கடலுக்கு அடியில் அமேசானைவிட பெரிய மழைக்காடுகள்!

அமேசான் மழைக்காடுகளைத் தெரியும். கடலுக்கு அடியில் அமேசானை விட பெரிய மழைக் காடுகள் இருப்பது தெரியுமா?

ஆம். கடலுக்கு அடியிலும் காடுகள் உள்ளன. கெல்ப் (Kelp) காடுகள் என்பது இந்த கடலடி காடுகளுக்கு உள்ள இன்னொரு பெயர்.

மெக்சிகோ வளைகுடாவில் அறுபதடி ஆழத்தில் சைப்பிரஸ் மரங்களால் ஆன காடு இருக்கிறது. இந்த காடு, 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பனியூழி (Ice Age) காலத்து காடாம்.

கடல்மட்டம் இப்போது இருப்பதைவிட 400 அடி குறைவாக இருந்த காலத்தில் நிலத்துக்கு மேலே இருந்த காடு இது. இப்போது கடலுக்கடியில் இருக்கிறது.

கடலடியில் உள்ள காடுகளின் மொத்த பரப்பளவு 6 மில்லியன் முதல் 7.2 மில்லியன் சதுர கிலோ மீட்டர். ஆக, அமேசான் காடுகளை விட பெரிய காடுகள் ஆழ்கடலுக்கு அடியில்தான் இருக்கின்றன.

சரி கடலுக்கு அடியில் காடுகள் மட்டும்தான் இருக்குமா? இல்லை ஆறுகளும்(!) இருக்கும்.

மெக்சிகோ நாட்டின் துலும் கடற்பகுதியில் அனடோலி என்பவரும், அவருடைய நண்பர்களும் ஸ்கூபா நீர்மூழ்கி உடையணிந்து முக்குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடல்தரையில், ஆறு ஒன்று ஓடுவதை அவர்கள் கவனித்தனர்.

நிலத்தில் ஓடும் ஆற்றில் எப்படி வெள்ளம் போகுமோ, அதைப்போல அந்த கடலடி ஆற்றிலும் வெள்ளம் ஓடியது. அந்த ஆற்றின் கரை ஓரங்களில் இலைகளுடன் மரங்கள் இருந்தன.

இந்த கடலடி ஆற்றுக்கு, ‘செனோட்டே ஏஞ்சலிட்டா’ (குட்டி தேவதை) என்று அவர்கள் பெயர் சூட்டினர்.

ஆனால், மெக்சிகோ அருகே துலும் பகுதியில் மட்டுமல்ல, கருங்கடல், ஆஸ்திரேலியா, போர்த்துக்கல் நாடுகளுக்கு அருகே உள்ள கடற்பகுதிகளிலும் ஆறுகள் ஓடுவது தெரிய வந்திருக்கிறது.

கருங்கடலுக்கு அடியில் ஓடும் ஆற்றை டாக்டர் டான் பார்சன் என்பவர் ஆய்வு செய்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு அருகே கடலுக்கு அடியில் ஆறு ஓடுவது ரோபோக்கள் மூலம் கண்டறியப்பட்டு இருக்கிறது.

சரி. நம் தமிழ்நாடு இலங்கையைப் போலவே ஒரு தீவாக இருந்து, நமக்கு வடக்கிலும் மேற்கிலும் இப்படி கடலடி ஆறுகள் ஓடினால் எப்படியிருக்கும்?

அப்படி ஆறுகள் ஓடினால் ஆந்திராக்காரர்கள், கடலடி ஆற்றை வழிமறித்து தடுப்பணைகளைக் கட்டி இருப்பார்கள்.

கர்நாடகாக்காரர்கள் அந்த கடலடி ஆற்றில் ஒரு சொட்டு நீரைக்கூட தமிழகத்துக்குத் தர முடியாது என்றிருப்பார்கள்.

சரி. தமிழகத்தில் என்ன நடந்திருக்கும்? ஊகியுங்கள் பார்க்கலாம்.

தமிழகத்தில், ஜே.சி.பி யை வைத்து அந்த கடலடி ஆற்று மணலை அள்ளி அள்ளி, ஆறு ஓடிய அறிகுறியே இல்லாமல் ஆக்கியிருப்பார்கள்.

(அட! நான் ஊகித்த மாதிரிதான் நீங்களும் சரியாக ஊகித்திருக்கிறீர்கள். என்ன செய்ய? நம்ம தமிழ்நாட்டோட பெருமை அப்படி!)

 நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு. 

You might also like