தடுமாற்றத்தில் விடப்பட்ட அதிமுக, தேமுதிக தொண்டர்கள்!

நாளை நடைபெற இருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இதற்கு முன்பு நடந்த இடைத்தேர்தல்களைவிட கூடுதல் கவனமும் ஊடகங்களின் பேசுபொருளாகவும் மாறி இருக்கிறது.

ஆளுங்கட்சியைச் சார்ந்த அமைச்சர்களும் மாவட்ட நிர்வாகிகளும் எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் ஒருசேர விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் இறங்கி வாக்காளப் பெருமக்களை இதுவரை இல்லாத அளவுக்கு கவனித்திருக்கிறார்கள். பிரச்சாரம் பண்ணியிருக்கிறார்கள்.

இது பற்றி பாமக வெளிப்படையாகாவே விமர்சித்திருக்கிறது. ஆளுங்கட்சியான திமுக, இதற்கு முந்தைய தேர்தல்களைவிட விக்கிரவாண்டி தேர்தலுக்காக இந்தளவுக்கு பதற்றம் அடைந்திருப்பதற்கும் தன்னுடைய செயல்பாடுகளை தீவிரப்படுத்தியிருப்பதற்கும் என்ன காரணம்?

விக்கிரவாண்டி தேர்தல் அறிவிப்புக்குப் பிறகுதான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரய சாவுகள் நடந்து, அது அரசுக்கு பெரும் தலைவலியானது. அதையொட்டி காவல்துறை அதிகாரிகளும் ஆட்சிப் பொறுப்பில் இருந்த சில அதிகாரிகளும் மாற்றப்பட்டார்கள். 10 லட்சம் வரை நிவாரணம் அறிவிக்கப்பட்டன. எல்லாமே விரைவாக நடந்தன.

அதற்கடுத்து அதிமுக பிரமுகர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யபப்ட்டார். அதற்கடுத்து அதையெல்லாம் விட பெரும் பிரச்சனையாக அமைந்தது சென்னையில் நடந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை.

சென்னை போன்ற தலைநகரில் நடந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை பலரையும் மறுபடியும் ஒருவிதமான உனர்வுநிலைக்குக் கொண்டு சென்றது. மாயாவதி போன்ற தேசிய தலைவர்கள் வருகை தந்திருக்கிறார்கள். ராகுல்காந்தி, ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.

மழை நேரத்திலும் கூட, ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அவ்வளவு தொண்டர்களும் ஆதரவாளர்களும் அணி திரண்டு சென்றார்கள்.

இந்த படுகொலையைத் தொடர்ந்து காவல்துறை உயர் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். மாற்றப்பட்ட வேகத்தில் சென்னை காவல்துறை ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட அருண், “ரவுகளுக்குப் புரிகிற மொழியில் அவர்களுக்குப் பாடம் கற்பிப்போம்” என்றிருக்கிறார்.

இதெல்லாம் விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரம் நிறைவடைவதற்கு முன்பு நடந்த பலவேறு விஷயங்கள்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, இடைத்தேர்தலையொட்டி, ஆளுங்கட்சிப் பிரச்சாரத்தில் பெரும் வேகமெடுத்த நிலையில் இருக்க, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது அதிமுகவும் தேமுதிகவும் இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருப்பதுதான்.

இதே விக்கிரவாண்டி தேர்தலில், இரண்டாவது இடத்திற்கு வரும் அளவுக்கு பெரும் செல்வாக்குள்ள அதிமுக, தான் போட்டியிடாததற்கு சொல்லியிருக்கும் காரணம் உவப்பானதாக இல்லை.

“எப்படியும் சட்டம் ஒழுங்கு மீறப்படும், கடுமையான அத்துமீறல்கள் நடக்கும்” என்று ஆளுங்கட்சி பற்றி வழங்கம்போல குறைசொல்லிப் பேசியிருக்கிற அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி,

இந்த தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்திருப்பதற்கு சொல்லியிருக்கும் காரணங்களை தற்போதுவரை தொலைக்காட்சி விவாதங்களில் அலசிக்கொண்டே இருக்கிறார்கள். வெவ்வேறு ஊடகங்கள் அலசிக்கொண்டிருக்கின்றன.

இதெல்லாம் ஒருபுறம் நடந்தாலும் அதிமுக பக்கம் இருக்கும் தொண்டர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பதுதான் தற்போது பலரிடமும் நிலவும் கேள்வி.

அந்தத் தொகுதியில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான அதிமுக வாக்காளர்கள் யாரை ஆதரிப்பாளர்கள்? எதிர்த்து நிற்கும் பாமகவையா, அல்லது தனித்து நிற்கும் நாம் தமிழர் கட்சியையா அல்லது ஆளும்கட்சியாக உள்ள திராவிடக் கட்சியான திமுகவையா?

ஆக, அதிமுக தொண்டர்களுக்கு முன்பு மூன்று வாய்ப்புகள் அவர்களை நோக்கி நீட்டிய நிலையில் இருக்கின்றன. இதில் எந்த விரலை அதிமுக தொண்டர்கள் தேர்வு செய்யப்போகிறார்கள் என்பது குழப்பமான நிலை.

இடைத்தேர்தல் குறித்து முடிவெடுப்பதில் எடப்பாடிக்கு இருக்கும் அதே குழப்பம்தான் இந்தத் தொகுதி அதிமுக தொண்டர்களுக்கும் இருக்கிறது.

அவர்கள் வாக்களிக்காமல் இருக்கப்போவதில்லை அல்லது நோட்டாவுக்கும் வாக்களிக்கப் போவதில்லை. எப்படியும் இங்கிருக்கும் கட்சிகளுக்கோ, அல்லது சுயேட்சைகளுக்கோ தான் வாக்களிக்கப் போகிறார்கள்.

குறிப்பிட்ட இன்னாருக்கு வாக்களியுங்கள் என்று சுட்டிக் காட்டுவதும் எடப்பாடி தரப்பிலிருது இதுவரை நிகழவில்லை.

இப்படிப்பட்ட மனநிலையில் தொண்டர்களை வைத்திருப்பதை அதிமுக போன்ற கட்சிகள் என்னதான் நியாயப்படுத்தினாலும் அந்த கட்சியின் எதிர்காலத்திற்கு இதுபோன்ற அணுகுமுறை நல்லதல்ல.

எத்தகைய அரசியல் சூழ்நிலை நெருக்கடிகள் வந்தாலும் அதையும் எதிர்த்து ஆளுங்கட்சியின் சவால்களை தேர்தல் களத்தில் நேருக்கு நேர் சந்திப்பது தான் ஆரோக்கியமான, ஜனநாயக ரீதியிலான எந்த ஒரு கட்சியின் அணுகுமுறையாக இருக்கும். அந்த விதமான அணுகுமுறையை இந்தத் தேர்தலில் தவறவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இதன்மூலம் அதிமுக தொண்டர்களை அவரே வெவ்வேறு கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு கூறுபோட்டிருக்கிறார்.

தற்போது பலவிதமான உட்கட்சி நெருக்கடிகளைச் சந்தித்து வரும் எடப்பாடி பழனின்சாமிக்கு இது ஒரு கூடுதல் நெருக்கடிதான். இதேவிதமான நெருக்கடியை தேமுதிகவும் உருவாக்கியிருக்கிறது.

கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக, தற்போதும் அதே கூட்டணியில் இருக்கும் பாமகவை தவிர்க்கும் விதத்தில், தேமுதிக தொண்டர்கள் பாமகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று சொல்லியிருக்கிறார் அதன் பொதுச் செயலாளரான பிரேமலாத விஜயகாந்த்.

எந்த ஒரு தொகுதியிலும் வாக்களிப்பது என்பது வாக்காளர்களின் உரிமை. அவர்கள் எந்தக் கட்சியிலும் இருக்கலாம். அப்படியில்லாமல் வெகுமக்களில் ஒருவராகவும் இருக்கலாம். ஆனால், அவர்களை வாக்காளிக்கக் கூடாது என்று தடுப்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட எந்த ஒரு கட்சியின் அணுகுமுறையாகவும் இருக்கக் கூடாது.

அப்படி இருப்பது அந்தக் கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. எல்லாக் கட்சிகளும் தமது தொண்டர்களின் பலத்தை ஊக்குவிப்பதாகவும் அல்லது அந்த தொண்டர்களின் உணர்வை புரிந்துகொள்ளும் விதத்திலோ தான் தன்னுடைய செயல்பாட்டை வைத்திருக்கும். ஆனால், தற்போதைய இடைத் தேர்தலில் தன்னுடைய தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத விதத்தில் முடிவெடுத்திருக்கின்றன அதிமுக தேமுதிகவும்.

– யூகி

You might also like