மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
ஜூன் – 29 ம் தேதி போட்டி முடிவடைந்த நிலையில் பார்படாஸ் நகரில் வீசிய புயல் காரணமாக இந்திய அணி தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. புயல் ஓய்ந்து தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய அணி வீரர்களுடன் மும்பை வந்த விமானத்துக்கு தீயணைப்பு வாகனம் மூலம் நீர் பாய்ச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர், இந்திய அணி வீரர்கள் பேருந்து மூலம் மும்பை வான்கடே மைதானத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.
வீரர்களின் ஊர்வலம் நடைபெற்ற இடத்தில் கொட்டும் மழைக்கு இடையே லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.
இந்திய அணிக்காக இளைஞர்கள் பாடல்களை பாடியதுடன், வந்தே மாதரம் உள்ளிட்ட முழக்கங்களையும் எழுப்பினர். இதேபோன்று, மரைன் டிரைவ் பகுதியின் சாலைகளில் இரு புறமும் ரசிகர்கள் குவிந்தனர்.
அதைத் தொடர்ந்து வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதன்பின் வீரர்களுக்கு ரூ.125 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது.
அப்போது இந்திய மூவர்ண கொடியின் நிறத்தின் அடிப்படையில் வீரர்களின் பின்னால் வண்ணபுகை வான் வரை உயர்ந்து பரவச் செய்யப்பட்டது. முன்னதாக போட்டியில் வெற்றி பெற்றதும் இந்திய அணிக்கு ரூ.125 கோடி வழங்கப்படும் என பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.