்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டுக் கிடக்கின்றனர்.

இன்று ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’ என்று அழைக்கப்படும் அம்மக்கள் வசித்த இடங்களில் வைரம் மற்றும் புதுப்பிக்கவியலாப் பொருட்களை வெட்டியெடுக்கும் சுரங்கங்களும், சுற்றுலாப் பயணிகளுக்கான சொகுசு விடுதியும், நீச்சல் குளமும் இருக்கின்றன. பழங்குடி மக்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினைகளில் மிகச் சில உதாரணங்கள் இவை.

இலாபம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட உலமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளினால் பெரும் நிறுவனங்கள் தங்களின் சந்தைகளை விரிவுப்படுத்தும் நோக்கில் நடத்தும் படையெடுப்புகளால் பாரம்பரியமாக கட்டி காத்துவரும் வாழ்க்கை முறைகளும், பண்பாடுகளும் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் வாழ்வதற்காக போராடும் மரபின மக்களுக்கு ஆதரவாக மனிதநேயத்தை விரும்புவோர் களமிறங்க வேண்டும் என்பதே இத்தினத்தில் முன்வைக்கப்படும் கோரிக்கையாகும்.

“நாங்கள் இந்த மண்ணுக்குரியவர்கள்! இந்த மண்ணும் எமக்குரியது!” என்று மலையெங்கும் ஒலிக்கும் குரலை இனியாவது செவிமடுத்துக் கேட்போம்!

– கிறிஸ்டோபர் பிரான்சிஸ்

  • நன்றி : வாடிகன் இதழ்
You might also like