திரைத் தெறிப்புகள்-11:
1952-ம் ஆண்டில் தமிழ்த் திரையுலகில் முளைத்தது ஒரு புதிய கூட்டணி. கலைஞரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் கைக்கோர்த்து வெற்றி கண்ட படம் ‘பராசக்தி’.
கருப்பு வெள்ளை படக் காலத்திலேயே புரட்சிகரமான வசனங்களையும் எழுச்சியான பல பாடல்களையும் ஒருங்கே கொண்டிருந்த ‘பராசக்தி’ திரைப்படம் அக்காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, இக்கால மொழியின்படி ‘சூப்பர் ஹிட்’ படமானது.
அதில் துணிச்சலாகச் சில சமூகக் கருத்துகளைத் தன்னுடைய பாடல் வழியே முன்வைத்திருப்பார் உடுமலை நாராயண கவி.
“தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி – குதம்பாய்
காசு முன் செல்லாதடி”.
என்று துவங்கும் அருமையான பாடலைத் தனது வளமான குரலில் அமர்க்களமாகப் பாடியிருப்பவர் சிதம்பரம் ஜெயராமன்.
அந்தப் பாடலில் தான்,
“நல்லவரானாலும் இல்லாதவரை
நாடு மதிக்காது – குதம்பாய்
கல்வி இல்லாத மூடரைக் கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே – குதம்பாய்”.
என்று தொடர்கிற பாடலில் வெளிபடும் ‘எள்ளல்’ நகைச்சுவை கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கும்.
“ஆரியக் கூத்தாடினாலும்
தாண்டவக்கோனே – காசு
காரியத்தில் கண் வையடா
தாண்டவக்கோனே”.
என்று தொடரும் ‘எள்ளல்’
“கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே – பிணத்தைக்
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே..”
என்று நகரும் பாடலில் சமூக அவலத்திற்கு எதிரான எதிர்ப்புக் குரல் இங்கிதமாகவும், சாமர்த்தியமாகவும் வெளிப்பட்டிருக்கும்.
இப்பொழுதும் பராசக்தி – படத்தைப் பார்க்க நேர்ந்தால் இந்தப் பாடலைக் கவனித்துப் பாருங்கள். பாடகர் சிதம்பர ஜெயராமனின் அசாத்தியமான குரலும், நடிகர் திலகத்தின் அட்டகாசமான உடல் மொழியும் ஒருங்கே பின்னிப் பிணைந்து இருப்பதைப் பார்க்க முடியும்.
#நடிகர்_திலகம்_சிவாஜி_கணேசன் #Nadigar_Thilagam_Thilagam_Sivaji_Ganesan #பராசக்தி #Parasakthi #கவிஞர்_உடுமலை_நாராயணகவி #Kavignar_Udumalai_Narayanakavi #பாடகர்_சிதம்பரம்_ஜெயராமன் #Singer_Chidambaram_Jayaraman #நல்லவரானாலும்_இல்லாதவரை_நாடு_மதிக்காது #Nallavaranalum_Illathavarai_Nadu_Mathikathu