மன உளைச்சலிருந்து வெளிவரச் சில வழிகள்!

இன்றைய காலகட்டத்தில் ‘மன உளைச்சல்’ என்ற சொல் நாள்தோறும் புழக்கத்தில் கேட்கும் சொல்லாக மாறிவிட்டது என்பது ஏற்கமுடியாத உண்மை.

மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப வேகமாக ஓட வேண்டிய கட்டாயம், வேலையில் இருக்கும் நெருக்கடிகள், இருக்கும் வேலையைத் தக்கவைத்துக் கொள்ள நடக்கும் போராட்டம், சுற்றியிருக்கும் உறவுகளுக்கு இடையில் ஏற்படும் தவறான புரிதல், பொருளாதார நெருக்கடிகள் என பல்வேறு காரணங்களால் எல்லோரும் ஏதோ ஒருவகையில் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்.

இன்றைய சூழலில் இது சாதாரணமாகிவிட்டது என்பதற்கு, ஆங்காங்கே புற்றீசல் போல முளைத்திருக்கும் மனநல மருத்துவர்களின் (சைக்காட்ரிஸ்ட்) பெயர்ப் பலகைகளே சான்று.

இப்படிப்பட்ட நிலையில், கூடுமான வரையில் இறுக்கமான மனநிலை உருவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அதற்கு,  “எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே” என எடுத்துக் கொள்வது உள்ளிட்ட சில மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.

இதுபோன்று நம்மை நாமே சரிசெய்து கொண்டால் தான் மன உளைச்சல் எனும் வைரஸ் நம்மைத் தாக்காமல் தற்காத்துக் கொள்ள முடியும்.

மன உளைச்சலிருந்து வெளிவரச் சில வழிகள்:

ஏமாற்றங்கள் வரும்போது, அதை, நம்மைப் பக்குவப்படுத்திக்கொள்ள நிகழ்ந்த அனுபவமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

தனிமையில் நான்கு சுவற்றுக்குள் இருப்பதை முடிந்தவரைத் தவிர்ப்பது நல்லது.

பிடித்த நண்பர்களோடு உரையாடுவது மன ஆறுதல் தரும். அது இறுக்கத்தைக் களைக்கும்.

தினமும் கல்லூரி அல்லது அலுவலகம் செல்லும் வேளையில், பத்து நிமிடம் முன்பாக சென்று, அன்று செய்து முடிக்க வேண்டிய பணிகளையும் அதற்கான நேரத்தையும் திட்டமிடுங்கள்.

நேரத்திற்குள் முடித்த வேலைகளுக்காக உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். அது தங்களுடைய அடுத்த நாளுக்கான திட்டமிடுதலுக்கான ஒரு உத்வேகமாக செயல்படும்.

உங்களுக்கான ஒரு பொழுதுப்போக்கை உருவாக்கிக் கொள்வது நல்லது. அது ஒரு விளையாட்டு, நடனம், இசை, மொழி கற்றுக்கொள்வது என எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

இப்படி ஏதாவது ஒன்றை தினமும் புதிதாகக் கற்றுக் கொள்வதன் மூலம், நாம் நமது மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள முடியும்.

உலகில் உங்கள் வளர்ச்சியைக் கண்டு உண்மையில் சந்தோஷப்படுபவர்கள் உங்களது பெற்றோர்கள். அவர்களுடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சின்ன சுற்றுலா சென்று வாருங்கள். அல்லது பிடித்த இடங்களுக்கு பிடித்த நபருடன் செல்வது புத்துணர்வைத் தரும்.

சிறு இன்னல்களுக்கெல்லாம் மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல், உங்களுக்குப் பிடித்த வேளையில் உங்களை ஆழ்த்திக் கொள்ளுங்கள்.

உங்கள் அறையில் உள்ள பொருட்களை சுத்தம் செய்வது, அவற்றை இடமாற்றி வைப்பது, கடை வீதிக்குச் செல்வது, பிடித்த உணவகத்திற்குச் செல்வது, விரும்பிய தின்பண்டங்கள் சமைப்பது, புதிய உணவுகளை சமைக்கக் கற்றுக் கொள்வது என உலகில் செய்வதற்கு ஏராளம் உள்ளன.

கண்ணாடி முன்பு நின்று, உங்களுக்கு நீங்களே தன்னம்பிக்கை ஊட்டிக்கொள்ளுங்கள்.

இவை அனைத்தையும் விட மிக முக்கியமான ஒன்று, கோபம் வருகையில் வீண்விவாதங்களிள் ஈடுபடாமல் அமைதி காப்பது சிறந்தது.

கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனில் அந்த இடத்தை விட்டு உடனே அகன்று சென்று பாருங்கள். பல வகையில் நன்மை தரும்.

தொலைபேசியில் நீளும் சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் உடனடியாகத் தொடர்பைத் துண்டித்து விட்டு, அமைதி காப்பது நல்லது.

– யாழினி ராஜ்

You might also like