தேசியம் என்பதன் அர்த்தத்தை உணர்த்துங்கள்!

வயநாட்டில் நடந்த தேசியப் பேரிடர் இந்தியா முழுமைக்குமான ஒரு அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது. வெவ்வேறு நாடுகளிலும் உள்ள ஊடகங்கள்கூட வயநாடு குறித்த தகவல்களை வெளிப்படுத்தி இருக்கின்றன.

வெவ்வேறு நாடுகளில் வேலைக்காக புலம்பெயர்ந்து இருக்கின்ற கேரளத்து மக்கள் தங்கள் மாநிலத்தில் நடந்த இந்தப் பேரிடர் குறித்து வேதனையானப் பதிவுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நான்காவது நாளாக மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பாலம் உட்பட மற்ற வசதிகளை மிக விரைவாக உருவாக்கி மீட்புப் பணிகளில் ராணுவம் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

மூன்று நாட்களுக்குப் பிறகும் அந்த சிதைவடைந்த மலைச்சரிவுக்கிடையே சிக்கியிருந்த மனிதர்களையும் குழந்தைகளையும் ராணுவத்தினர் உயிரோடு மீட்டு வந்திருக்கும் காட்சி பார்க்கும் எவரையுமே நெகிழ வைக்கக் கூடியதாக இருக்கிறது.

இஸ்ரோ போன்ற அமைப்புகளுனுடைய தொழில்நுட்ப வழிகாட்டுதல்களும், இந்த மீட்புப் பணிக்கு உதவி இருக்கிறது.

அத்துடன் இத்தகைய இயற்கைப் பேரிடர் ஏன் இந்தப் பகுதியில் நடந்தது என்பது குறித்து சுற்றுச்சூழல் அறிஞர்கள் ஆய்வு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி இருக்கிறார் கேரள முதல்வரான பினராயி விஜயன்.

இதுவரை 300-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இன்னும் பலரை தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக இந்தத் தேடுதல் பணிகளில் வயநாட்டில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள், அவர்களும் காணாமல் போன பட்டியலில் இருக்கிறார்கள் என்பதை தமிழக கேரள எல்லையோரம் உள்ள இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.

இன்னும் மீட்புப் பணி இதே விதமான தொழில்நுட்ப வசதியுடன் தொடரும்போது, இதைவிட அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் எவ்வளவு என்பது தெரிய வரலாம்.

இந்த சந்தர்ப்பத்தில் எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் கேரள முதல்வரான பினராயி விஜயனும் அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் வந்து பார்வையிட்டு, ஆறுதல் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அதில் ராகுல்காந்தி தெரிவித்திருக்கிற ஒரு வார்த்தை முக்கியமானது. தனது தந்தையின் மறைவின்போது தான் உணர்ந்த அதேவிதமான வேதனையை தற்போதும் உணர்வதாக மிக சுருக்கமான வரிகளில் தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், மத்திய அரசு இம்மாதிரி பெரும் இக்கட்டான சூழ்நிலையில் எப்படி எதிர்வினை ஆற்றுகிறது என்பதை கேரளத்து மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்களும் எதிர்பார்த்த நிலையில் தான் இருந்தார்கள்.

எந்த அளவிலும் மணிப்பூர் மாதிரியான ஒதுக்கப்பட்ட நிலைக்கு கேரளா ஆளாகி விடக்கூடாது என்கின்ற எதிர்பார்ப்பு அனைவரிடமுமே இருந்தது.

ஆனால், மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் பேச்சும், அந்தப் பேச்சின் இடையே கேரளா அரசுக்கு எதிராக அவர் முன்வைத்த குற்றச்சாட்டு மிகவும் ஒரு புண்பட்ட நெஞ்சை மீண்டும் புண்படுத்துகிற விதத்தில் அமைந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.

பல்வேறு நாடுகளுக்கு பணியின் காரணமாக புலம்பெயர்ந்து வாழும் மலையாளிகள் ஒவ்வொருவரும் இந்த வயநாட்டுத் துயரத்தைத் தங்களுடைய துயரத்தைப் போல பார்க்கிறார்கள்.

அப்படித்தான் முகநூல் உட்பட பல்வேறு வடிவங்களில் தங்களுடைய வேதனைகளை வெளிப்படுத்துகிறார்கள். அதனால் வயநாட்டில் நிகழும் ஒவ்வொரு அசைவும் கூர்மையாக அங்குள்ள மக்களால் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் யாரும் மறந்து விடக்கூடாது.

இந்தச் சூழலை ஏன் மத்தியில் ஆளும் பாஜக இந்த அளவுக்கு எதிர்கொள்ள வேண்டும்?

இந்தியாவின் கால் பகுதியை போன்று இருக்கும் கேரளத்தில் உருவான வலி, அடுத்தடுத்து உடம்பின் பல பாகங்களைப் போல இருக்கின்ற ஒவ்வொரு மாநிலத்திற்கும் பரவாதா? அதன் வலியை முழு உடலும் உணராதா? என்பது அடிப்படையான கேள்வி.

பல்வேறு மாகாணங்களாக, பிரதேசங்களாக பிரிந்திருந்த இந்தியாவை சுதந்திரப் போராட்ட காலத்திற்கு பிறகு ஒன்றுபடுத்திய சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு குஜராத்தில் பிரம்மாண்டமான சிலையை எழுப்பத் தெரிந்த பாஜகவுக்கு, அதே அவர் காட்டிய வழியில் அனைத்து மாநிலங்களையும் ஒன்றிணைத்த ஒரு தேசிய உணர்வு இருப்பதாக உணர்த்துதல் மிக முக்கியமான கடமை இல்லையா?

கேரள முதல்வரான பினராயி விஜயன், “இந்தக் கொடுமையான பேரிடரை தேசியப் பேரிடராக அறிவியுங்கள்” என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் இதை தேசியப் பேரிடராக மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை.

மத்திய அரசு சார்பிலான பிரதிநிதிகள் இத்தகைய கொடும் துயரம் நிகழ்ந்த நிலையிலும் அந்தப் பகுதிகளுக்கு வந்து பார்வையிடவில்லை. அதற்கான நிதி உதவியும் உடனடியாக தேவைப்படும் நேரத்தில் வழங்கப்படவில்லை.

இந்த விதமான பாகுபாடெல்லாம் எதை உணர்த்துகிறது? இந்திய விடுதலைக்காக நடந்த தேசியப் போராட்டத்தில் பல்வேறு மாநிலங்களுக்கு பங்கிருப்பது மாதிரியே கேரளாவிற்கும் உரிய பங்கு இருக்கிறது.

தேசியப் போராட்டத்தில் அப்படி ஒருங்கிணைந்த கேரள மாநில மக்களை அவர்கள் மிகவும் ஒரு கொடுந்துயரை சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், பாரபட்சம் காட்டுவது, தேசியம் என்று நாம் சொல்லிக் கொள்கிற ஒரு சொல்லுக்கு சரியான அர்த்தத்தை கற்பிக்காது.

தேசியம் என்பதை சொல்லாக அல்ல. செயலாக வெளிப்படுத்துங்கள். அப்படி வெளிப்படுத்தி உணர்த்த வேண்டிய நேரம் இது.

– யூகி

You might also like