4-வது முறையாக முதல்வரானார் சந்திரபாபு நாயுடு!

நடிகர் பவன் கல்யாணுக்கு அமைச்சர் பதவி

ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, பாஜக மற்றும் நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 164 தொகுதிகளில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்றத் தலைவராக அதாவது முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி, ஆந்திர மாநில ஆளுநர் அப்துல் நசீரிடம் கூட்டணிக் கட்சியினர் கடிதம் வழங்கினர். சந்திரபாபு நாயுடுவை ஆட்சி அமைக்க ஆளுநர் அப்துல் நசீர் அழைப்பு விடுத்தார்.

இதையொட்டி பதவி ஏற்பு விழா இன்று காலை நடைபெற்றது. ஆந்திர மாநில முதலமைச்சராக 4-ம் முறையாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார். ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் அமைச்சரானார். மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் ஜனசேனா கட்சியில் இருந்து 3 பேரும், பாஜகவில் இருந்து ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

சந்திரபாபு நாயுடு தவிர்த்த 24 அமைச்சர்களில் 3 பேர் பெண்கள். புதிய முகங்கள் 17 பேருக்கு சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

மோடி – ரஜினி பங்கேற்பு

பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜேபி.நட்டா, நிதின் கட்கரி, ராம்மோகன், நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ராம்சரண் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்ய நாயுடு, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

– மு.மாடக்கண்ணு

You might also like