‘மஞ்ஞும்மள் பாய்ஸ்’ வந்தபிறகு ‘குணா’ படத்தைத் தேடிப் பிடித்து ரசித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும். குறிப்பாக, ‘மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல’ என்று உள்ளத்தைத் தடதடக்கச் செய்யும் கமலின் குரலைக் கேட்பதற்காகவே, அப்படம் வெளிவந்த காலககட்டத்தில் அதனைப் பார்த்தவர்கள் பலர்.
அந்த தீவிர ‘குணா’ ரசிகர்களுக்கு ‘அபிராமி.. அபிராமி.. அபிராமி..’ என்று நடிகை ரோஷிணியைப் பார்த்து கமல் உருகும் காட்சி நெஞ்சில் பதிந்துபோன ஒன்று. அவர்களில் ஒருவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர் நடிகை அபிராமி.
திவ்யா என்றிருந்த தனது பெயரைத் திரையுலகில் நுழையும்போது ‘அபிராமி’ என்று மாற்றிக்கொள்ளும் அளவுக்கு, அவருக்கு ‘குணா’ படம் பிடிக்கும்.
பதிமூன்று வயதில் அறிமுகம்!
அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘கதாபுருஷன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அபிராமி. அப்போது, அவரது வயது பதிமூன்று. ஆனால், அதன்பிறகு அவர் வேறு படங்களில் நடிக்கவில்லை.
தொடர்ந்து பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்திய அபிராமி, பதின்ம வயதின் இறுதியில் ஏஷியாநெட் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றத் தொடங்கினார்.
அதன் வழியே சீரியல் வாய்ப்பும் அவரைத் தேடி வந்தது. அவற்றுக்குக் கிடைத்த வரவேற்பு, மீண்டும் சினிமாவில் இடம்பெற வைத்தது.
ஜோஷி இயக்கிய ‘பத்ரம்’ படத்தில் பிஜு மேனன் ஜோடியாக இரண்டொரு காட்சிகளில் தலைகாட்டினார் அபிராமி.
பிறகு ‘ஞாங்கள் சந்துஷ்டரானு’ படத்தில் ஜெயராம் ஜோடியாகத் தோன்றினார். தொடர்ந்து ஸ்ரத்தா, மில்லினியம் ஸ்டார், மேகசந்தேஷம் என்று மலையாளப் படங்களில் நடித்தார்.
2001இல் மனோஜ்குமார் இயக்கத்தில் வெளியான ‘வானவில்’ படத்தில் அர்ஜுன், பிரகாஷ் ராஜுடன் நடித்தார் அபிராமி.
ஹீரோ, வில்லன் மோதலுக்கு நடுவே மாட்டிக்கொள்ளும் ஹீரோயினாக அதில் இடம்பிடித்தார்.
அந்தப் படத்தின் வெற்றி அபிராமியைத் தமிழில் பல படங்களில் இடம்பெற வைத்தது.
அந்த காலகட்டத்தில் ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘சார்லி சாப்ளின்’ படங்களில் பிரபு, ‘தோஸ்த்’, ‘சமுத்திரம்’ படங்களில் சரத்குமார் உடன் ஜோடியாக நடித்தார்.
கார்மேகம், சமஸ்தானம் படங்களில் மம்முட்டி, சுரேஷ்கோபியுடன் தமிழில் நடித்தவர், ‘விருமாண்டி’யில் தனது கனவு நாயகனான கமல்ஹாசன் உடன் நடித்தார்.
அதில் வரும் ‘உன்னை விட’ பாடல் இன்றும் பலருக்கு ‘மனதுக்கு நெருக்கமான பாடல்’ ஆக இருந்து வருகிறது.
ஒரு இடைவெளி!
2004ஆம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் பத்தாண்டு காலம் எந்தப் படத்திலும் அபிராமி இடம்பெறவில்லை. அமெரிக்காவின் ஒஹியோவுக்குப் பெற்றோருடன் சென்றவர், அங்கு பட்டப்படிப்பை முடித்து ஒரு கார்பரேட் நிறுவனத்திலும் வேலையில் சேர்ந்தார். பின்னர் ராகுல் பாவணனைக் கைபிடித்தார்.
வேலை, குடும்ப வாழ்க்கை என்றிருந்தவர், 2014வாக்கில் மீண்டும் திரையுலகில் கால் வைத்தார்.
‘அபோதெகரி’யில் நடித்த அபிராமி, பின்னர் ’36 வயதினிலே’, ‘ஒரே முகம்’, ‘தசரதன்’ என்று தமிழ், மலையாளம், கன்னடப் படங்களில் தோன்றினார்.
மாதவனுடன் அவர் நடித்த ‘மாறா’ நல்லதொரு திருப்புமுனையாக அமைந்தது. தற்போது பல்வேறு மொழிப் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார் அபிராமி.
மலையாளப் படமான ‘கருடன்’, தமிழில் ‘மகாராஜா’, ‘தக் லைஃப்’ என்று தொடர்கிறது அவரது பயணம்.
இரண்டாவது இன்னிங்ஸில் தேர்ந்தெடுத்து மிகச்சில படங்களில் மட்டுமே நடிக்கிறார் அபிராமி. அது, அவர் ஹீரோயினாக நடித்தபோது பின்பற்றிய தேர்வுமுறையையே இப்போதும் தொடர்வதைக் காட்டுகிறது.
‘வானவில்’ பாட்டு!
சில பாடல்கள் நம் மனதோடு ஒட்டிக்கொள்வதற்கு, அவற்றில் நிறைந்துள்ள இனிமையும் எளிமையுமே முக்கியக் காரணம். அப்படி என் மனதுக்கு நெருக்கமானதொரு பாடல், ‘வானவில்’ படத்தில் வரும் ‘வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே’.
குறைந்தபட்சம் தினமும் ஒரு தடவையாவது கேட்டுவிட வேண்டுமென்று எண்ணும் அளவுக்குத் துடிப்பினை அது தரும்.
அந்தப் பாடலின் சிறப்பம்சம், ராஜு சுந்தரத்தின் கொரியோகிராஃபி. பாடல் வரிகளுக்கேற்ப சுவிட்சர்லாந்திலோ, நியூசிலாந்திலோ படம்பிடிப்பதற்குப் பதிலாகச் சென்னை இருங்காட்டுக் கோட்டையிலுள்ள கார் பந்தய வளாகத்தைச் சுற்றி வந்திருப்பார்.
நடனக் கலைஞர்களைப் பல்வேறு அடுக்குகளில் ஆட வைத்து, கார்த்திக் ராஜாவின் கண்ணுக்கு இனிமையான ஒளிப்பதிவைக் கொண்டு, தேவா தந்த பாடலுக்கு உயிர் தந்திருப்பார்.
அந்தப் பாடலில் அர்ஜுன் நடந்து வருவதையும், துள்ளிக் குதித்து ஆடுவதையும் தான், இன்று வரை பல மிமிக்ரி கலைஞர்கள் மேடைகளில் பிரதியெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதில், அபிராமி நடந்து வரும் ஷாட் ஒன்று வரும். அதனைப் பார்க்கும்போதெல்லாம் ‘அபிராமி.. அபிராமி..’ என்று உருகத் தோன்றும்.
உயரமான, கொஞ்சம் ஆண்மை கலந்த, மேட்டிமைத்தனமான, நவநாகரீக நகரத்துப் பெண் என்பது போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், கிராமத்துப் பெண்ணாகவும் உருவகிக்கும் வகையில் இருப்பார் அபிராமி. அவர் நடித்த படங்களும் கூட அதை உண்மை என்று நிரூபித்தன.
ஆனால், ‘வெளிநாட்டு காற்று’ பாடலைப் பார்க்கையில் அது எதுவுமே நினைவுக்கு வராது.
அந்தப் படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கூட, அந்தப் பாடலை இப்படி ரசித்திருப்பார்களா என்று தெரியாது. ஆனால், ஒரு படைப்பு செய்யும் மாயம் அதுவே. அதற்கு அபிராமியும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல..!
எப்படி ‘குணா’வைப் பார்த்து அபிராமி பாத்திரம் மீது அவர் காதல் கொண்டாரோ, அப்படியொரு ஈர்ப்பை நம்மிடத்தில் உருவாக்கத்தக்கது அந்த ‘வானவில்’ படப் பாடல்.
‘அப்படியா’ என்பவர்கள் இன்றே அதனைக் கேட்டு, பார்த்து ரசிக்கலாம். உங்களது அபிப்ராயத்தை அசை போடலாம்.
அவரவர் விருப்பத்தைப் பொறுத்து, அபிராமி நடித்த படங்கள், பாடல்களையும் ரசித்து மகிழலாம். அப்படியே அவருக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவிக்கலாம். ஆம், ஜூலை-26 அபிராமிக்குப் பிறந்தநாள்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்