வெளிச்சம் என்பது திறக்கப்படாத இருள்!

படித்ததில் ரசித்தது:

இருள் என்பது மூடி வைக்கப்பட்ட வெளிச்சம். வெளிச்சம் என்பது திறக்கப்படாத இருள்.

உண்மை என்னவெனில், இப்பிரபஞ்சத்தில் எதுவுமே முழுமையாக மூடப்படவும் இல்லை; முழுமையாகத் திறக்கப்படவும் இல்லை.

கையிலிருக்கும் விளக்கை, எந்நேரமும் இருள் பின்தொடர்கிறது என்பதை நாம் கவனிக்கத் தவறுகிறோம்.

தேடிச் செல்லும் வெளிச்சம் கூட, நம் இருளுக்குப் பின்னால் தான் ஒளிந்திருக்கிறது.

இருளும் வெளிச்சமும் ஒரே நேர்கோட்டில் தான் பயணிக்கின்றன. நாம் தான் வளைந்து வளைந்து செல்கின்றோம்.

தாகமாக இருக்கிறதென வெளிச்சத்தை அள்ளிக் குடிக்கிறோம். நம் தாகமென்பது வேறொன்றும் இல்லை; இருள் தான்.

நம் நிர்வாணத்தை இருளைக் கொண்டு போர்த்துகிறோம். நிர்வாணம் என்பது வேறொன்றும் இல்லை; வெளிச்சம் தான்.

வெளிச்சத்தை இருளால் கழுவிவிட்டு, நம் வெளிச்சம் இருளாகிவிட்டதாகப் புலம்புகிறோம்.

இந்த உலகம், ஒரு கட்டமைக்கப்படாத வீடு. அதன் ஒரு கதவு இருள்; இன்னொரு கதவு வெளிச்சம்.

உள்ளே நுழைந்த ஒரு பூனை, வெளிச்சத்தைக் கண்டு பயந்து கண்ணை மூடியதில் இந்த உலகம் இருண்டு விட்டதாக நம்பத் தொடங்கியது.

இருளைக் கண்டு பயந்து அது கண்ணைத் திறந்ததில், அந்தக் கண்ணின் வெளிச்சம் நம்மைப் பயமுறுத்தியது.

பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அப்போது நாம் சொன்ன வாசகம் தான்: “பூனையே, உன் கண்ணை மூடு…”

– ‘பூனையே, உன் கண்ணை மூடு’ நூலில் ஆசிரியர் மா.காளிதாஸின் எழுதிய வரிகள்.

You might also like