ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா‘ கூட்டணியும் பிரதானப் போட்டியாளர்களாக இருந்தனர்.
ஆட்சியமைக்க 272 எம்பிக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 99 இடங்களில் வாகை சூடியது.
எனினும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில், நாடாளுமன்ற குழுத் தலைவராக, அதாவது பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த அவர் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இதை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் முர்மு, ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று (ஜூன்-9) இரவு 7.15 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற்றது.
பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் முர்மு பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் 71 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இவர்களில் 30 பேர் கேபினட் அமைச்சர்கள், 5 பேர் தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள். 36 பேர் இணை அமைச்சர்கள் ஆவர்.
கேபினட் அமைச்சர்கள் விவரம்:
- ராஜ்நாத் சிங்
- அமித் ஷா
- நிதின் கட்கரி
- ஜே.பி.நட்டா
- சிவராஜ் சிங் சவுகான்
- நிர்மலா சீதாராமன்
- ஜெய்சங்கர்
- மனோகர் லால் கட்டார்
- எச்.டி.குமாரசாமி
- பியூஷ் கோயல்
- தர்மேந்திர பிரதான்
- ஜிதன்ராம் மாஞ்சி
- ராஜீவ் ரஞ்சன்
- சர்வானந்த சோனோவால்
- வீரேந்திர குமார்
- ராம்மோகன் நாயுடு
- பிரகலாத் ஜோஷி
- ஜோயல் ஓரம்
- கிரிராஜ் சிங்
- அஸ்வினி வைஷ்ணவ்
- ஜோதிர் ஆதித்ய சிந்தியா
- பூபேந்திர யாதவ்
- கஜேந்திர சிங் ஷெகாவத்
- அன்னபூர்ணா தேவி
- கிரண் ரிஜுஜு
- ஹர்தீப் சிங் புரி
- மன்சுக் மாண்டவியா
- கிஷன் ரெட்டி
- சிராக் பாஸ்வான்
- சி.ஆர்.பாட்டீல்.
இணை அமைச்சர் (தனி பொறுப்பு):
1. ராவ் இந்திரஜித் சிங்
- ஜிதேந்திர சிங்
- அர்ஜுன் ராம்மேக்வால்
- பிரதாப் ராவ் கண்பத்ராவ் ஜாதவ்
- ஜெயந்த் சவுத்ரி.
தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன், மலையாள நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்ட 36 பேர் இணை அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
புதிய அமைச்சரவையில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 11 பேர் இடம்பெற்றுள்ளனர்.
5 முன்னாள் முதலமைச்சர்கள்
மத்திய அமைச்சரவையில் 5 முன்னாள் முதலமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். சிவராஜ் சிங் சவுகான் (மத்திய பிரதேசம்), குமாரசாமி (கர்நாடகா), மனோகர் லால் கட்டார் (அரியானா), ஜிதன்ராம் மஞ்சி (பீகார்), சர்பானந்தா சோனோவால் (அசாம்) ஆகிய முன்னாள் முதலமைச்சர்களை மோடி, தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், எல்.முருகன் ஆகிய 3 பேர் மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.
மூவரும் கடந்த அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இணை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தான் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க இருப்பதால், அமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
கேரளாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்பே அமைச்சர் பதவியை வேண்டாம் என்று சொல்லியதாகவும் பாஜக தலைமை வற்புறுத்தியதால் அதை ஏற்றுக் கொண்டதாகவும் விளக்கமளித்துள்ளார். அமைச்சராகத் தொடர முடியாமல் போனாலும் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்சூர் தொகுதி மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.
– மு.மாடக்கண்ணு.