நிலச்சரிவு: கலங்க வைக்கும் கடவுளின் தேசம்!

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து இரு நாட்களாக பெய்து கொண்டிருக்கிறது.

இந்த கனமழையின் தொடர்ச்சியாக இன்று அதிகாலை 2 மணிக்கு மேல் கேரளாவின் வயநாடு அருகில் உள்ள முண்டக்கை, மெப்பாடி, சூரல்மலா ஆகிய 3 மலைப்பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை அடுத்தடுத்து கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன.

பல வீடுகளும் ஓய்வு விடுதிகளும் வாகனங்களும் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்ட ஒரு நிலை உருவாகி இருக்கிறது.

பாலம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் மீட்பு நடவடிக்கைக்காக சென்றிருக்கிற குழுவினர் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரடியாகச் செல்ல முடியாத நிலை உருவாகி இருக்கிறது.

இதனால் ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரண உதவிகளும் மீட்புப் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இந்தச் செய்தியை வெளியிடும் வரை நிலச்சரிவினால் 90 உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. ஏறத்தாழ 60-க்கும் மேற்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்னும் எவ்வளவு பேர் பலியாகி இருப்பார்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியாத நிலைதான் தற்போது வரை நீடித்துக் கொண்டிருக்கிறது.

கேரள முதல்வரான பினராயி விஜயனிடம் தொடர்பு கொண்டு பேரிடர் குறித்து பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. கேரளாவில் நடந்திருக்கிற இந்த இயற்கைப் பேரிடருக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார் பிரதமர். தமிழ்நாடு அரசும் இதே வாக்குறுதியைக் கொடுத்துள்ளது.

முதற்கட்டமாக உயிரிழந்தோர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது. காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்திலிருந்தும் அருகிலுள்ள பிற மாநிலங்களிலிருந்தும் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் கேரளாவை நோக்கி விரைந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்னும் கனமழை தொடர்ந்து கேரளாவில் நீடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாகவே கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து பெய்யும் மழை அளவு அதிகரித்திருக்கிறது.

தற்போது பாதிக்கப்பட்டிருக்கின்ற வயநாடு பகுதியில் ஒரே நாளில் 20 மில்லி மீட்டரிலிருந்து 30 மில்லி மீட்டர் அளவுக்கு அதி கனமழை பெய்திருக்கிறது.

இந்த அளவுக்கு மழை பெய்திருப்பதன் விளைவாகவே தொடர்ந்து அடுத்தடுத்த சரிவுகள் உருவாகி கடும் சேதங்களையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திருக்கின்றன.

இது தொடர்பாக பணிகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து முன்னெடுத்திருப்பது நல்ல விஷயம் தான்.

அதே சமயத்தில் 2018-ம் ஆண்டிலிருந்தே கேரளாவில் அதி கனமழை பெய்யும்போது இத்தகைய நிலச்சரிவுகள் தொடர்ந்து ஏற்பட்டிருக்கின்றன. அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. வீடுகளும் பாதிக்கப்பட்டு சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

இதனிடையே கேரளாவைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் மண்ணில் புதைத்திருக்கின்றன. இதனால் கர்நாடகா – தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஆக, இது தற்போது மட்டும் நடந்திருக்கும் இயற்கைப் பேரிடரல்ல. இது தொடர்ந்து நடந்துவரும் ஒரு இயற்கைப் பேரிடரின் ஒரு தொடர்ச்சியான துயர நிகழ்வு என்றே சொல்ல வேண்டும்.

இந்தப் பேரிடர் குறித்து சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்தியாவின் மிக முக்கியமான இயற்கை பொக்கிஷங்களில் ஒன்று மேற்குத் தொடர்ச்சி மலை.

இதில், கேரளாவைப் பொறுத்தவரை இந்த விதமான வனவளத்தைப் பாதுகாப்பதில் அவர்கள் ஓரளவு அக்கறை காட்டுகிறார்கள் என்றாலும்கூட, மலைப்பகுதிகளில் ஆங்காங்கே கடந்த பத்தாண்டுகளில் சொகுசு விடுதிகள் உருவாவதும், புதுப்புது கட்டுமானப் பணிகள் நடப்பதும், பாலங்களைக் கட்டுவதும் அதிகரித்து இருக்கின்றது.

ஆக, மலைத்தொடரின் இடையே ஆங்காங்கே ஒரு இடைவெளியை உருவாக்கி, அந்த இடைவெளியில் கட்டுமானப் பணியை மேற்கொண்டு மேற்கொண்டிருப்பதுதான் பல இயற்கைச் சீற்றங்கள் உருவாகி இருப்பதற்கான முதன்மையான காரணம்.

அதி கனமழை பெய்யும்போது அடித்து வரப்படும் மழைநீர், குறுக்கே கட்டப்பட்டிருக்கின்ற கட்டுமானங்களை அடித்துச் சென்று விடுகிறது அல்லது கடந்து சென்று விடுகிறது.

இதனால் பெருமளவில் உயிர்ச் சேதம் ஏற்படுகிறது என்பதுதான் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் உணர்த்தும் உண்மையாக இருக்கிறது.

தற்போது கேரளாவை அடுத்து இருக்கிற வால்பாறை பகுதியிலும், நீலகிரி மலைப் பகுதிகளிலும் கேரளாவில் பெய்திருக்கிற அதே அளவிற்கு 30 மில்லி மீட்டர் அளவுக்கான மழை பெய்திருக்கிறது.

இந்த நிலையில் கேரளா செய்யத் தவறிய முன்னேற்பாடான எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு இந்த சமயத்தில் எடுத்தாக வேண்டிய அவசியம் இருக்கிறது.

இத்தகைய மலைப்பகுதிகளில் இயற்கையைக் குலைத்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டாலோ அல்லது சுற்றுலா என்கின்ற பண வருமான நோக்கத்தில் இயற்கையை சீரழித்தாலோ தொடர்ந்து இது மாதிரியான நிலச்சரிவுகளும் இத்தகைய உயிரிழப்புகளும் நடப்பதை தடுக்க முடியாது.

ஆக, தற்போதைய நிகழ்வை மட்டும் வைத்து நாம் எந்த முடிவும் எடுத்து விட முடியாது. கேரளாவில் நடந்திருக்கிற இந்தத் துயரமான நிகழ்வு அருகில் இருக்கிற பல மாநிலங்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் எப்படி இயற்கையோடு நாம் இயைந்த வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்று கற்றுத் தருகிற ஒரு பாடமாகவும் அமைந்திருக்கிறது.

இப்படிப்பட்ட துயரமான நிகழ்வுகள் நடக்கும்போது மட்டும் மத்திய, மாநில அரசுகள் காட்டும் கவனத்தை முன்னெச்சரிக்கையாக முன்கூட்டியே செய்ய வேண்டும்.

இயற்கை கற்றுத் தருகிற இத்தகையப் பாடங்களை இயல்பாக எந்தவிதமான ஆதாய நோக்கமும் இல்லாமல் ஏற்றுக் கொள்வது ஒன்றுதான் நமக்கான தீர்வாக இருக்கும்.

You might also like