மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னட சினிமா பிரபலங்கள் தமிழ் திரைப்படங்களில் பங்கேற்பது மிக அரிதாக நிகழும். அது பத்திரிகைகளில், ஊடகங்களில் பெரிதாக விளம்பரப்படுத்தப்படும். அதன் வழியே மக்களின் கவனத்தையும் சம்பந்தப்பட்ட படம் பெறும்.
சமீபத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டதும், வில்லனாக வந்த விநாயகனின் நடிப்பு சிலாகிக்கப்பட்டதும் நாம் அறிந்ததே.
அந்த வகையில், எண்பதுகளில் பல்வேறு பிரபலங்கள் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் ஒருவர், மலையாள திரைப்பட இயக்குனர் டி.ஹரிஹரன். அவரது இயக்கத்தில் உருவான ‘மங்கை ஒரு கங்கை’ திரைப்படம் 1987-ம் ஆண்டு ஜூலை 24 அன்று வெளியானது.
வேறுபட்ட திரைப்பார்வை!
மலையாளத் திரைப்படமான ‘லேடீஸ் ஹாஸ்டல்’ மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹரிஹரன். அந்தப் படம் 1973-ல் வெளியானது.
அப்போது மலையாள சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாகத் திகழ்ந்த பிரேம் நசீரின் படங்களை அடுத்தடுத்து இவர் இயக்கினார். ’பாபுமோன்’ அவற்றில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
மலையாளத் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் ஆக போற்றப்படுகிற ஜெயனுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்த ‘சர்பாஞ்சரம்’ படத்தை இயக்கியவர் இவரே.
தமிழில் தயாரான ‘பூக்கள் விடும் தூது’வின் மூலமான ‘நகசதங்கள்’ படத்தை இயக்கியவரும் இவரே. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற ‘ஒரு வடக்கன் வீரகதா’வும் ஹரிஹரன் இயக்கியதே.
மம்முட்டி, மோனிஷா உன்னி, ஜோமோள் போன்ற மலையாள சினிமா நட்சத்திரங்கள் தங்கள் நடிப்புக்காக தேசிய விருதைப் பெற்றது, ஹரிஹரன் இயக்கத்தில் வெளியான படங்களுக்காகத்தான்.
அப்படிப்பட்ட ஹரிஹரனைத் தயாரிப்பாளர் கோவைத் தம்பி தமிழுக்கு அழைத்து வந்து, ‘மங்கை ஒரு கங்கை’ படத்தை இயக்கச் செய்தார். இதில் சரிதா, சுரேஷ், நதியா, சரண்ராஜ், சிவச்சந்திரன், பூர்ணம் விஸ்வநாதன் உட்படப் பலர் நடித்தனர்.
நேர்மையாகத் திகழும் ஒரு பெண் வழக்கறிஞர் ஒரு குற்றவாளியைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தருகிறார். சிறைத் தண்டனையை அனுபவித்த அந்த நபர், அந்த வழக்கறிஞரின் தங்கை கணவரைத் திருமணத்தன்றே கொலை செய்கிறார். மிரட்டுதல்களின் மூலமாகச் சாட்சிகளைப் பயமுறுத்துகிறார். நீதிமன்றத்தின் பிடியில் இருந்து தப்புகிறார்.
அந்த குற்றவாளி திடீரென்று ஒருநாள் கொலை செய்யப்படுகிறார். அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரை விடுவிக்க வேண்டுமென்று அதே பெண் வழக்கறிஞரை நாடுகிறார் சமூகத்தில் செல்வாக்குமிக்க ஒரு நபர். அதுநாள்வரை அந்த நபருக்கு எதிராக வாதாடி அந்தப் பெண், அந்த வழக்கில் அவருக்கு ஆதரவாக ஆஜராகிறார்.
அந்த வழக்கில் எதிர்தரப்பில் ஆஜாராகிறார் ஒரு பெண். அவருக்கும் அந்த வழக்கறிஞருக்குத் தெரிந்தவர் தான்.
இறுதியில், அந்த வழக்கில் வெற்றி பெற்றது யார்? முடிவு என்னவாக இருந்தது என்பதே ‘மங்கை ஒரு கங்கை’ படத்தின் சிறப்பு.
இந்தக் கதையில் சரிதா பிரதானமாக இருந்தாலும், அதற்கிணையாக சுரேஷ் – நதியா சம்பந்தப்பட்ட காட்சிகளும் இடம்பெற்றிருக்கும். இரண்டில் எதற்கு முன்னுரிமை தருவது என்ற குழப்பம் திரைக்கதையில் தென்படும்.
அதையும் மீறி, இந்தப் படத்தின் காட்சிகளும் திரைக்கதை நகர்வும் அப்போதைய தமிழ் படங்களில் இருந்து ரொம்பவே வேறுபட்டிருந்தன. குறிப்பாக, இப்படத்தின் கிளைமேக்ஸ் ரொம்பவே வித்தியாசமானதாக இருக்கும். அவற்றின் பின்னே ஹரிஹரனின் வேறுபட்ட திரைப்பார்வை இருந்தது.
இப்படத்தின் காட்சியாக்கத்தில் மலையாள சினிமாவின் தாக்கம் இல்லாதபோதும், பாத்திர வார்ப்புகளும் அவை ஒவ்வொன்றுக்குமான முக்கியத்துவமும் தமிழ் சினிமா வழக்கங்களில் இருந்து வேறுபட்டிருந்தன.
வடக்கின் வாசம்!
‘அன்னக்கிளி’ படத்திற்குப் பிறகு இந்தி சினிமா பாடல்களைக் கேட்கும் வழக்கம் தமிழ்நாட்டில் குறைந்துபோனது.
இப்படிச் சொல்லும்போதே, எழுபதுகளில் இந்திப் பட பாடல்கள் இங்கு புகழ் பெற்றிருந்தன என்பதை நாம் அறியலாம். ‘ஆராதனா’, ‘யாதோன் கி பாரத்’ என்று பல படங்களை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
எண்பதுகளில் இளையராஜாவுக்குப் போட்டியாக எவரும் இல்லை என்ற நிலையே இருந்தது. டி.ராஜேந்தர் இசையமைத்த படங்களுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தாலும், அவர் இசையமைப்பில் அதிக படங்கள் வெளியாகவில்லை. எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் போன்றவர்களின் உழைப்பும் அரிதாகவே பயன்படுத்தப்பட்டன.
அதனால் சக்கரவர்த்தி, ஷ்யாம், ரவீந்திரன், ஹம்சலேகா, பப்பி லஹரி என்று வேறு மொழிப்படங்களில் புகழ் பெற்றிருந்த இசையமைப்பாளர்கள் தமிழில் சில படங்களுக்கு இசையமைத்தனர்.
அப்படங்களின் பாடல்கள் வரவேற்பைப் பெற்றாலும், அவர்களால் தமிழில் தொடர்ச்சியாகப் பணியாற்ற முடியாமல் போனது.
அவ்வாறு லட்சுமிகாந்த் – பியாரிலால் இசையைக் கேட்கச் செய்தது இப்படம். இதற்கு முன்னரே ‘உயிரே உனக்காக’ படத்தில் அவர்களைப் பணியாற்றச் செய்திருந்தார் கோவைத்தம்பி. அப்படத்தின் பாடல்களைப் போலவே ‘மங்கை ஒரு கங்கை’யும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
‘நீராடி வா தென்றலே’, ‘அழகிய நிலவிது’ பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. ‘காதல் பண்ண கத்துக் கொடுப்பேன்’, ’ஓடம் இது ஓடட்டுமே’ பாடல்களும் தியேட்டரில் ரசிகர்களைத் திருப்திப்படுத்தின.
அந்தப் பாடல்களில் ‘வடக்கின் வாசம்’ அப்பட்டமாகத் தெரிந்தாலும், அவற்றின் இனிமை ரசிகர்களை ஈர்த்தது என்றே சொல்ல வேண்டும்.
இந்தப் படத்திற்குப் பின்னர், சரத்குமார் தயாரித்த ‘ரகசிய போலீஸ்’ படத்திற்கு லட்சுமிகாந்த் பியாரிலால் இணை இசையமைத்தது. அதில் இடம்பெற்ற ‘மயில் தோகை அழைத்தால் மழை மேகம் நெருங்கும்’ பாடல் இனிக்கும் இசையைத் தரும்.
குறிப்பிடத்தக்க முயற்சி!
‘பழிக்குப் பழி’ வகையறா படங்கள் எண்பதுகளில் அதிகம் வெளியானாலும், அவற்றில் இருந்து ரொம்பவே வேறுபட்டிருந்தது ‘மங்கை ஒரு கங்கை’. இதில் நாயகன் சுரேஷை விட நதியாவுக்கும் சரிதாவுக்கும் முக்கியத்துவம் அதிகம்.
கிளைமேக்ஸ் திருப்பமும் கூட, அப்போது வெளியான தமிழ் படங்களில் இருந்து ரொம்பவே வேறுபட்டிருந்தது.
ஆனாலும், இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. காரணம், படத்தில் இடம்பெற்ற சில பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் வரும் வகையிலான காட்சிகள் பின்பாதியிலும் இடம்பெற்றது தான். மலையாளத்தில் வெளியான கமர்ஷியல் படங்களில் பயன்படுத்தப்பட்ட அந்தப் பாணி தமிழில் பெரிதாக எடுபடவில்லை.
அதைத் தவிர்த்துப் பார்த்தால், ‘மங்கை ஒரு கங்கை’ ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி என்றே சொல்ல வேண்டும்.
அந்த காலகட்டத்தில் இதர படங்களில் இடம்பெற்ற நீதிமன்றக் காட்சிகளை ஒப்பிடுகையில், இப்படம் நல்லதொரு காட்சியனுபவத்தைத் தருவதாக இருந்தது.
இதன் பின்னர் மலையாளத்தில் தொடர்ந்து பல படங்களை இயக்கிய இயக்குனர் ஹரிஹரன், 2009-ல் ‘கேரளவர்மா பழசிராஜா’வைத் தந்தார். ‘என்னு ஸ்வந்தம் ஜானகிகுட்டி’, ‘சர்கம்’ போன்ற படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.
- மாபா