தனியார் நிறுவனங்களில் தாய்மார்களுக்கென்று ஒரு அறை!

தாய்ப்பால். உலகின் ஆகச்சிறந்த உணவு. ஒரு குழந்தை இந்தப் பூமிக்கு வந்த அறுபது நிமிடங்களில் சுவைக்கும் உயிரமுதம். தாய்ப்பாலுக்கு ஈடான ஒன்று இந்த உலகில் கிடையாது என்று கூறுவது, எந்தளவுக்கு நம் வாழ்க்கையில் ‘ரொமாண்டிசைஸ்’ செய்யப்பட்ட இடத்தை அதற்கு வழங்கியிருக்கிறோம் என்பதற்கான சான்று. அப்படிப்பட்ட தாய்ப்பாலின் சிறப்புகளை நாம் முழுதாக அறிந்திருக்கிறோமா என்றால், ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

மரபுவழியாகக் கடத்தப்பட்ட பல சேதிகளைப் புறந்தள்ளியிருக்கிறோம்; தவறான புரிதல்களால் தாய்ப்பால் சுரப்பை குறைத்து வருகிறோம். அது எப்படி? அதற்கு நாம் கைக்கொண்டுள்ள தினசரி வாழ்க்கையையே கைகாட்ட வேண்டியிருக்கிறது.

முதல் உணவு!

குழந்தையைப் பிரசவித்த வேதனையில் தன்னை மறக்கும் தாய்க்கு இவ்வுலகை நினைவூட்டுவது பாலூட்ட வேண்டுமென்ற வேட்கை தான். சிசேரியன் ஆக இருந்தால், அந்த கால இடைவெளி கொஞ்சம் அதிகமிருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம். இந்தக் குழந்தைதானா இத்தனை நாட்களாய் என் கருவறையில் வளர்ந்தது என்ற எண்ணத்துடன், தொப்புள்கொடி வழியாகச் சென்ற உணவுக்குப் பதிலாகத் தன் மார்பகத்தில் சுரக்கும் சீம்பாலைத் தருவதுதான் ஒவ்வொரு தாய்க்குமான உன்னதத் தருணம்.

மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் அந்த சீம்பாலில், அந்தக் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கவல்ல ஆன்டி ஆக்சிடெண்ட், ஆன்டிபாடி ஆகியவற்றோடு ஊட்டச்சத்துகளும் மிதமிஞ்சிய அளவில் இருக்கும். எளிதில் கரையும் புரதம் இருக்கும். அதனால், மிகக்குறைவாக அளித்தாலே போதுமான ஆற்றலை அக்குழந்தை பெறும்.

நாள்பட, சுரக்கும் பாலின் நிறம் மாறும். அடர்த்தி குறையும். அதேநேரத்தில், பாலூட்டும் தருணங்கள் அதிகரிக்கும். அதனால், கலோரி இழப்பை அந்த தாய் சந்திக்க வேண்டியிருக்கும். அதன் மூலமாக, கர்ப்ப காலத்தில் அதிகரித்த அவரது எடை தானாகக் குறையும். தேவையற்ற இடங்களில் சேகரமான கொழுப்பு நீங்கும். இந்த முரண்களைச் சமநிலைப்படுத்துவதோடு, பிரசவித்தபோது உருவான வயிற்றுப்புண்களைக் குணப்படுத்த மிளகுக் குழம்பையும் சில மருந்துகளையும் அந்தத் தாய் சாப்பிட வேண்டியிருக்கும். நவீன மருத்துவத்தில் அவை மாத்திரைகளாகக் கொடுக்கப்படுகின்றன என்பதை இவ்விடத்தில் சொல்லியாக வேண்டும். இப்படியாகத் தன் குழந்தைக்கு 18 மாதங்கள் வரை ஒரு பெண் தாய்ப்பால் ஊட்டலாம். குறைந்தபட்சமாக ஆறு மாதங்கள் என்ற அளவிலும், அதிகபட்சமாக 3 – 4 வயது வரையிலும் ஊட்டலாம் என்று சொல்கின்றனர் மகப்பேறியல் நிபுணர்கள்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு இதர உணவுகளை அளிப்பது வழக்கம் என்பதால், தாய்ப்பால் ஊட்டும் தருணங்களின் எண்ணிக்கை குறையும். ஆனால், ஒருபோதும் முதல் ஆறு மாத காலத்தில் வேறு உணவுகளைக் கொடுக்கக் கூடாது. இதையெல்லாம் கேள்விப்படும்போது, ‘மூணு மாசமே பால் கொடுக்க முடியலை, இதுல எங்கயிருந்து 3 வருஷமெல்லாம் கொடுக்கறது’ என்று அங்கலாய்ப்பதையும் பார்க்க முடிகிறது.

பாலூட்டுவதற்கான தடைகள்!

துளசி, வெந்தயம், நெய், வெண்ணெய், பூண்டு, சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், நார்ச்சத்து மிகுந்த கீரைகள், பாதாம், முந்திரி மற்றும் இரு வித்திலைத் தாவரங்கள், மீன், ஆட்டிறைச்சி உட்படப் பல உணவுகள் தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். அதன் மூலமாக, தாய்க்கு ஆற்றல் இழப்பு ஏற்படுவது குறைக்கப்படும். படுத்துக்கொண்டு பாலூட்டக் கூடாது என்பது உட்படத் தாய்ப்பால் தருவதில் உள்ள பல கட்டுப்பாடுகளை நம் முன்னோர்கள் தெளிவாகச் சொல்லிச் சென்றிருக்கின்றனர். தமிழ்நாட்டின் எந்த மூலைக்குச் சென்றாலும், அது போன்ற கருத்துகளில் பெரிதாக மாற்றங்கள் இருக்காது.

சில ஆண்டுகளுக்கு முன்பு பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட குழந்தை உணவுகள் தாய்ப்பாலுக்கான இடத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கின. அதனை விடச் சத்து மிகுந்தவையாக விளம்பரப்படுத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, தாய்ப்பால் தராமலேயே ஒரு குழந்தையை ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க முடியுமென்ற கருத்து பரப்பப்பட்டது. தாய்ப்பால் ஊட்டாமலிருந்தால், அந்த பெண்ணின் அழகு குலையாது என்ற எண்ணமும் விதைக்கப்பட்டது. அது தாயையும் குழந்தையையும் ஒருசேர உடல் பருமன், சர்க்கரை உட்படப் பல குறைபாடுகளுக்கு ஆளாக்கியது. ஒப்பனையில்லாமலேயே ஒரு பெண்ணுக்கு அழகூட்டக்கூடியது தாய்மை எனும் உண்மையைக் குழி தோண்டிப் புதைத்தது.

இன்று, மீண்டும் அதே ‘டின்’ உணவுகள் தாய்ப்பாலை விட ஊட்டச்சத்து மிகுந்தது எதுவுமில்லை எனும் வரிகளைத் தாங்கிக்கொண்டு சந்தையில் ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட சேதாரமே, தாய்ப்பால் தவிர்க்கப்பட முடியாதது என்பதை இவ்வுலகுக்கு உணர்த்தியது.

மது, புகைப்பழக்கம், பணியிடங்களில் நிலவும் சுகாதாரச் சீர்கேடுகள், மாசு நிறைந்த வாழ்விடச் சூழல், வேலைப்பளு, மன அழுத்தம், வசதியின்மை போன்ற பல காரணங்கள் ஒன்றிணைந்து தாய்ப்பால் சுரப்பதைக் குறைக்கின்றன. பெண்கள் இறுக்கமான உடைகள் அணிவது போன்ற பழக்கவழக்கங்களும் அதற்குத் தடையாக இருக்கின்றன. இது போன்று தினசரி வாழ்வில் நாம் கண்ட பல மாற்றங்களால் பாலூட்டும் செயல்பாடு பாதிப்ப்புக்குள்ளாகிறது. அவற்றில் முக்கியமானது, பணியிடங்களில் தாய்மார்களுக்கான வசதிகள் இல்லாமலிருப்பது.

இன்று, பெரும்பாலான பெண்கள் பணிக்குச் செல்கின்றனர். அதனால், மூன்று மாதங்களில் மகப்பேறு ஓய்வுக்கு விடை கொடுத்துவிடும் சூழலை எதிர்கொள்கின்றனர். இப்படிப்பட்ட பெண்கள் இரவு முதல் காலை வரை குழந்தைக்குப் பாலூட்டுவார்கள். அதன்பிறகு, சுமார் பத்து மணி நேரம் அந்தச் செயல்முறையில் இருந்து விலகி நிற்க வேண்டியிருக்கும். நிச்சயமாக, இது பாலூட்டும் சுழற்சியைப் பாதிக்கும். தாய்ப்பாலை தனியாகப் பீய்ச்சியெடுத்து அறை வெப்பநிலையில் பாதுகாப்பாக வைத்திருந்து குழந்தைக்குக் கொடுக்க முடியும் என்றபோதும், அந்த தாயின் உடல்நலப் பாதிப்பை எப்படிச் சரிப்படுத்த முடியும்? அது மட்டுமல்லாமல், ‘பால் கட்டுதல்’ போன்ற பிரச்சனைகள் தொடர்கதையாகும்போது தாய்ப்பால் சுரப்பு நின்றுபோகும் அபாயமும் உண்டு.

வெறுமனே தாய்ப்பால் ஊட்டும் செயல்பாட்டில் ஏற்பட்ட பிரச்சனையாக நோக்காமல், இதனை குழந்தை மற்றும் தாயின் ஆரோக்கிய வாழ்வுக்கான தடைகளாகவே பார்க்க வேண்டும். ஏனென்றால், சரியான தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் எதிர்காலத்தில் ஒவ்வாமை உட்படப் பல உடல்நலக் கோளாறுகளுக்கு எளிதில் ஆட்படும் அபாயம் உள்ளது. இதயநோய்கள், கருப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய் தாக்கும் ஆபத்தைப் பெண்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மிக முக்கியமாக, தாய்ப்பால் ஊட்டுவதன் காரணமாக அடுத்து கர்ப்பம் தரிப்பது தவிர்க்கப்படும். அது மாற்றத்திற்குள்ளாகும்போது, அடுத்த குழந்தையை ஆரோக்கியமற்ற சூழலில் பெற்றெடுக்கும் இக்கட்டான நிலைமையை அப்பெண் எதிர்கொள்ள நேரிடும்.

தனியறை வேண்டும்!

குழந்தையின் அழுகையை நிறுத்தச் சுற்றியிருக்கும் மக்கள் கூட்டத்தைப் பொருட்படுத்தாமல் பயணத்தின்போது பாலூட்டுகிற பெண்கள் இன்றும் உண்டு. ஆனால், நாகரிக மாற்றத்தால் அதனைத் தவிர்ப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். அவர்களுக்காகவே, பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டத் தனியறை எனும் திட்டம் இன்றளவும் நன்மையளித்து வருகிறது. வெளியூர் சென்று வீடுகளுக்குத் திரும்பும் பெண்களுக்கு இதுவே போதுமானது. இதே போல, வேலைக்குச் செல்லும் ஒரு பெண்ணால் பணியிடத்தில் தனது குழந்தைக்குப் பாலூட்ட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? பல நாடுகளில் அதற்கேற்ற வசதி வாய்ப்புகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தாய்மார்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பணியிடச் சூழலில் குழந்தைகளுக்கென்று ஒரு இடம் ஒதுக்கப்படுவதே இதற்கான தீர்வாக அமையும். அதனைச் செய்யும்போது, குழந்தையைப் பிரிந்த ஏக்கமும் பயமும் அப்பெண்ணுக்கு இராது. தேவைப்படும் நேரத்தில் பாலூட்டுவதால், பாலூட்டும் சுழற்சி பாதிக்கப்படாது. பாலூட்டுவதைத் தவிர்ப்பதால் ஏற்படும் உடல் நலக்குறைவுகளும் விலகி ஓடிவிடும். மிக முக்கியமாக, பாலூட்டாமல் இருப்பதால் ஏற்படும் மன அழுத்தம் நீங்கும்; பணியில் சரியான கவனத்தைச் செலுத்த முடியும்.

நடை பழகும் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில், அவை விளையாட பொம்மைகளையும் சில சாதனங்களையும் விளையாடும் வாய்ப்புகளையும் கூட அந்த அறையில் உருவாக்கித் தரலாம். பணியிடமே ‘ஒரு பொழுதுபோக்கு பூங்கா’தான் எனும் தாரக மந்திரத்தோடு இயங்கும் நிறுவனங்களில், இந்த வசதிகள் செயல்படுத்தப்படுகின்றன. அவை சொற்பம் என்பதாலேயே, இதனைக் கட்டாயம் அனைத்து பணியிடங்களிலும் அமல்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. உண்மையைச் சொன்னால், ‘மழைநீர் சேகரிப்பு’ கட்டாயப்படுத்தப்பட்டது போன்று ஒவ்வொரு அலுவலகத்திலும் தாய்மார்களுக்கென்று தனியறைகள் ஏற்படுத்துவதையும் தீவிரப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அது மட்டுமல்லாமல், ஒரு பெண் பிரசவம் முடிந்து பணிக்குத் திரும்பும் கால இடைவெளியை அதிகப்படுத்தலாம். மீண்டும் அலுவலகம் திரும்பியபிறகு, சில காலத்திற்கு சராசரி வேலைப்பளுவை விடக் குறைவான அளவில் பணிகளைத் தரலாம். இவையெல்லாமல், நிர்வாகமும் சக பணியாளர்களும் ‘தாய்ப்பாலூட்டுவதற்கு’ தனியாக முக்கியத்துவம் தந்தால் மட்டுமே சாத்தியப்படும்.

இன்றைய சூழலில் இவையெல்லாம் கனவுகளாக இருக்கின்றன என்பதே உண்மை. அவற்றை நனவாக்கினால் மட்டுமே, நம்மைச் சுற்றியிருக்கும் பெண்களின், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும்.

பாலூட்டுதல் என்பது ஒரு தலைமுறையை அடுத்த தலைமுறையுடன் பிணைக்கும். பரிணாம வளர்ச்சிகள் பல கண்டபிறகும், தாய்மை எனும் அந்த உணர்வுச் சங்கிலி தான் மனிதம் இப்பூமியில் நீடிக்க வகை செய்கிறது. ஆரோக்கியமான மனிதர்கள் இவ்வுலகில் வாழ அடிப்படையாக விளங்குகிறது. அப்படிப்பட்ட பாலூட்டும் செயல்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில், உலகச் சுகாதார நிறுவனத்துடன் இணைந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதி வரை ‘உலக தாய்ப்பால் வாரம்’ கொண்டாட்டங்களை நடத்தி வருகிறது யுனிசெஃப். வாருங்கள், தாய்மையைப் போற்றுவோம்! தாய்ப்பால் ஊட்டும் செயல்பாட்டைத் தடையின்றி மேற்கொள்வதற்கான சூழல்களை வார்த்தெடுப்போம்!

– பா.உதய்

You might also like