எளிமை எப்போதும் இனிமை தரும்!

சிக்கலுக்கு எதிரான வார்த்தையாகவே, எளிமையை நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். அந்த எளிமையைத் தாங்கிச் சுமப்பவர்கள் பிரபலங்களாக இருந்தால் கொண்டாடுவோம், சாதாரணமானவர்களாக இருந்தால் அலட்சியப்படுத்துவோம்.

அனுபவங்களை அசைபோட்டால், இதனை உணரலாம். அதேநேரத்தில், வாழ்வில் எல்லாமே எளிதாகக் கிடைத்துவிட வேண்டுமென்று விரும்புவதும் வாடிக்கையான விஷயம்தான்.

எந்தெந்த விஷயங்களெல்லாம் எளிமையாக இருக்க வேண்டுமென்ற தேர்வு நம்மைச் சார்ந்தே அமைகிறது. உண்மையில், எளிமையை வாழ்க்கை முழுவதும் பின்பற்றுவது பயன் தரும்.

இந்திய மரபில் இருக்கும் இவ்விஷயத்தை, 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் விதைத்தவர் ஹென்றி டேவிட் துர்ரோ (Henry David Thoreau). இவரது பிறந்ததினமான ஜூலை 11-ம் தேதியன்று, அமெரிக்காவில் ‘தேசிய எளிமை தினம்’ (National Simplicity Day) அனுசரிக்கப்படுகிறது.

யார் இந்த துர்ரோ?

1817-ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள மசாசூசெட்ஸ் மாகாணத்தின் கான்கோர்டு நகரில் பிறந்தவர் ஹென்றி டேவிட் துர்ரோ. இவரது குடும்பத்தினர் பென்சில் தயாரிக்கும் ஆலையொன்றை நடத்தி வந்தனர்.

அங்குள்ள ஹார்வர்டு கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார் துர்ரோ.

இறுதியாண்டில், 5 டாலர் கட்டி பட்டயப் படிப்புக்கான சான்றிதழைக் கட்டாயம் பெற வேண்டுமென்றபோது அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

அந்தகாலத்தில் அமெரிக்காவில் பட்டம் பெற்றவர்கள் சட்டம், வர்த்தகம், மருத்துவம், தேவாலய நிர்வாகம் தொடர்பான பணிகளில் ஈடுபட, அதிலிருந்து மாறுபட்டு ஆசிரியராகத் தன் பணி வாழ்வைத் தொடங்கியவர் துர்ரோ. சகோதரர் ஜான் உடன் இணைந்து, சொந்த ஊரில் ஒரு இலக்கணப் பள்ளியை நடத்தியிருக்கிறார்.

அப்போதே இயற்கை நடைக்கு மாணவர்களை அழைத்துச் சென்றதோடு, அருகிலுள்ள கடைகளில் வர்த்தகம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும் நேரடியாகக் கூட்டிச் சென்று விளக்கியிருக்கிறார். ஆனாலும், டெட்டானஸ் பாதிப்பினால் சகோதரர் மரணமடைய அந்த பள்ளியின் செயல்பாடு பாதியில் நின்று போயிருக்கிறது.

அதன்பின், தனியாகக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் வழக்கத்தைத் தொடர்ந்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் அமெரிக்க கவிஞர் ரால்ஃப் வால்டோ எமர்சனை சந்தித்தது, துர்ரோவின் வாழ்க்கையை எழுத்தின் பக்கம் திரும்பியது.

மரங்களில் தங்கிய துர்ரோ!

சிறு வயதில் இருந்தே இயற்கையோடு இயைந்து வாழ்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் துர்ரோ. மத சம்பந்தமான செயல்பாடுகளைவிட, தன்னைத் தானே உணர்ந்துகொள்வதற்கான தூண்டுதல்களில் ஆர்வம் காட்டியிருக்கிறார்.

ஒருகட்டத்தில் குழந்தைகளுக்குப் பாடம் கற்றுத் தரும் பணிகளை ஓரம்கட்டிவிட்டு, தன் எழுத்தில் கவனம் செலுத்துவதற்காகத் தனிமையைத் தேர்ந்தெடுத்தார். இதற்காக, மரங்களின் மீது தனக்கான தங்குமிடத்தை வடிவமைத்துக்கொண்டு, முழுக்க வெளியுலகத் தொடர்பு இல்லாமல் வாழ்ந்திருக்கிறார். 

845-ம் ஆண்டு முதல் 1847 வரை ஒரு சோதனை முயற்சி போலத் தன் வாழ்வை வடிவமைத்துக் கொண்டிருக்கிறார். இதனைக் குறிப்பிட்டு, துர்ரோ எழுதிய ‘வால்டன்’ எனும் நூல் இன்றும் புகழ்மிக்கதாக விளங்குகிறது.

அக்காலகட்டத்தில், வட்டார வரி கட்ட மாட்டேன் என்று அடம்பிடித்ததற்காக சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார்.

மெக்சிகோ மீதான போரையும், அங்குள்ள மக்களை அடிமைகள் போல நடத்துவதையும் எதிர்த்து, தான் இதனைச் செய்வதாக அறிவித்திருக்கிறார்.

அந்த நேரத்தில், துர்ரோவின் உறவினர் ஒருவர் வரித்தொகையைச் செலுத்தி அவரைச் சிறையிலிருந்து அழைத்து வந்திருக்கிறார்.

1949-ம் ஆண்டு ‘ஏஸ்தெடிக் பேப்பர்ஸ்’ எனும் இதழில் துர்ரோ எழுதிய ‘சட்ட ஒத்துழையாமை’ குறித்த ஆய்வுக்கட்டுரை வெளியானது. இதில் சட்ட மறுப்பு குறித்து துர்ரோ குறிப்பிட்ட விஷயங்களில் பல மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங், லியோ டால்ஸ்டாய் போன்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவிலுள்ள ஜோகன்னஸ்பர்க்கில் காந்தி தங்கியிருந்தபோது, துர்ரோவின் எழுத்துகளைப் படித்தது ஆங்கிலேயர்கள் விதிக்கும் சட்டங்களை எதிர்த்துப் போராடத் தூண்டுதலாக அமைந்திருக்கிறது.

இயற்கையின் மீதான காதலால் தாவரவியலிலும், இயற்கை வரலாற்றிலும் ஆர்வம் காட்டும்விதமாகப் பயணங்களில் ஈடுபட்டார் துர்ரோ. முப்பது வயதுக்கு மேல் நயாகரா அருவி, டெட்ராய்ட், சிகாகோ என்று அமெரிக்காவின் பல பகுதிகளைச் சென்று பார்த்ததோடு, கனடாவுக்கும் சென்று வந்திருக்கிறார்.

நில அளவையாளராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்குண்டு. இளம் வயதிலேயே காசநோயினால் பாதிக்கப்பட்ட துர்ரோ, 1862-ம் ஆண்டு உடல்நலம் குன்றி தனது 44-வது வயதில் மரணமடைந்தார்.

துர்ரோ திருமணம் செய்யாமல் வாழ்ந்ததற்கு, அவருக்கிருந்த காசநோயும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்திய மரபில் ஆர்வம்!

வாழ்நாள் முழுவதும் எளிமையான வாழ்வையே மேற்கொண்ட துர்ரோ, “ஆடம்பரங்களும், இன்றியமையாததாக நாம் எண்ணும் வசதிகளும் மனித குலத்தின் உயர்வுக்குத் தடைகளாக அமைகின்றன” என்றார்.

மதுப்பழக்கத்தை எதிர்த்துக் குரல் கொடுத்த இவர், ”புத்திசாலித்தனமான மனிதன் நீர் மட்டுமே குடிப்பது போதுமானது” என்று கூறினார்.

புலம்பெயர்ந்து அமெரிக்காவுக்கு வந்தவர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதை எதிர்த்தும், பெண் முன்னேற்றத்தை வேண்டியும் குரல் கொடுத்தார் துர்ரோ.

தனிமனிதர்க்கு உண்மையான மரியாதையை அளிக்கும் முன்னேற்றத்தையே விரும்பினார்.

மொத்தத்தில், இயற்கைக்கும் மக்களுக்கும் நலம் பயக்கும், எப்போதும் அவற்றைச் சமநிலையில் இருக்கச் செய்யும் விஷயங்களில் மட்டுமே துர்ரோ கவனம் செலுத்தினார்.

பகவத்கீதையில் சொல்லப்பட்டவற்றைக் கடைப்பிடித்த துர்ரோ, அரிசியை வேகவைத்து உண்ணுவதையே விரும்பினார். புல்லாங்குழல் வாசிப்பது, யோகா செய்வது போன்றவற்றில் ஆர்வம் காட்டினார்.

கங்கையைப் புனித நதியாகப் போற்றியிருக்கிறார். அவரது எழுத்தில் இவையனைத்தும் வெளிப்பட்டிருக்கிறது.

எங்கும் எதிலும் எளிமை!

’உங்கள் கனவுகள் காட்டிய வழிகளில் நம்பிக்கையுடன் செல்லுங்கள்; நீங்கள் கனவு கண்ட வாழ்க்கையை வாழுங்கள்’ என்பது துர்ரோவின் புகழ்மிக்க எழுத்துகளில் ஒரு துளி. ’உங்களது வாழ்க்கையை எந்தளவுக்கு எளிமையாக்கிக் கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு இந்த பிரபஞ்சம் எளிமையாக இருக்கும்’ என்பதே அவரது எண்ணம்.

மிகமுக்கியமாக மனதைத் தூண்டும் வகையிலான, தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்காதீர்கள் என்று கூறினார். கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன் துர்ரோ சொன்னது, இன்றும் நமது மன அழுத்தங்களுக்கான காரணங்களைத் தேடும்போது பொருந்திப் போகிறது.

உலக மக்கள் அனைவரும் தேவையற்ற மன அழுத்தங்களில் இருந்து விடுபட்டு, ஒரு நோக்கத்துடன் எளிமையாக, திருப்தியாக, மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்பதே துர்ரோவின் விருப்பம்.

எளிமையைக் கடைபிடிப்பது கடினம் என்று ஒருவர் நினைத்தால், அவர் தன் வாழ்வை எந்தளவுக்கு சிக்கல்கள் மிகுந்ததாகக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

தொடக்கத்தில் வலி தருவது அதன்பின் இயல்பாவது போல, நம் வாழ்நாளெங்கும் தொடரும் எளிமை பல முன்னேற்றங்களை உடன் அழைத்து வரும்.

அமெரிக்காவில் கொண்டாடப்படும் ‘தேசிய எளிமை தினம்’ நம் நாட்டிலும் கொண்டாடப்படுவதில் தவறில்லை.

ஏனென்றால், துர்ரோ யார் என்று அறியாதவர்களும்கூட, அவர் சொன்னவற்றில் பல நம் முன்னோர்களின் வாழ்க்கையாகவும் வார்த்தைகளாகவும் இருப்பதை அறிய முடியும்.

அந்த வகையில், எளிமையைக் கைக்கொள்வதென்பது இப்பூமியில் இயற்கையோடு இயைந்து எளிமையாக வாழ்ந்து சென்ற நம் முன்னவர்களுக்குச் செலுத்தும் மரியாதையும் கூட..!

ஜூலை 12- அமெரிக்க நாட்டில் ’தேசிய எளிமை தினம்’ ஆகக் கொண்டாடப்படுகிறது.

– பா.உதய்

You might also like