நீதிநாயகத்தைச் சிறப்பித்த விழா!

P.பாலசுப்பிரமணியன்

நூற்றாண்டுகளைக் கடந்த, புகழ்பெற்ற அம்பை தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 3 ம் தேதி காலை முப்பெரும் விழா நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு அந்தப் பள்ளியில் பயின்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மாண்புமிகு நீதிநாயகம் திரு S.ரத்தினவேல் பாண்டியன் அவர்களது சமூக, அரசியல், நீதித்துறை மற்றும் மக்கள் பணிகள் குறித்து சிறப்புரை ஆற்றியது மகிழ்ச்சியளித்தது.

இந்தப் பள்ளியின் நூலகத்திறகு அவரது பெயரைச் சூட்டியதிலும் மகிழ்ச்சியடைந்தேன்.

அவரது, புகழ்பெற்ற தீரப்புகள் மற்றும் பல்வேறு சமூக மக்கள் பணிகள் எத்தனை எத்தனை? அவைகள் குறித்துப் பேசுவதற்கு எண்ணற்ற தகவல்கள் இருந்தாலும் காலம் கருதி அவற்றை முழுமையாகப் பேச இயலவில்லை.

எனினும் மாணவர்களும் சான்றோர்களும் அவரது வாழ்வின் பல்வேறு நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்காக சில முக்கிய நிகழ்வுகள் குறித்து பகிர்ந்து கொள்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு என்ற முறையில் இந்த விழாவில் உரையாற்றியது நிறைவு.

ரத்தினவேல் பாண்டியன்

நீதிநாயகம் ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் அருமைப் புதல்வரும், எனது மைத்துனரும், 60 ஆண்டு கால நண்பரும், தற்போதைய மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவரும்

மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதியுமான மாண்புமிகு திரு R சுப்பையா மற்றும் அவரது துணைவியார் சகோதரி திருமதி உமா சுப்பையா அவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு நூலகக் கட்டடத்தைத் திறந்து வைத்தனர்.

இந்தப் பள்ளிக்கு நிலம் வழங்கிய சிங்கம்பட்டி ஜமீன்தார் அரசர்கள், ஊர்க்காடு ஜமீன் பெருந்தையினர், பெரும் தொகையை நன்கொடை வழங்கிய பெருமகனார்கள் ஆகியோர் ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் திருவுருவப்படத் திறப்பு விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

விழாவில் பேசிய மாண்புமிகு நீதிநாயகம் திரு R சுப்பையா அவர்கள், தனது தந்தையின் வாழ்க்கைப் பயணம் குறித்தும் அவரது நினைவுகளில் இந்தப் பள்ளியில் அவரது ஆளுமையின் உருவாக்கம் குறித்தும் பேசினார்.

சிங்கம்பட்டி ஜமீன்

இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கு பேருதவி புரிந்த சிங்கபட்டி அரசர் குடும்பத்தின் முடிசூடிய மன்னராக இருந்த அமரர் திரு TNS முருகதாஸ் தீர்த்தபதி அவர்களின் ஆழ்ந்த அறிவு, ஆன்மிகப் பணி,

சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பணி மற்றும் அனைத்துத் தரப்பு மக்களின் தோழனாக வாழ்ந்த, அவரது மக்கள் பணிகள் குறித்தும் அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது அவரைக் கொண்டாடும் அந்த மக்களிடம் பெரும் பாரட்டுதல்களைப் பெற்றது.

விழாவை நடத்துவதற்கு முனைப்புடன் செயல்பட்ட அன்புச் சகோதரர் அம்பை வழக்கறிஞர் சங்கத் தலைவரும் பள்ளியின் நிர்வாகக் குழுச் செயலருமான வழக்கறிஞர் திரு. கந்தசாமி மற்றும் அவருடன் துணை நின்ற அனைவருக்கும் நன்றி.

அத்துடன் இவ்விழாவைச் சிறப்பாக ஒருங்கிணைத்த நீதிநாயகம் திரு ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் தனிச்செயலராகப் பணியாற்றி 20 ஆண்டுகளாக அவரைச் சீருடன் பேணி வந்த எங்கள் குடும்பத்தின் அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்த ஆற்றல்மிகு இளைஞர் வழக்கறிஞர் தம்பி ராஜாவுக்கு நன்றி!

You might also like