மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பிறந்த இரண்டாவது வயதில் தந்தையை இழந்து வறுமையில் வீழ்ந்த குடும்பத்தில் வாழ்ந்தார். சின்னங்சிறு வயதில் நாடக சபாவில் தனது தமையனுடன் சேர்க்கப்பட்டார் ராமச்சந்திரன்.
“தாயைப் பிரியமாட்டேன், மேலே படிக்க வேண்டும்” என்று கதறி அழுதவரை, “உணவுடன் தங்குமிடம் கிடைக்கும்” என்று ஆறுதல் சொல்லி சபாவில் சேர்ந்துவிட்டார் அவரது தாயார்.
1925-ல் நடிக்க வந்த எம்.ஜி.ஆர் நடிப்புத் துறையில் நிலையான இடம்பிடிக்க 22 வருடங்கள் போராடினார். 1947-ல் திரை கதாநாயகன். 1958-ல் வசூல் சக்ரவர்த்தியாக உருவெடுத்தபோது அவருக்கு வயது 41. 1960-களில் எம்.ஜி.ஆர் தனக்கான இடத்தைப் பிடித்தார்.
உதவிகள், துரோகங்கள், ஏமாற்றங்கள், ஏற்ற இறக்கங்கள் என 35 வருடங்கள் போராடி பெற்ற இடம் அது.
ஆனால் மக்கள் திலகமாக உருமாறிய பின்னாளில் அவரது வீட்டிற்கு வரும் அனைவரையும் அவரே “சாப்பிட்டீர்களா” என்று விசாரிப்பார்; சமபந்தியில் சாப்பிட வைப்பார் என்று பலரும் நினைவு கூறுகிறார்கள்.
எட்டு வயதில் உணவிற்காக தனது அம்மாவையும், கல்வியையும் பிரிய நேர்ந்தது அவர் வாழ்வின் முதல் துயரம். அந்த துயரம் 50 வருடங்கள் கழித்து அவர் மாநிலத்தின் முதல்வரான போது மேம்படுத்தப்பட்ட மதிய உணவுத்திட்டமாக உருவெடுத்தது.
கடும் எதிர்ப்புக்கிடையே நடத்தப்பட்ட அதிமுக ஆட்சியை அசைக்க முடியாத ஆட்சியாக மாற்றிய திட்டம் சத்துணவுத் திட்டம்.
“வேலைக்குப் போகும் ஏழைத் தாய்மார்கள் இனி தனது மகன் அங்கே வயிறார சாப்பிட்டுக் கொண்டிருப்பான்; சத்தான உணவு அவனுக்கு கிடைக்கிறது என்று நிம்மதியுடன் அவர்கள் வேலையை தொடரலாம்” என்று பேசினார்.
எம்.ஜி.ஆர். திரையின் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு பிழைத்து வந்தார். கழுத்தில் கட்டுடன் வெளிவந்த அவரது போட்டோ அவர் ரசிகர்களை வெறிகொள்ளச் செய்தது. ஒரு தேர்தலையே வெற்றிகொள்ள வைத்தது.
ஆனால், எம்.ஜி.ஆரால் பழைய குரலில் பேசமுடியவில்லை. எதிர்தரப்பினரால் பெரும் கேலிக்குள்ளானார். இருந்தாலும் அவருக்கே உரிய தன்னம்பிக்கையுடன் கடைசிவரை சொந்தக் குரலில் பேசி நடித்தார்.
“ஊமையன்” என்று கேலி செய்த குரல்கள் தன்னை காயப்படுத்தியதாக அவர் என்றுமே காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அவரது மரணத்திற்கு பின் வெளியான உயிலில் தனது சொத்தில், ராமாவரத்தில் 6.5 ஏக்கர், வாய்ப்பேசா, காது கேளாத குழந்தைகளுக்கான பள்ளிக்கென்று எழுதி வைத்திருந்தார்.
கோடிகள் சம்பாதித்து, பாதியை தானமாக எழுதி, மீதியையும் தனது குடும்பத்துக்கு நிரந்தரமாக தராமல், அவர்கள் காலத்துக்குப் பின்னர் கட்சிக்கும் பொதுவுக்கும் வருமாறு உயிலெழுத ஒரு மனம் வேண்டும். அது மக்கள் திலகம் என்னும் மாபெரும் தலைவனுக்கு மட்டுமே உண்டான குணம்.
நன்றி: ஜான் அழகர் முகநூல் பதிவு