வகுப்பறை அனுபவங்களை இலக்கியம் ஆக்கும் முயற்சி!

நூல் அறிமுகம்:

ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியரும், வகுப்பறைத் தொழிற்சங்கம்,அறிவொளி இயக்கம், மனித உரிமைக் கல்வி என பல தளங்களில் ஈடுபட்டு உழைத்தவருமாகிய திரு.மாடசாமி அவர்கள் எழுதிய புத்தகம் தான் இந்த “எனக்குரிய இடம் எங்கே? (வகுப்பறை உறவுகளும் உரையாடல்களும்)”.

வகுப்பறையில் ஆசிரியர் மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும், இவர்கள் இருவருக்குமான இடம் எங்கே உள்ளது என்பதனை, வகுப்பறை, மாணவர்களிடம் கற்போம், எனக்குரிய இடம் எங்கே? என்ற மூன்று தலைப்புகளில் 128 பக்கங்களைக் கொண்ட வகுப்பறை அனுபவங்களை இலக்கியம் ஆக்கும் முயற்சியாக இந்த புத்தகம் உள்ளது.

கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் அய்யப்பராஜ் என்பவர் தனது வகுப்பறையில் ஆரம்பத்தில் எப்படி பாடம் எடுத்து வந்தார். அப்போது மாணவர்களிடமிருந்த நடவடிக்கை எப்படி இருந்தது? பிற்காலத்தில் அவர் வகுப்பறையில் கொண்டு வந்த ஒரு சில மாற்றங்கள் அதே மாணவர்களிடம் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதனை ஒரு கதை வடிவிலான வகுப்பறை நிகழ்வுகளாக ஆசிரியர் இந்த புத்தகத்தில் பட்டியலிட்டு உள்ளார்.

வகுப்பறை நிகழ்வுகளைக் கதை போன்று புத்தகத்தில் தொடர்ச்சியாக வாசிக்க நேரும்பொழுது நாமும் வகுப்பறையிலேயே அமர்ந்து பாடம் கவனிப்பது போன்ற ஒரு உணர்வு இந்த புத்தகம் முழுமையும் தோன்றியது. ஆசிரியர் அய்யப்பராஜ் புதிய புதிய முயற்சிகளை வகுப்பறையில் மேற்கொண்ட விதம் அருமையாக இருந்தது.

உதாரணமாக

  • வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களைப் பாராட்டும் பொழுது பெயர்களைச் சொல்லி பாராட்டுதல்,
  • கரும்பலகையில் எழுதும் போட்டி, கடிதம் எழுதும் பயிற்சி மூலம் தங்களது வார்த்தைகளை ஆற்றலாக எப்படி வளர்ப்பது,
  • தங்களுடைய பாராட்டுதல்களைப் பிறருக்கு எப்படி தெரியப்படுத்துவது,
  • கவிதை எழுதும் போட்டி நடத்தி, தானும் மாணவர்களோடு இணைந்து கவிதை எழுதி உற்சாகப்படுத்துவது,
  • பாடங்களைப் பகுதி பகுதியாகப் பிரித்து மாணவர்களையே பாடம் நடத்தச் சொல்லுவது,
  • இலக்கண விளையாட்டுகள் மூலம் இலக்கணத்தை எளிதில் புரிய வைப்பது,
  • கதைகளின் வழியே விவாதங்களை மாணவர்களுக்கு இடையே ஏற்படுத்துவது முதலிய முயற்சிகளை ஆசிரியர் எடுக்கும் பொழுது மாணவர்களிடம் ஏற்பட்ட வரவேற்பையும் இதுவரை வெளிவராத மாணவர்களின் திறமைகள் வெளிக்கொணரப் படுவதையும் காண முடிந்தது. மேலும் கதை போன்றே புத்தகம் நகர்ந்தாலும், ஆசிரியர் நம்மிடம் சொல்ல வந்த செய்திகளை ஆங்காங்கே கூறிய விதமும் அருமையாக இருந்தது.

உதாரணமாக,

  •  வகுப்பறையைத் திட்டமிடவோ, ஆசிரியர் பணியில் கருத்து தெரிவிக்கவோ, பரஸ்பரமான ஜனநாயக உரிமைகளை அனுபவிக்கவோ மாணவர்களுக்கு உரிமை இல்லாத பட்சத்தில் அவன் அந்த வகுப்பறையை தன் வகுப்பறையாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அதை விட்டு ஓடவே விரும்புவான்.
  •  மெத்தப் படித்த மேதாவியாக உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு மாணவர்களிடம் ஆசிரியர்கள் உரையாடுவதை விட, அவர்களோடு சகஜமாய் இணைந்து பழகி வந்தார்கள் எனில் மாணவர்களுக்கு உரிய இடம் எது என்பதனை ஆசிரியர் விரைவாகவே உணர முடியும்.
  • மாணவன் ஆசிரியர் ஆகி கற்பதைப் போல ஆசிரியரும் மாணவனாகி வகுப்பறையில் கற்றுக் கொள்ளப் பழக வேண்டும்.

முதலிய கருத்துக்களை அவ்வப்போது புத்தகங்களின் ஊடே ஆசிரியர் கூறி வரும் பொழுது வகுப்பறை ஒழுங்கு என்பது ஆசிரியர் மாணவர் என இருவருக்கும் பொதுவானவை என்பதனை தெள்ளத் தெளிவாக உணர முடிந்தது. இந்த புத்தகம் முழுமையுமே வாசித்து முடிக்கும் பொழுது திணிப்பதல்ல கல்வி, வசப்படுத்துவதல்ல கல்வி,பங்கேற்க வைப்பது கல்வி. உருவாக்குவது கல்வி. என்பதனையும் அறிந்து கொள்ள நேர்ந்தது.

இந்தப் புத்தகத்தில் வருகின்ற ஆசிரியரான அய்யப்பராஜ் அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த புத்தம் புதிய வாய்ப்புகளால் மாணவர்களிடையே எழுந்த உற்சாகமும் அவர்களிடையே நிலவி வந்த தயக்கங்கள் களையப்பட்ட விதமும் அவர்கள் தங்களுக்குரிய இடம் எங்கே என்பதனை அறிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பாகவே ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பதனையும் அறிய முடிந்தது.

மொத்தத்தில் தங்களுக்குரிய இடம் எங்கே என்பதனை மாணவர்கள் உணர்ந்து கொள்ளவும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உரிய இடம் எது என்பதை அறிந்து, அவர்களுக்கு வழி காட்டவும் இந்த புத்தகம் ஒரு தூண்டுகோலாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

– மோ.ஆடம்ஸ்

*****

நூல்: எனக்குரிய இடம் எங்கே? (வகுப்பறை உறவுகளும் உரையாடல்களும்)
ஆசிரியர்: திரு.மாடசாமி
பாரதி புத்தகாலயம்
பக்கம்:128
விலை:₹130

#எனக்குரிய_இடம்_எங்கே_நூல் #வகுப்பறை_உறவுகளும்_உரையாடல்களும் #enakuriya_idam_enge_book_review #school #teacher #student  #வகுப்பறை #ஆசிரியர் #மாணவர் #அறிவொளி_இயக்கம் #மனித_உரிமைக்_கல்வி

You might also like