பௌத்த நெறி வளர்ச்சியும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களும்!

நூல் அறிமுகம் :

இந்த துன்பம் நிறைந்த உலகில் மக்களுக்கு ஒரு மதம் தேவைப்படுகிறது. சொல்லி அழ, வேண்டி கேட்க ஒரு இறைவன் தேவைப்படுகிறான்.
– கார்ல் மார்க்ஸ்

ஆசைப்படக்கூடாது என்று ஆசைப்பட்டான் புத்தன் என்ற ஒரு நறுக்கு உண்டு. அதேபோல கடவுள் வழிபாட்டை மறுத்த பௌத்தத்தையே கடவுள் வழிபாட்டுக்குள் கொண்டுவர செய்யப்பட்டது பௌத்த மதம் என்பது போன்ற கருத்தாக்கங்கள் ஆங்காங்கே பரவி கிடந்தன.

புத்த மதம் கடவுள், பக்தி முதலியவற்றுக்கு அப்பாற்பட்ட ஒரு நெறி என்று புத்தகம் சொல்கிறது. பெளத்த வரலாறு தமிழ்நாட்டில் ஏற்படுத்திய சலனங்கள் அதிகம்.

சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களில் பாலி மொழியில் இருந்து அதிக சொற்கள் தமிழுக்கு கிடைத்துள்ளன. இதுபோன்ற பொதுவான சந்தேகங்களை ஆய்வுடன் ஆராய்கிறது.

யானையைப் பார்த்த விழி இழந்தவர்கள் கதையை நாம் அறிவோம். அது சீத்தலைச் சாத்தனார் கூறிய புத்தரின் கதை தான். பாலி மொழியில் உதானா எனும் நூலில் 69 வது கூற்றாக இக்கதை புத்தரால் கூறப்பட்டுள்ளது. இதே புத்தநெறியையும் இந்த சாராம்சத்தையும் ஒப்பிட்டு கூறுகிறார்.

புலால் உணவு குறித்து இரு வேறு கருத்துக்கள் புத்த மதத்தில் உண்டு. இதில் உனது உணவுக்காக நீ எந்த மிருகத்தையும் கொல்லக்கூடாது. ஆனால் ஏற்கனவே கொல்லப்பட்ட மிருகத்தின் உணவை சாப்பிடுவதற்கு தடை இல்லை என்கிறது புத்த மதம்.

ஒருமுறை ஜீவகன் அவரை அணுகி புத்தரே தங்களுக்காக கொன்று சமைக்கப்பட்ட புலாலை தாங்கள் உண்பது சரிதானா? எனக் கேட்டவுடன் உடனே “நாம் உயிரை கொல்வதை பார்த்தாலோ கேட்டாலோ சந்தேகம் கொண்டாலோ உணவு விலக்கத்தக்கது என்பதே என் கருத்து என்றார்.

சுந்தன் என்ற கொல்லர் அன்புடன் அளித்த பன்றிக்கறியை உண்டதால் ஏற்பட்ட செரிமான கோளாறின் விளைவாக புத்தர் மரணம் அடைந்தார் என்பது வரலாறு.

எண்பதாம் வயதில் பாவாபுரி என்னும் நகரில் சுந்தரின் மாந்தோப்பில் தங்கி இருந்தபோது துயர நிகழ்வு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் பன்றி மாமிசம் சாப்பிட்டதால் மட்டும் இறக்கவில்லை என்று தன்னுடைய சீடர்களுக்கு போதித்தார்.

*வேதத்தின் மூலம் மட்டும் மெய்யறிவை பெற்று விட இயலும் என்ற போதித்தவர்கள் பிராமணர்கள். இவர்களுக்கு எதிராக தன்னை வருத்தி சிரமம் செய்து தவமியற்றி உள்ளொளியை கண்டறிந்து மெய்யறிவை பெற முடியும் என்பதால் இவர்கள் சிரமணர்கள் என்று அழைக்கப்பட்டனர். உனக்கு நீயே விளக்கு என்கிறார் புத்த பகவான்.

அக்னியை வணங்கும் ஆரியர்கள் யாக சடங்குகளை வேள்வி கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தினர்.

அரிசி கோதுமை முதலான தானியங்களை தீயில் எரித்து துவங்கி.. பின்னர் ஆடு பசுக்கள் எருதுகள் குதிரைகள் பலியிட்டு பிரம்மாண்ட யாகங்களாக அவை விரிந்தன.

மக்கள் மத்தியில் இது அதிருப்தியை ஏற்படுத்தியது புத்த மதம் இதனை கண்டித்தது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

குடும்பம் சொத்து எவ்வாறு உருவானது என்பதை பற்றி சொல்லும்போது விளைச்சல் நிலங்கள் ஒன்றாக இருந்தபோது, ஒரு கட்டத்தில் அனைவருக்கும் சமமாய் பிரித்துக் கொடுக்கப்பட்டது.

விளைச்சல் நன்றாக இல்லாவிட்டால் என்ன செய்வது என்ற நிலையில் எல்லாரும் கூடி ஒருவரைத் தேர்வு செய்தனர்.

அதற்கு கூலியாக ஒவ்வொருவரின் விளைச்சலில் இருந்தும் அவருக்கு அளிப்போம் என்றதன் அடிப்படையில் மகா சம்மதா என்று அழைக்கப்பட்ட அவன் பின்னாளில் ராஜா என்று பெயரிடப்பட்டது.

இவ்வாறு அரசு உருவாக்கத்தை இணைத்து பேசுகிற பௌத்த மரபு லெனின் ஏஞ்கல்ஸ் முதலியோர் விரித்துரைக்கும் அரசு பற்றிய சிந்தனைக்கு இணையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

சொந்த அனுபவத்தின் மூலம் அவர் அறிந்த எண்ணங்களே தர்மம் அல்லது தம்மம் எனப்பட்டன. தம்மம் என்பது எல்லாருக்கும் எல்லா சந்தர்ப்பங்களுக்குமான வழிகாட்டு நெறியோ கொள்கையோ அல்ல.

கண்முன் விரியும் காட்சிகள் அனைத்தும் நம் பார்வைக்கான பொருள்களாக உள்ளன போல் ஒலிகள் அனைத்தும் செவிகளுக்கான பொருள்கள் என்பது போல்.. தம்மம் என்பது நமது சிந்தனைக்கான பொருள் அவ்வளவே. தம்மத்தை சிந்தித்தல் தம்மத்தோடு சிந்தித்தல் தம்மத்தை தாண்டி சிந்தித்தல் என்பதே பௌத்தம் சொல்வது.

*மனிதன் விரும்புகின்ற எல்லாவற்றில் இருந்தும் அவன் மகிழ்ந்து அனுபவிக்கும் அனைத்திலிருந்தும் ஒரு நாள் அவன் பிரிந்து தான் ஆக வேண்டும்.

புத்த பகவனின் அஸ்தியைப் பிரித்துக் கொள்வதில் மல்லர்களுக்கும் மற்ற பழங்குடிகளுக்கும் இடையே பிரச்சினை எழுந்தபோது துரோணன் என்கிற பார்ப்பனன், ‘அமைதியை வேண்டிய ஒருவரின் அஸ்திக்காகப் போரிட வேண்டாம்’ எனக் கூறி சமாதானம் செய்துவித்தான்.

எட்டுப் பங்காகப் பிரிக்கப்பட்ட புத்தரின் பூத உடற்சாம்பல்கள் மகதர்கள், லிச்சாவியர்கள், சாக்கியர்கள், கோலியர்கள், பூலியர்கள், மல்லர்கள் ஆகியோர் தவிர வேத தீபர், துரோணர் ஆகியோருக்கும் அளிக்கப்பட்டன.

சாம்பல் நிறைந்த கலயங்களைத் தத்தம் பகுதிகளுக்குக் கொண்டு சென்ற அவர்கள் அவற்றைப் பதித்துத் தூபங்கள் எழுப்பினர். புத்தரின் நினைவைப் பறைசாற்றி நின்றன அந்தத் தூபங்கள்.

அசோகரின் ஆட்சியில் வீழ்த்தப்பட்ட பிராமணர்கள் ஒன்றிணைந்து அதற்குப் பின்பு தலைக்கு 100 காசு என விலை கூவி பௌத்தப்பிக்குகள் அழிக்கப்பட்டனர். அதன் பிறகு மத்த மதத்தினரும் பௌத்தம் வளர்வது பிடிக்காமல் அதனை அழிக்க நினைத்தனர்.

கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு ஆகிய கோட்பாடுகளை ஏற்காதது பௌத்தத்தின் குறையாக பார்க்கப்பட்டு அனைத்து மதங்களும் குறிப்பாக இந்து மதம் அதனை வளர விடாமல் செய்தது.

அங்குலி மலரின் பாடலை இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.

சிலர் தண்டங்களால் நெறிப்படுத்தப்படுகின்றனர். சிலர் தடிகளால் சிலர் சாட்டைகளால் தண்டமும் இன்றி ஆயுதமும் இன்றி உறுதியான ஒருவரால் நெறிப்படுத்தப்பட்டேன் நான் (தேர காதை)

புத்த மதம் வளர்ந்த போது ஏற்பட்ட இன்னல்களும் அது தமிழ் இலக்கிய உலகில் என்னென்ன மாற்றத்தை ஏற்படுத்தியது என்றும், மற்ற மதங்களில் என்னென்ன இருந்தன என்றும், அதனை விட புத்தமதம் எவ்வகையில் மேம்பட்டது என்றும் ஒவ்வொரு கட்டுரைகளிலும் மிக எளிதாக விளக்கியுள்ளார். அறியாத செய்திகள் பலவற்றையும் இதில் வெளிப்படுத்தி உள்ளார்.

பவுத்தத்தின் அடிப்படைகளை மட்டுமல்ல, அதன் ஆழங்களையும் அது முன்வைத்த தம்ம நெறிகளையும் துல்லியப்படுத்திய வகையில் பவுத்தம் குறித்த ஒரு ஈடு இணையற்ற, அறஞான நூலாக மலர்ந்திருக்கிறது. பவுத்தம் குறித்து அறிமுகமாகப் பயில்வோர் மட்டுமின்றி, ஆழத் துறைபோகியோரும் படிக்க வேண்டிய முக்கியமான நூல்.

– மணிகண்ட பிரபு

*****

நூல்: புத்தம் சரணம்
ஆசிரியர்: அ.மார்க்ஸ்
அடையாளம் பதிப்பகம்

பக்கங்கள்:122
விலை: 104/-

You might also like