அகதிகளின் நிலை மேம்பட வேண்டும்!

ஜூன் – 20: உலக அகதிகள் தினம்

பெரும் மனவலியோடு, சொல்லொண்ணா துயரத்தோடு தங்கள் பிறந்த மண்ணை விட்டு அந்நிய நாட்டில் தஞ்சம் புரிந்தோரின் நிலையை நினைத்துப் பார்க்கச் செய்கிறது உலக அகதிகள் தினம்.

1959-ம் ஆண்டில் சீன அரசு திபேத் நாட்டை தன்னோடு இணைத்துக் கொண்டதால், பல்லாயிரக்கணக்கான திபேத்தியர்கள் அவர்களது புத்த மத தலைவர் தலாய் லாமாவுடன் இந்தியாவில் தஞ்சம் கொண்டார்கள்..

ஆரம்ப காலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேலானோர் இந்தியாவில் அகதியாக வாழ்ந்த பின், பலர் பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். தற்போது ஏறத்தாழ 75,000 திபேத்தியர்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்

அவர்களில் ஏறத்தாழ 2000 பேர் அருணாச்சலப் பிரதேசத்தின் மியா (MIAO) என்ற ஊரில் வசித்து வருகின்றனர்.

நான் கடந்த 2018-ம் ஆண்டு அருணாச்சலத்திற்கு பயணமாக சென்றிருந்தபோது மியாவிலுள்ள திபேத்திய செட்டில்மென்ட பகுதிக்கும் சென்று வர விரும்பினேன்.

அதன் படி எனது அருணாச்சல நண்பர் நாகராஜன் (Pramanayagam Nagarajan) உதவியுடன் மியாவிற்கு பயணம் செய்தோம்.

மியாவில் வசிக்கும் மக்கள் சீன இனவகையைச் சேர்ந்தவர்கள். அதனால் திபேத்திகர்களின் வாழ்விடம் ஊரை விட்டுத் தள்ளி தனியாக உள்ளது.

அங்கு திபேத்தியர்களின் கூட்டுறவு அமைப்பு ஒன்று சிறப்பாக செயலாற்றி வருகிறது. திபேத்திய பெண்கள் தங்கள் பராம்பரிய கார்பெட் தயாரிக்கும் வேலைகளைச் செய்கிறார்கள். கூட்டுறவு சங்கத்தில் அவர்கள் தயாரித்த பொருட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

தாங்கள் செல்லும் இடமெல்லாம் தமிழர்கள் முருகன் கோயிலைக் கட்டி வணங்குவது போல திபேத்தியர்களும் மியாவில் புத்தக் கோயிலை நிறுவி வழிபடுகின்றார்கள்..

திபேத்திய குழந்தைகளுக்கு அங்கே பள்ளிக்கூடம் உள்ளது. சிவந்த கன்னங்களோடு கொழுக் மொழுக் குழந்தைகளைக் காணும் போது ‘சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பப்பா’ பாடல் நினைவுக்கு வந்து சென்றது.

கூட்டுறவு விற்பனை நிலையத்தில் பணியாற்றும் திபேத்திய இளம்பெண் சிறப்பான ஆங்கிலமும் சரளமான இந்தியிலும் உரையாடினார். இந்தியர்கள் மீது மிகுந்த நம்பிக்கையும் நன்றியும் வைத்துள்ளது அவளின் பேச்சில் தெரிய வந்தது!

நாடு விட்டு நாடு வந்து, மீண்டும் தங்கள் நாட்டை அடைய நாடும் திபேத்தியர்களின் நாடு, திபேத்தியர்களுக்கே கிடைக்கட்டும் என நாடுவோமாக !

இந்த உலக அகதிகள் தினத்தில் உலகெங்கும் வாழும் அகதிகளின் நிலை மேம்பட அரசுகள் உதவிகள் வழங்கட்டும்!

நன்றி: பொ.நாகராஜன்

You might also like