கடல் மீதான பெருங்காதல் எப்போதும் தீராது!

ஜூன் 8 – உலகப் பெருங்கடல்கள் தினம்

நாம் வாழும் இந்த பூமியில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட பரப்பை ஆக்கிரமிப்பது நீர்தான். அவை வற்றினாலும் பெருகினாலும் அபாயம்தான்.

ஆனால், அந்தப் பெருங்கடல்கள் மனிதர்கள் மீது கொண்டுள்ள காதல் தான், இன்றும் இந்த பூமியை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

முடிவிலா அளவீட்டுக்கு பிரபஞ்சம் எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுவதை போல, மனிதர்களால் அளவிட முடியாத பரப்புக்கு கடல் உதாரணம் ஆகிறது. ஆழ்கடலில் மனிதர்கள் பார்வை படாத இடங்கள் கணிசம். அவற்றை அறியும்போது ஆச்சரியம் நிச்சயம் பன்மடங்காகும்.

கடலும் கற்பனையும்!

மனிதர்களின் கற்பனையைக் தூண்டுவதிலும் கடலே முதலிடம் வகிக்கிறது. உலக இலக்கியங்கள் எல்லாவற்றிலும் கடல் ஒரு முக்கிய பேசுபொருள்.

மனமும் துள்ளும்போது மட்டுமல்ல துவளும் போதும் ஆறுதல் தருவதாக உள்ளது கடல்.

இன்றும் கடல் பார்க்காத பல மனிதர்கள் நம்முடன் வாழ்கின்றனர்; அவர்களைப் பொறுத்தவரை, அதனைக் காண்பதே பேரனுபவம் தான்.

உலகம் முழுக்க மக்களுக்கான பொழுதுபோக்கு தலங்களில் ஒன்றாக கடல்கள் விளங்குகின்றன. மனிதர்களின் தினசரி வாழ்வைத் தீர்மானிக்கும் காரணங்களில் ஒன்றாகவும் இருக்கின்றன.

கடல் எவ்வாறு இருக்கிறது?

இந்த பூமிப்பரப்பில் நுகரப்படும் ஆக்ஸிஜனில் பாதியை உருவாக்கித் தருவது பெருங்கடல்கள் தான். நிலப்பரப்பில் உள்வாங்கப்படும் கார்பன்-டை-ஆக்சைடு அளவை விட 50 மடங்கு பெருங்கடல் பகுதியில் கிரகிக்கப்படுகிறது.

பூமத்தியரேகை பகுதியில் இருக்கும் வெப்பமானது இரு துருவங்களுக்கு பரிமாற்றம் செய்யப்படுவதற்கும் இவையே காரணம். இன்றும் பெருங்கடல் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களே புவியின் வானிலையை பாதிக்கின்றன.

சரி, இந்த பெருங்கடல்களுக்கு நாம் எவ்வாறு மரியாதை செய்கிறோம்? கடல் மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் எதனை நாம் பாதுகாத்து வருகிறோம் என்ற கேள்வியே இந்த இடத்தில் பொருத்தமானதாக இருக்கும்.

சாதாரணமாக வீடுகளில் இருந்து தூக்கி எறியப்படும் குப்பைகள் முதல் மனித சமூகத்தையே வேரறுக்கக்கூடிய அணுக்கழிவுகள் வரை பலவும் கடற்பரப்பில் தான் கொட்டப்படுகின்றன.

மீன் வளத்தில் 90 சதவீதமும் பவளப்பாறைகள் போன்ற கடல் வளத்தில் 50 சதவீதமும் இதுவரை மனிதர்களால் சூறையாடப்பட்டிருக்கின்றன.

கடல் சார்ந்து இயங்கும் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 2030ல் சுமார் 4 கோடி பேர் இத்துறையில் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூமியின் நுரையீரல் போன்று கடல்கள் செயல்படுகின்றன; பூமியில் உணவு மற்றும் மருந்துகளுக்கான முக்கிய மூலமாகவும் இது விளங்குவதாகத் தெரிவித்துள்ளது ஐநா.

இப்படிப்பட்ட சிறப்பை கொண்ட பெருங்கடல்கள் மீது மனிதர்களின் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் தாக்கம் எத்தகையது என்பது குறித்தும், உலக மக்களுக்கு நீடித்த மேலாண்மை குறித்து அறிவுறுத்துவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ‘உலகப் பெருங்கடல்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது.

உலகப் பெருங்கடல்கள் தினம்!

கடல்களைக் கொண்டாடுவது குறித்த பார்வை 1992-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐநா மாநாட்டில் முன்வைக்கப்பட்டது.

கனடாவின் பெருங்கடல் மேம்பாட்டுக்கான சர்வதேச மையமும் கனடா பெருங்கடல் கல்வி நிறுவனமும் இதனை முன்மொழிந்தன.

இதன் தொடர்ச்சியாகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் விளைவாக 2008 முதல் ‘உலகப் பெருங்கடல்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது.

நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் பெருங்கடல் அறிவியலை இன்றைய நவீன சமூகத்தின் தேவைகளோடு பொருத்தும் வகையில் செயல்படச் செய்வது, 2021 – 2030 வரையிலான பத்தாண்டு காலத்திற்கான ஐநாவின் நீடித்த மேம்பாட்டுக்கான பெருங்கடல் அறிவியல் துறையின் நோக்கமாகும்.

அந்தவகையில், ‘பெருங்கடல்: வாழ்வு மற்றும் வாழ்வாதாரம்’ என்பது 2021-ம் ஆண்டு கொண்டாட்டத்தின் மையம்.

நாம் ஒவ்வொருவரும் கடல் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டாமல் தவிர்ப்பதும், இப்போது இருக்கும் கழிவுகளை முழுமையாக அகற்றுவதை லட்சியமாகக் கொள்வதும், இதுவரை கடலிடமிருந்து நாம் பெற்ற செல்வங்களுக்கு கைமாறு செய்ததாகும்.

– உதய் பாடகலிங்கம்

You might also like